Subscribe

BREAKING NEWS

05 June 2017

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு


முருகனருள் முன்னிற்க இந்த பதிவில் முருகனைப் பற்றி காண்போம்.அழகனை இந்த வைகாசி மாதத்திற்குள் அழைப்போம்.பதிவின் இறுதியில் கூட்டு வழிபாடு பற்றிய அறிவிப்பு உள்ளது.அன்பர்கள் தவறாது தங்கள் இருப்பிடங்களில் வழிபாட்டை மேற்கொள்ளவும்.முருகனை பற்றியும்,முருகனின் அடியார் பற்றியும் தொடர்வோம்.


முருகா! என்ற சொல்லே   ஆயிர மாயிரம் அர்த்தங்கள் கூறும். பாற்கடலில் ஒரு சிறு துளியை எடுத்து காட்டுவது போல், முருகனை பற்றி அறிந்த செய்திகளை இங்கே பகிர்கின்றோம்.



முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே



கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே, வண்ண மயிலே




தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

தாய்மை வென்றது - பிள்ளை தவமும் வென்றது
வாய்மை வென்றது - பக்தி வலிமை வென்றது
நேர்மை வென்றது - முருக நீதி வென்றது
சுவாமி சக்தியால் - எங்கள் தருமம் வென்றது




அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா



பாடிப்பாடி அகமகிழ்ந்தேன் ஆறுமுகனே
தேடித்தேடிக் காத்திருந்தேன் கார்த்திகேயனே
கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே
கூடிக்கூடிப் பக்தர் போற்றும் சுப்ரமண்யனே


அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
அருமையாய் அந்தரங்கத்து இருக்கும் குகன்
கருவிழி வள்ளிமானுக்கு உகந்த குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!





ஆதாரம் நின்திருப் பாதாரம் - இந்த
அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?


ஆதிமூலன் மருகா முருகா
ஆறுமுகக் குமரா
பாதயாத்திரைக்குத் துணையாய்
பாதை காட்ட வா வா

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி



ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன் 


சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று

திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்





அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்





திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ? கூறுதற்கு இல்லாமல்
அற்புத தரிசனம், கற்பனை செய்தால் மட்டும்....





வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்


ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்!
காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க!


கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க!

வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா...........
வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா............


நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!




தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா

நினைத்தாலே உள்ளமும் கனியாதா - செந்தமிழ்
நிதியான பதியோடு மகிழ் வாய்த்ததா!
இணையற்ற வீரன் குமாரன் - திரு முருகன்
உனக்காகவே பிறந்த முருகன்!




மனக்கவலை மறக்க வைக்கும் வேலன் உறவு - நல்
மகிழ்ச்சி அங்கு இருக்க வைக்கும் கந்தன் உறவு
மணமலர் போல் இருக்கும் இன்ப உறவு
திரு-மால் மருகன் வேல் முருகன் அன்பின் உறவு!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!





 கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?






செந்திலங் கண்டிக் கதிர்வேலா
   தென்பரங் குன்றில் பெருமாளே!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்
அரோகரா!!

எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு!



எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!

வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!

ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்


கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!

சரவணபவ எனும் திருமந்திரம் - தனை
சதா ஜபி என் நாவே - ஓம்


பதிவின் தொடக்கத்தில் கூறியது போல், கருணைக் கடலாம் கந்தனின் புகழ் பாட
இந்த ஒரு பதிவு போதுமா? இல்லை இல்லை ஓராறுயிரம் பதிவுகளிலும் சொல்ல இயலாது என்பது தான் உண்மை ..சொல்ல சொல்ல குறையாதது.அள்ள அள்ள அளப்பரியது.

முருகன் என்றாலே அழகன் என்று அனைவருக்கும் தெரியும்."முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
இருப்பினும் நாம் மேலும் முருகப் பெருமானைப் பற்றி காண்போம்

1. கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவர்
2. சிவ பெருமானின் உகந்த மகன்
3. விநாயகரின் சகோதரர்
4. தேவர்களின் படைத் தலைவர்
5. வள்ளியின் மணாளர்
6. தேவசேனாவின் கணவர்
7. அசுரர்களை அழித்தவர்
8. மலை வாழ் கடவுள்
9. சிவபெருமானுக்கு குருவானவர்
10. சங்கக் கடவுள்
11. அகத்தியரின் குருவானவர்
12. பந்தங்களை துறந்தவர்
13. அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
14. அழகும்,இளமையும் நிறைந்தவர்
15. பக்கதர்களுக்கும்,பகைவர்களுக்கு நன்மை செய்பவர்
16. ஒற்றுமையை நிலை நாட்டுபவர்
17. ஞானக் கடவுள்
18. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக் காட்டுபவர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


வேறு பெயர்கள்

    சேயோன்
    அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
    ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
    முருகன் - அழகுடையவன்.
    குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
    குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
    காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
    சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
    சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
    வேலன் - வேலினை ஏந்தியவன்.
    சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
    கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
    கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
    சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
    தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
    வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
    சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
    மயில்வாகனன்
    ஆறுபடை வீடுடையோன்
    வள்ளற்பெருமான்
    சோமாஸ்கந்தன்
    முத்தையன்
    சேந்தன்
    விசாகன்
    சுரேஷன்
    செவ்வேள்
    கடம்பன்
    சிவகுமரன் - சிவனுடைய மகன்.
    வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
    ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
    கந்தசாமி
    செந்தில்நாதன்

போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

முருகன் குறித்த பழமொழிகள்

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

கூட்டுப் பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு 

இறை அடியார்களே,அகத்திய பெருமானின் ஜீவ வாக்கிற்கிணங்க, நாம் அனைவரும் 1008 முறை முருகனின் நாமம் உச்சரித்து பூஜை செய்ய உள்ளோம்.இந்த நிகழ்வானது வைகாசி மாதத்தில் நடை பெற உள்ளது. உலக நன்மை,உலக அமைதி வேண்டி நடக்க உள்ள இந்த முருக வேள்வியில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் வருகின்ற ஞாயிறு(11 ஜூன் 2017) அன்று அவரவர் வீட்டிலேயே இந்த வேள்வியில் இணையவும்.தினசரி பூஜை முடித்து விட்டு, சரியாக 9:30 மணி அளவில் "ஓம் சரவண பவ" எனும் மஹா மந்திரத்தை 1008 முறை சொல்ல ஆரம்பிக்கவும்.
பூஜைக்கு முன்பு விநாயகர் துதி, சிவன் துதி, அம்பாள் போற்றி தேவாரம் போன்ற அருட்பாக்களை பாடவும்.சித்தர்கள் போற்றி தொகுப்பின் நிறைவில் மந்திர வேள்வியை ஆரம்பிக்கவும்.

As per Agathiyar Appa's vaaku through Jeeva naadi reading, we are going to chant 1008 Murugan Perumaan naamam on this auspicious Vaigasi month. Kindly join us to make it more powerful.

(Organised by Thondu Seivom with the help of Pamban swamigal devotees.)


Details as below👇:

Venue: Sri Mayuranathar Sri Pamban Swamigal Temple, Dengkil
Date: 11 June 2017 (Sunday)
Time: 8am
ETE: 11am



இனிவரும் பதிவுகளில் முருக புராணம்,முருக வழிபாடு,முருக அடியார்கள்,அறுபடை வீடுகள் என தொடர்வோம்.

                                             சரணம் சரணம் சண்முகா சரணம்!

- முருகன் அருள் முன்னிற் கட்டும்.

No comments:

Post a Comment