Subscribe

BREAKING NEWS

23 June 2017

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.


அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.
- மகாகவி பாரதியார்.








வேத மந்திரங்கள்,நீதி நூல்கள்,பாரதியாரின் பாடல்கள் முதலியன ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கொண்டது.இந்த நூல்களை கேட்பதும்,படிப்பதும்,மனனம் செய்வதும் பலன் தரும். இவை அனைத்தும் ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’ மூலம் ‘ஒளிமயமான எதிர்காலம்’ தரவல்லது.நாம் தினசரிப் பிராத்தனைக்காக கண்டிப்பாக ஒரு பாடலை இணைக்க வேண்டும் என்று தோன்றியது. அது சமயம் தேடலில் ஈடுபட்ட போது நமக்கு கிடைத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,பாரதியார்.









இவர்கள் மூவரும் சொல்லாத கருத்துக்களா ? நீதிகளா? நாம் தினமும் "வாயில்  தோறும் வள்ளுவம் "  தலைப்பில் தினம் ஒரு திருக்குறளை முக நூலில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.கீழ் உள்ள இணைப்பில் சென்றால் இதுவரை பதிவிட்டுள்ள குரல்களை காணலாம்.

நம் குழுவின் முகநூல் - http://facebook.com/thedalullathenikalaai/


 ஔவையார் கூறிய நீதிகளும் வேறொரு பதிவில் தொடர்வோம். மீதம் இருப்பது மீசைக் கவி பாரதி மட்டுமே.அவரின் துணியை போது கிடைத்த பாடல் தான் "எண்ணிய முடிதல் வேண்டும்" என்பது.இந்த பாடலை அனைவரும் தினசரி பிரார்த்தனையில் சேர்க்கவும்.மேற்கொண்டு அப்பாடலை பற்றி அடியேனுக்கு தெரிந்த சிறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம்.




எண்ணிய முடிதல் வேண்டும் என்ற கருத்தை ஒட்டிய குட்டிக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

இந்திரன், தேவலோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்;  எதற்கு வந்தான் என்று பார்க்கின்றீர்களா  கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

ஒரு காட்டின் வழியே சென்றான்,அப்போது தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி  பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.
ப்பூ ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)


தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

கதை ஒன்றைப் பார்த்தோம்.இனி சற்று அந்த பாடலின் வரிகளை அறிவோம்.




இந்தப் பாடல் ஒரு முக்கியமான பாடல். பாரதியாரின் தீர்க்கதரிசனத்தை உணர்த்தும் பாடல்.அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தில் என்ன  எண்ணி இருப்பார் ? சுதந்திரம் வேண்டும்  என்று தானே? அவர் எண்ணி கிடைக்காமல் போய் விடுமா? இதோ கிடைத்து விட்டது. ஆம்! சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம். இந்த ஒன்று போதாதா? "எண்ணிய முடிதல் வேண்டும் " என்ற பாடலின் உதாரணத்திற்கு,

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.மேலோட்டமாக  பாடலின் நுட்பம் நமக்கு தெரியாது.வேண்டும்...வேண்டும் ..என்று கேட்பதாக தோன்றும்.ஆனால் கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு வரியும் அடுத்த வரியுடன் தொடர்பு கொண்டவை.இந்த பாடல்  பூக்கள் அன்று.பூக்களால் தொடுக்கப் பட்ட பூச்சரம் இது.

நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய உயர் எது? என்று கேட்டால் என்ன சொல்வது? வள்ளுவர் தான் சொல்லிவிட்டாரே ! பின்பு மறு பேச்சு உண்டா?  குளத்தில் உள்ள தாமரைப் பூவின் உயரம் என்பது குளத்தின் நீரின் உயரம்.அது போல் நம்முடைய உயரம் நம் உள்ளத்தின் உயரம்.

உள்ளத்தில் இருந்து என்ன வெளிப்படுகிறது ? எண்ணங்கள் தான். எனவே நாம் எண்ணும் எண்ணங்கள் நடந்து முடிக்க வேண்டும் என்பது இங்கே முதல் வரிக்காக விளக்கம்.மனித வாழ்க்கையே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்ட கட்டடம் அன்றி வேறில்லை.

அப்படியே அடுத்த வரிக்கு செல்வோம். நல்லவே  எண்ணல் வேண்டும்; இரு வரிகளையும் பொருத்திப் பாருங்கள். நினைக்கின்ற அனைத்து  செயல்களும் நடக்க வேண்டும். பொதுவாக நினைப்பவை நடக்க வேண்டும் என்றால், நல்லதும் நினைக்கலாம்,தீமையும் நினைக்கலாம்.
அப்படி நல்லன நினைப்பது நமக்கும் நல்லது,பிறருக்கும் நல்லது.சில நேரங்களில் நல்லன நடக்காது போகலாம். ஆனால் நாம் தொடர்ந்து நல்லன எண்ணிக் கொண்டே இருத்தல் வேண்டும். எனவே தான் அடுத்த வரியாய் நல்லவே எண்ணல் வேண்டும் என்கின்றார்.

இப்போது "திண்ணிய நெஞ்சம் வேண்டும்" என்கின்றார். ஏன் நெஞ்சம் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். வெறும் நெஞ்சம்/உள்ளம் எப்படிப்பட்டது தெரியுமா? அது நல்லன,அல்லன என இரண்டையும் தரும். நாம் ஏற்கனவே சொல்லியது போல், நல்லவே எண்ண வேண்டும் என்றால் உறுதியான நெஞ்சம் அல்லவா வேண்டும். நாம் சில நல்ல விசயங்களை நினைக்கின்றோம்.அது நடக்காது போகின்றது.உடனே என்ன செய்கின்றோம் ? தீயன மெல்ல மெல்ல உள்ளே வருகின்றது ? ஏன் வருகின்றது ? உறுதியற்ற உள்ளமாய் உள்ளதால் தானே? உள்ளம் உறுதியானால் நல்லன வரும். எண்ணும் எண்ணம் யாவும் ஈடேறும் என்பது தெளிவல்லவா !

உள்ளம் உறுதியானால் போதுமா? அடுத்து வருகிறார்  "தெளிந்த நல்லறிவு வேண்டும்;" என்று. நாம் நினைக்கின்ற எண்ணங்களின் பிறப்பிடம் நமது உள்ளம். அந்த உள்ளம் உறுதியாய் இருக்க வேண்டும்.ஆயினும் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் நமக்கு நன்மையா ? தீமையா? என்பது நம் அறிவிற்கு தானே தெரியும். அந்த அறிவு நூற்களை கற்று வரலாம், தற்போது "Google Search" ல் வருகின்ற காலம். அனுபவத்தில் வரலாம். செய்யும் செயல்கள் வெற்றி பெறுவது நம்முடைய அறிவினால் தான்.இதை  உணர்ந்ததால் தான் வேதாத்திரி மகரிஷி அறிவிற்கு கோவிலாய் "அறிவுத் திருக்கோயில் " கட்டினார் என்பது தெளிவாய்ப் புரிகின்றது.கீழ்க்கண்ட கவியைப் படியுங்கள்.உண்மை புரியும்.

“அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்விறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதனை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.”



அடுத்த நான்கு வரிகள் தான் இந்தப் பாடலின் கருப்பொருளை நமக்கு உணர்த்துகின்றது.முதல் நான்கு வரிகளை மட்டும் எடுத்து  பொருள் கொண்டால் நமக்கு மேம்போக்காகத் தெரியும்.அடுத்த நான்கு வரியில் தான் பாடலின் உண்மைப் பொருளை வைத்துள்ளார்.



 இத்தனையும் இருந்தால்தான் நாம் நினைத்தது கைகூடும். சில சமயம் அவைகள் கூடாமலும் போகலாம். எண்ணியவை நல்லனவாகவே இருக்கலாம். தெளிந்த அறிவால் நம் நெஞ்சம் உறுதியாக இருக்கலாம் ஆனால் ஏதோ ஒன்று நாம் நினைப்பதை நடக்கவிடாமல் தடுக்கிறது. அது நாம் பண்ணிய பாவம்.

மனிதனாகப் பிறந்தாலே பாவங்கள் செய்யாமல் இருக்க முடியாது. மனித ஜன்மமே நாம் பாவங்கள் செய்ததால்தான் எடுக்கிறோம். வினைப் பதிவே பல தேகம் கண்டாய் ...பாவங்கள் கூடலாம் இல்லை குறையலாம், ஆனால் பாவங்கள் செய்யாமல் உலக உயிர்கள் ஜனிப்பதில்லை. ஆசையால் பாவமும் பாவத்தால் பிறப்பும் மனித வாழ்க்கையில் சுழலும் வட்டங்கள். அதற்காக பாவ விமோசனமே இல்லை என்று சொல்லமுடியாது.

சூரியன் முன் பனித்துளி எவ்வாறு ஆவியாகிவிடுகிறதோ அதேபோல் இறைவன் எனும் மகா சூரியன் முன் நின்று கண்ணீர் விட்டு கதறும்போது நாம் செய்த பாவங்கள் தொலைந்துவிடுகின்றன என்கிறான் பாரதி.எனவே நாம்  பாவங்கள் அழிய ...இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுவோம். ஏன் கதறி அழ வேண்டும்.யோசித்துப் பாருங்கள்.இந்த ஒரு நாளில் நாம் எவ்வளவு பாவம் செய்திருப்போம் என்று. ஒரு நாள்  கணக்கே சொல்லி மாளாது எனில் இந்தப் பிறவியில் பிறந்த நாள் முதல் இன்று வரை ? அப்பப்பா அழத் தோன்றுகின்றதா ?

அப்படி என்றால் இதற்கு முந்தைய பல பிறவிகள்.கதறி அழத் தோன்றுகின்றது தானே?

பதிவை ஒட்டியே இது நாள் வரை நாம் என்னென்ன பாவங்கள் செய்திருப்போம் என்று வள்ளலார் பட்டியலிடுகிறார்.ஒரு முறை அல்ல பல முறை படித்துத்தான் பாருங்களேன். உங்களுக்கே உண்மை புரியும்.


நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தேனோ !

வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ !

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தோனோ !

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ !

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ !

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ !

உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ !

களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ !

பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ !

ஆசை காட்டி மோசம் செய்தேனோ !

வரவு போக்கொழிய வழியடைத்தேனோ !

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !

பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ !

இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !

கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ !

காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ !

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !

கருப்ப மழித்துக் களித் திருந்தேனோ !

குருவை வணங்கக் கூசி நின்றேனோ !

குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ !

கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ !

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ !

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !

கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ !

ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ !

குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ !

வெயிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ !

பகை கொண்டு அயலோர் பயிர் அழித்தேனோ !

பொது மண்டபத்தைப் போயிடித் தேனோ !

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !

சிவனடியாரைச் சீறி வைதேனோ !

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ !

தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !

தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ !

இதில் எந்தப் பாவத்தையும் நாம்  இனிமேல் செய்யாமல் இருப்போம்! செய்த பாவத்திற்கு இறைவனிடம் வேண்டுவோம்.

ஆக, இறைவன் முன் நம் பாவங்கள் நீங்கிவிடும்போது, நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இல்லை.

 அன்பர்களே, இந்த மகத்துவம் மிக்க பாடலை தினமும் உங்கள் பிரார்த்தனையில் சேர்த்து வேண்டுங்கள்.கண்டிப்பாக ஒரு மாதத்திற்குள் மாற்றத்தை உணர்வீர்கள்.இந்த பாடல் சிறந்த சுயமுன்னேற்ற சிந்தனையை தூண்டும் பாடல்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்
 வேண்டும் அன்னாய்.


மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment