Subscribe

BREAKING NEWS

16 July 2017

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள்

மருதேரி 

சிங்கப்பெருமாள் கோவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அழகிய கிராமம்.பச்சைப் பசேலென பச்சை வண்ண சேலை அணிந்து உள்ளாள் மருதேரி எனும் அழகிய நங்கை.இவளைப் பெண்ணோடு ஒப்பிடுவது தவறொன்றும் இல்லை. அவள் அளிக்கும் சக்திக்கு அளவேது ? இத்தகு சீரும் சிறப்பும் கொண்ட மருதேரியில் பிருகு முனியின் வாசம் முழுதும் வீசுகின்றது.

பிருகு முனிவர் அருட் குடில் இங்கே தான் உள்ளது.ஒவ்வொரு முறை சென்று வரும் போதும்,பிருகு முனிவரின் அருள் வெளிப்பாடு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எப்போ அழைப்பீரோ? என்று மனம் ஏங்கும்.சென்ற பூஜையில் பாம்பாட்டி சித்தர் அருள் பாலித்தார்.அவரது அருள் கிடைத்த பின்பு, வெள்ளியங்கிரி யாத்திரை முடிவானது. அங்கே பாம்பாட்டி சித்தர் குகையில் மருதேரியில் கிடைத்த சித்தர் மந்திரம் உச்சாடனம் செய்தோம்.காரணங்கள் இன்றி காரியம் இல்லை என்பது அப்போது தான் புரிந்தது.

அதுபோல் இன்றைய பதிவில் ஸ்ரீ பதஞ்சலி ஆசி பற்றிய அனுபத்தை காண்போம்.



ஏவிளம்பி வருட ஆனி மாத ரோகினி நட்சத்திர நாளில் (22/06/2017) வியாழக்கிழமை அன்று பாம்புறு கொண்ட மாமுனிவர் பதஞ்சலியும் அவர் பரிவாரங்களும் எழந்தருள உள்ளனர் வாசி யோகத்திற்க்கு உரிய குருவை மருதேரி சித்தர் குடிலில் தரிசித்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாதத்திற்க்குறிய முக்கூட்டு ஔஷதமும் சத்துவமான உணவும் அருட்பிரசாதமாய் வழங்கப்படும்.

என்ற செய்தி குரு முகமாய் கிடைத்தது.பதஞ்சலி பற்றி தேடினோம். நமக்குத் தெரிந்த வரையில்
யோக சாஸ்திரத்திற்கு மூலமே இவர் தான் என்று தெரிந்தது.சற்று ஆழ்ந்த தேடலுக்குப் பிறகு கிடைத்த செய்திகளை இங்கே பகிர்கின்றோம்.





ஸ்ரீ ராமர் என்று சொன்னவுடன் அவரது இணை பிரியாத பக்த சிரோண்மணி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியினை நினைப்பது போல,ஸ்ரீ நடராஜப் பெருமானை நினைக்கும்போது இருவரின் நினைவு வரும். ஸ்ரீ நடராஜரின் பிம்பமானாலும் சரி, ஓவியம் ஆனாலும் சரி அவர் அருகே இந்த இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள். 


பாம்பும் புலியும் இருபக்கம் என்று இந்த இவர்களைப் பற்றி பல சாஸ்திரங்கள் , புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு பாதி உடல் புலியாகவும்.அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும்.பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார். இந்த இருவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி என்றும்,வியாக்ர பாதர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.





இந்த இருவரும் நடராஜப் பெருமானின் நடனத்தில் எப்போதும் தங்கள் கண்களையும்,இதயத்தையும் நிலை நிறுத்தி,சதா இறை சிந்தனையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தொழுத வண்ணம் நின்றிப்பார்கள்.ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரம் என்று வரலாற்றில் உண்டு.பிரளயம் ஏற்பட்டபோது,இந்த உலகம் அழிந்த பின்பு,மிச்சமாய் இருந்தவர் ஆதிசேஷன் என்கிற நாமம் மட்டுமே.

திருப்பாற் கடலில்,ஸ்ரீமன் நாராயணனுக்கு படுக்கையாக இருப்பவர்.அனந்தன் என்றால் பாம்பு என்று பொருள்.நாராயணன் மேல் படுத்து இருப்பதால் அனந்த சயனன் என்று புராணங்கள் சொல்கின்றது.



ராமாவதாரத்தில்.ஸ்ரீ ராமருக்கு தம்பியாக,கிருஷ்ணாவதாரத்தில் அண்ணன் பலராமராகவும் அவதாரம் செய்தவர் ஆதிசேஷராகிய பதஞ்சலி மகரிஷியே ஆவார்.

  இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.

தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.

இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.

“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.

“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.

“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.

“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.

முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.

“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.

படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு

நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே!




போகர் பெருமான் போற்றிய சத்குரு பதஞ்சலி மாமகரிஷி

ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியதோர் காளாங்கி பாதம் கனவருடவியாக்கிரமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே.

  -போகரின் சப்த காண்டம் – 7000

அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை தத்திதன் சோததரை சித்திதன் நாதகரை தித்தித்தன் அஞ்சலரை பத்தித்து வந்தவரை புத்தகத்தைப் போற்றிடவே எத்தித்தும் ஏந்தலாமே......பதஞ்சலி மகரிஷியே நமக



இது ஒரு யோகத்தின் குறிப்பு .பிறப்பின் ரகசியம்.இரண்யகர்ப்பர்






 அன்று காலை 9 :30 மணி அளவில் பிருகு அருட் குடிலை அடைந்தோம். வழக்கம் போல், பைரவர்
 தரிசனம்,பாத பூஜை, நந்தி,காம தேனு தரிசனம்,அஷ்ட லக்ஷிமி தரிசனம் முடித்து,காலை உணவு
சாப்பிட சென்றோம். வழக்கம் போல் பொங்கல் இல்லாமல்,இந்த முறை பருப்பு உருண்டை,வடை கொடுத்தார்கள். தேங்காய் சட்னியுடன் இணைத்து உண்டது அமிர்தமாய் இருந்தது. உடலின் மேல் அக்கறை இருந்தால் தான்,உயிரை செழுமைப் படுத்த முடியும்.அதனால் தான் இங்கே தரப்படும் அன்னம், வெகு சிறப்பாய் இருக்கும். ஒரு சித்தரின் பாடல் நினைவிற்கு வருகின்றது ..உடலை வளர்த்தேன்.உயிர் வளர்த்தேனே ..இது தான் இங்கே தாரக மந்திரம்.

உணவு முடித்து சுமார் 10:30 மணி அளவில், பிருகு முனிவரின் தரிசனம் முடித்தோம். அகண்ட ஜோதி ஏற்றப்பட்டது.பின்பு பதஞ்சலியின் ஆசிகளை வரவேற்றோம்.பின்பு திரு.ராதாகிருஷ்னன் ஐயா அவர்கள் பதஞ்சலி முனிவர் பற்றி பற்பல கருத்துக்கள் எடுத்துரைத்தார்.ஒவ்வொரு உயிரின் ஆசனம் அதாவது உடல் அசைவு நிலையானது,பதஞ்சலியின் மூலம் வெளிப்படுகின்றது என்ற தகவல் நம் மெய் சிலிர்க்க வைத்தது.

பிருகு முனிவருடன் பதஞ்சலியின் வருகை தங்களுக்காக.












பின்பு சித்தர் பாடல்களுடன் மலர் தூவி,செல்வம் ஐயா வழி நடத்தினார். ஐயாவின் தமிழில்,பாடல்களின் சொற் சுவை,பொருட் சுவை,பாடும் விதம் அப்படியே உள்ளதை உருகியது.
உள்ளதைத்   தான் சொல்கின்றோம்.இங்கே எதையும் மிகைப் படுத்தவில்லை.குருவின் அருள் பெற,ஒரு முறை மருதேரிக்கு  வந்து பாருங்கள்.அப்போது தான் நமக்கு குருவின் அருள் பற்றி விளங்கும். இங்கே ஆசி கொடுக்கும் சித்தர் பெருமக்கள், நாம் கேட்பதை கொடுக்க மாட்டார்கள். நமக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுக்கின்றார்கள்.இதுவே குருவின் வழி காட்டல்.

அடுத்ததாக, பதஞ்சலியின் ஆசி பெற, வஜ்ராசனத்தில் அமர்ந்து, ஸோ -ஹம் என்ற உச்சரிப்பில் மூச்சின் செயல்பாடு கவனிக்கப் பட்டது. "ஓம் " என்றஓம்காரத் தியானம் அகர,உகர,மகர உச்சரிப்பில் நிகழ்ந்தது.அப்படியே அந்த இடம் தெய்வீக அலைகள் பொருந்தி காணப்பட்டது.

குருவின் உத்தரவின் பேரில் பதஞ்சலியின் குரு காயத்ரி மந்திரம் ஓதினோம்.

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்



காட்சிப் படங்கள் சரியாக எடுக்கவில்லை.ஏனெனில் யோகத்தில் சற்று ஆழ்ந்து விட்டோம் என்றே சொல்ல வேண்டும். இனிவரும் பதிவுகளில் இந்த குறையை சரி செய்ய முயற்சிக்கின்றோம்.பதஞ்சலி முனிவர் யோகத்தோடு தொடர்பு உடையவர் ஆதலால் சற்று ஆழ்ந்த மூச்சு பயிற்சி,ஆசன நிலை என்று உடலின் நிலை பற்றி உணர திரு.செல்வம் ஐயா அவர்கள் சிரமேற்கொண்டார்கள் என்பது கண்கூடு.

வேதாந்த ரகசியம் என்ற நூலின் பகுதியில் குரு மகத்துவம் பற்றிய செய்திகள் மீண்டும்  மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.இதிலிருந்து ஒன்று தெள்ளத் தெளிவாக புரிந்தது .ஆம் ! பிறவி குறைகளை தீர்க்க வல்ல சித்த விஞ்ஞானம் மட்டுமே.ஒரு சித்தர் பூசை மிக பெரிய வேள்விக்கு சமமானது. ஆக  ஆன்ம தெளிவுக்கான சித்தர்களை பேதமற வணங்கி போற்றுவோம்.முடிவற்ற காலசக்கரத்தில் குரு என்ற பற்றுகோடே முக்தி என்ற முடிவை அளிக்கவல்லது. இவையெல்லாம் உணர வைத்தது ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள்.




மேலே நீங்கள் காண்பது ஸ்ரீ பதஞ்சலி மகானின் மந்திரம்.இத்தனையும் உச்சரித்துக் கொண்டே இருந்தோம்.இந்த சித்தர் பூஜை தொடங்கும் முன்பு,இம்முறை லேகியம் கொடுக்கப்பட்டது. வாத நாராயணன்,கரிசாலை,இன்னும் சில மருந்துகள் இணைத்து முக்கூட்டு மருந்தாய் கொடுக்கப்பட்டது. நாம் வாழும் அவசர கதியில், இது போன்ற மருந்துகளை நமக்கு யார் உரைப்பர்? நம் மீது கருணை கொண்ட சித்தர் பெருமக்களே உரைப்பார்கள்.நம் மீது கருணை கொண்ட பிருகு முனிவர் நமக்கு தருகின்றார்.வாருங்கள்.அருள் மழையில் நனைந்து, உடலை வளப்படுத்தி, ஆத்ம கமலத்தை மலர செய்யுங்கள்.



பூஜையின் முடிவில், மத்திய உணவு தயார் செய்த காட்சிகள் தங்களுக்காக 





சுடச் சுட மதிய உணவருந்தினோம். அவளோ அற்புதம். பூஜையில் மனம்,மொழி,மெய் இன்பம் பெற்றது. மதிய உணவிற்கு பின்பு உடலும் சுகப் பட்டது.மொத்தத்தில் அன்றைய நாள்,நாம் பூலோகத்தில் தான் இருந்தோமா ? என்ற கேள்வி ஒன்றை எழுப்பியது. சித்தாலோகத்தில், நறுமண தேசத்தில், பசுமை சோலையில்,பிருகு முனிவரின் பாதத்தில் ..அப்பப்பா ..சொல்ல வார்த்தைகள் இல்லை.





ஓம் ஐம் கிளிம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி முனிவரே நம !

ஓம் ஐம் கிளிம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி முனிவரே நம !!

ஓம் ஐம் கிளிம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி முனிவரே நம !!!

முந்தைய பதிவுகளுக்கு:-

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html


பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html


அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html




No comments:

Post a Comment