Subscribe

BREAKING NEWS

29 April 2017

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்...

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம் மருதேரியில்  மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது, நமது TUT  நண்பர்கள், திருமதி,நளினி ராஜலிங்கம், திருமதி. பரிமளம், திருமதி. சாந்தாரோஹிணி, திரு, ராகேஷ் மற்றும் அவர்களுடன் நாமும் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. சிங்கபெருமாள்கோவிலில் இருந்து அனுமந்தபுரம் செல்லும் பாதையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்தபின் வருகிறது மருதேரி கூட்ரோடு. அங்கே நம்மை வரவேற்கின்றது சித்தர் குடில் செல்லும் வழிகாட்டிப்பலகை.


அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு பரந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த பிருகு மகரிஷி சித்தர் குடில். உள்ளே சென்றவுடன் ஓர் அன்பர் ஓடிவந்து அய்யா கொஞ்சம் நில்லுங்கள் என்றார். நமக்கு ஒரே ஆச்சர்யம்!! எல்லா இடங்களிலும் நம்மை வரவேற்பார்கள் ஆனால் இங்கே நில்லுங்கள் என்கிறார்களே!
என்னவாக இருக்கும் என்று  யோசிக்கும் முன்பே அவரே கூறினார். தாங்களின் பாதணிகளை இங்கே விட்டுவிட்டு அதோ அங்கே சென்று பாத பூஜை செய்து கொள்ளுங்கள் என்றார். அவ்வாறே நாமும் சென்றோம். அங்கே நம்மைவிட மூத்த வயதுடைய ஒருவர் அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி பாதபூஜை செய்து  கொண்டிருந்தார். அதுவும் சாதாரண நீர் அல்ல! அது மஞ்சள், ரோஜாப்பூ, துளசி கலந்த நீர். நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.



மேலும் அவரே தொடர்ந்தார். அய்யா இந்தபக்கமே சென்று கங்கையை பார்த்துவிட்டு பின் குடிலுக்கு செல்லுங்கள் என்றார். நாமும் அவ்வாறே சென்றோம். சரியாக குடிலின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது அந்த கிணறு. அதில் எட்டிப்பார்த்ததில் உண்மையில் கங்கையைப்போலவே மிக தெளிந்த குடிநீர் இருந்தது.



இந்தமாதிரி நீர் நமது சென்னையில் இயற்கையாகவே கிடைக்கிறதென்றால் அது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கும். அந்த கிணற்றின் மேலே கங்கைக்கு காவல் இருப்பது போல அமைந்துள்ளது நந்தி பகவான் தரிசனம். நந்திக்கு நேரேதிரே காமதேனுவை மிக நேர்த்தியாக அமைத்துள்ளார்கள். அவற்றை தரிசனம் செய்தபின் கடைசியாக குடிலின் வாயிற்படியினை அடைந்தோம். அங்கே அவர்கள் முதலில் கேட்டது நீங்கள்சாப்பீட்டீர்களா? அடடா!! என்னே ஒரு அன்பான வார்த்தை. இந்த வார்த்தையை நம் வாசகர்கள் பயன்படுத்திப்பாருங்கள். தெரிந்தவர் தெரியாதவர் என  பேதம் பார்க்காமல் இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நட்பு வட்டம் மிகப்பெரியதாகவே அமையும். விஷயத்துக்கு வருவோம்! பின்பு எங்களை பந்தியில் அமரவைத்து காலைச்சிற்றுண்டி தலை வாழை இலையில், இட்டிலி, உளுந்து வடை, பொங்கல், சாம்பார், சட்னி. அதற்கும் மேலே ஒரு காஃபி பரிமாறினார்கள். அது முடிந்தவுடன் பல மூலிகைகள் கலந்த நாட்டு மருந்து கொடுத்தார்கள்.



 அதனை உண்டபின்தான் அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் உள்ளே சென்றோம். அங்கே மிக அமைதியான சூழ்நிலையில் தரிசித்தோம். மகரிஷியின் திரு உருவப்படம் மற்றும் அவருடைய சிம்மாசனம், அது உங்களுக்காக.




காலை உணவிற்குப்பின் ஒவ்வொருவராக குடிலுக்கு வந்து சேர்ந்த பின் சித்தரின் பூஜை ஆரம்பமானது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சித்தர்களின் பெயர்கள், திரு. செல்வம் அய்யா அவர்கள் மெய்யுருகி வாசிக்க வந்திருந்த அன்பர்கள் பின்தொடர்ந்து பாட, அத்துனை சித்தர்களும் அகண்ட தீபத்தினுள் ஜோதியாக காண முடிந்தது. பார்க்கவே மெய்சிலிர்த்துப்போனோம். நண்பர் ராகேஷ் தன்னையே மறந்து அந்த குடிலே அதிரும்படி பாடிவிட்டார் என்றால் எல்லாம் மகரிஷியின் மகிமை எனலாம். ( நம்பிக்கையோடு பிரார்த்தித்தால் எல்லாம் நல்லதே நடக்கும் சார்...)

அதற்குப்பின் மணி மதியம் 1.30க்கு மீண்டும் உணவு இடைவேளை ஆனது. காலை சிற்றுண்டியே அப்படி என்றால், மதிய உணவை கேட்கவா வேண்டும்!! கல்யாண விருந்தைப்போலத்தான்... மொத்தத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் விருந்தாக அமைந்தது இந்த மறுதேரியின் அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்..