Subscribe

BREAKING NEWS

04 July 2017

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா?

பதிவின் தலைப்பே கேள்விக்குறியோடு உள்ளதா? ஆம் ! அவன் நடத்தும் திருவிளையாடல் அன்றோ! ஆடல் வல்லான். ஆடலரசன் அவனுக்கே வெளிச்சம். இதுவரை ஈசனை தேடி மலை ஏற ஆரம்பித்து நான்காவது மலையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடை பெற துவங்கின.

அது ஏன்? நம் தலைவர் மலைகளில் இருக்கின்றார்? வெள்ளியங்கிரி,சதுரகிரி,பருவதமலை, திரு அண்ணாமலை ,குமரக்கடவுள் குமரன் முழுதும் குன்று இருக்கும் இடங்கள்,சபரிமலை,திருப்பதி  என பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கின்றது.


மலைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவை என் கண்களுக்குக் கற்களாகத் தெரிவதில்லை. மலைகளை எழுந்து நிற்கும் இறை என்றே நினைத்துக் கொள்கிறேன்.

மலைகளின் உயரமே மனிதர்களுக்கு ஒரு செய்திதான். மலைகளில் ஏற வேண்டுமானால் குனிந்து நடக்க வேண்டும். நிமிர்ந்து கொண்டு மலை ஏற முடியாது.அடுத்த முறை மலை ஏறும் போது சற்று முயற்சித்துப் பாருங்கள்.

மலைகளில் இருந்து கீழே இறங்க நினைத்தால், நிமிர்ந்து நடக்க வேண்டும். இறையை அடைய வேண்டுமானால், உள்ளத்தில் பணிவு முக்கியம் என்பதையும், ஆணவம் மிகுந்தால் தாழ்வு நிச்சயம் என்பதையும் மலைகளின் உயரங்கள் பறைசாற்றுகின்றன.

மலை ஏறி இறங்கி தரிசனம் செய்யும் போது,நம்மிடம் முதலில் பணிவு பிறந்து, நம்மிடம் உள்ள தாழ்வு நீங்கும். ஒன்று நீங்கினால் தானே,மற்றொன்று நம்மிடம் வரும்.பக்திக்கு தேவை பணிவு.அந்த பணிவை தான் மலை ஏற்றம் தருகின்றது.

புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மலைகளுக்கு அவை கூடுதலாகவே உண்டு. மலைகள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வல்லவை.இப்போது நாம் காணும் திரு அண்ணாமலை வேறொரு விதமாய் இருந்திருக்கும்.அந்த மலையில் நடந்து பார்க்கும் போது தான்,இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்க காத்திருப்பது நமக்கு புரியும்.

 மலைகள் பேராற்றலின் சேமிப்புக் கிடங்குகள். மலைகள், அன்னையின் மடிகள்; இறையாற்றலைத் தேடும் உயிர்களையெல்லாம் அவை அரவணைக்கின்றன. 

அதனால் தான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஏறினாலும்,மீண்டும்,மீண்டும் ஈர்க்கின்றது.

தமிழ்நாட்டின் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை, பழநிமலை, மருதமலையில் தொடங்கி, உத்தராகண்டின் இமயமலையில் உறைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் வரைக்கும் மலைக் கோயில்கள் மகத்துவம் மிக்கவையாக இருப்பதன் பின்னால், மலைகளின் ஈர்ப்பு விசையும் வெளிப்படுத்தும் விசையும் இருக்கின்றன.

தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலரும் இறையோடு உரையாட மலைகளையே தேர்ந்தெடுத்தனர். அகத்தியர் பொதிகை மலையிலும், பாம்பாட்டிச் சித்தர் மருதமலையிலும், போகர் பழநிமலையிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், ராமதேவர் அழகர்மலையிலும், குதம்பைச் சித்தர் திருக்கழுக்குன்றத்திலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும் தவமியற்றியவர்கள் ஆவர். மலைகள், நிலமகளின் மார்புகள்; இறைத்தாகம் கொண்ட உயிர்களுக்கெல்லாம் அவை ஆற்றல் நிறைந்த அமுதத்தை ஊட்டும் என்பதை சித்தர்கள் நன்கறிந்தவர்கள்.

இப்போது வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நாம் நான்காம் மலையில் உள்ளோம். இங்கே இறங்கி வீட்டா தீர்மானித்தோம்.ஆனால் அவர்  அருளாலே அவர்  தாள் வணங்கி நான்காம் மலையில் தங்கி விட்டு அடுத்த நாள் யாத்திரை தொடர முடிவு செய்தோம்.

நான்காம் மலை சரியான உயரம், சாரல் மழை, நடுங்க வைக்கும் குளிர்,ஷர் ..ஷர் ..என்ற காதைக் கிழிக்கும் காற்று என சூழல் நிலவியது.சற்று மழை ஓய்ந்த பின்பு,அங்கே ஒரு கூடாரம் தென்பட்டது.மாலை சுமார் 4 மணி அளவில் கூடாரம் சென்றோம். அங்கே இரு அறைகள். சற்று நேரம் ஓய்வெடுத்தோம். அந்த அடாத மழையிலும் சிலர் ஈசனை தரிசிக்க சென்று கொண்டு இருந்தனர்.

எங்களிடம் சில பாத்திரங்கள் இருந்தது.அதில் சுக்கு காபி போட்டு சாப்பிட்டோம்.உங்களுக்கும் வேண்டுமா?இதோ பருகுங்கள.


சிக்கி முக்கி கல்லெடுத்து உரசி வரும் தீப்பொறியில் என்று படித்த வரிகள் நினைவுக்கு வந்தது.
அங்கிருந்த கற்களில் ,தீப் பற்ற வைத்து,தணலை உருவாக்கி,அப்படியே சுக்கு காபி தாயாரானது.அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் அவ்ளோ குளிர். பின்பு உடன் வந்த உறவுகளிடம் பேசிக் கொண்டே இருந்தோம். சுமார் 5 மணி ஆனது.நேரம் ஆக,ஆக குளிர் கடுமையாய் இருந்தது.

சரி இரவு உணவு பற்றி யோசிக்க முடியாது.ஏற்கனவே கையில் இருந்த மற்றொரு உணவு பொட்டலத்தை பிரித்து உன்ன ஆரம்பித்தோம். எலுமிச்சை சாதம் , குளிரில் சொல்லவா ? வேண்டும்.களைப்பின் மிகுதியில் உண்ட உணவு,தேவாமிர்தமே. சாப்பிட்டு விட்டு,வெளியே சென்று கையைக் கூட கழுவ முடியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை.நீங்களே பாருங்கள்.



                                                                 (தங்கி இருந்த கூடாரம் )


கூடாரத்தை ஒட்டிய நடைபாதை -இது தானுங்கோ நாலாவது மலை.


(கூடாரத்தின் வெளியே )


நேரம் செல்ல செல்ல முடியவில்லை. கையில் இருக்கும் அளவு தீ மூட்டிவிட்டு,பின்பு 6:30 மணி அளவில் தூங்க ஆரம்பித்தோம். அடிக்கின்ற மழையில் என்ன செய்வது? காற்றின் சப்தம் வேறு காதை கிழித்து கொண்டிருந்தது.குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டேன். கெண்டைக்கால் அப்படியே இழுக்க ஆரம்பித்தது.உடனே எழுந்து கை,கால்களை உதறி,நீவி விட்டு மீண்டும் உறங்க சென்றேன்..பின்பு தலைவரை மனத்தில் இருத்தி, அப்படியே தூங்கினோம். 

அந்த வழியே வருவோர்,போவார் எல்லாம் இரவின் பொழுதுகளில், இங்கே தூங்க இடம் கிடைக்குமா? என விசாரித்தும், தேநீர் கடை என்று நினைத்து டீ,காபி கிடைக்குமா என்று எழுப்பி விட்டு கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பக்கத்தில் தான் இருக்கு என்று கூறி மீண்டும் தூங்க செல்ல வேண்டி இருந்தது.

அதில் சிலரிடம் உள்ளே இடமில்லை ஐயா,வெளியே வேண்டுமானால் தங்கி கொள்ளுங்கள் என்றோம்.சிலர் அப்படியே வெளியே தங்கிவிட்டனர்.எப்போது விடியும் என்று காத்திருப்பு வேறு.இங்கே சூரியன் வந்த பின்பும் உறக்கம். ஆனால் அங்கே அப்படி இல்லை.சொல்ல மறந்துட்டேன்.இந்த நான்காம் மலை அநாகதம் சக்கரத்தோடு தொடர்பு உடையது.இம்மலையை ஒட்டன்சமாதிமலை அல்லது திருநீர்மலை என்பார்கள். இங்கு கோரை புல்கள் அதிகம் உள்ளது.
இம்மலையின் பாதைகள் வெண்மையான மணல்கள் நிறைந்து காண படுவதால் திருநீர்மலை என்பார்கள்.இங்கு வாடாத சீறமஞ்சள் மற்றும் வசுவாசி என்ற மதுரகளி பாக்கு விளைகிறது.

காலை விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால் எங்களை மாதிரியே ஒரு 7,8 பேர் ஒரு போர்வையில் வெளியே இருந்தனர்.பின்பு அவர்கள் சென்று விட்டனர். நாங்கள் பல் துலக்கி விட்டு மலை என்ற தயார் ஆனோம். சிலர் சாப்பிட்டு விட்டு செல்லலாம் சென்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சாப்பாடு வேண்டாம் என்று முடிவு செய்து, யாத்திரையை தொடர்ந்தோம்.




சற்று நேரத்தில் 5 மலை ஆரம்பித்து விட்டது.இம்மலையை பீமன் உருண்டை மலை என்பார்கள். ஒரு பெரிய பாறை களி உருண்டை போல் உள்ளதால் இப்பெயர் வந்திருக்கிறது. இங்கு சீதை வனம் உள்ளது. இதில் சீதை சிலை ஒன்று உள்ளது என்று சொன்னார்கள்.



ஐந்தாம் மலை ஆரம்பம் 






இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம்.


பீமன் உருண்டை மலை 




இந்த மலையை ஒட்டிய பாதையில் அப்படியே சென்று கொண்டே இருந்தோம். இங்கே சற்று 4 முதல் 5 மலையில் ஏற்றம் மட்டுமே இருந்தது.மற்ற மலைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது,அவ்வளவு கடினமாக தெரியவில்லை. இதே போல் பாதை சென்று கொண்டே இருந்தது. ஆங்காங்கு தண்ணீர் தேங்கி இருந்தது.நல்ல மஞ்சு மூட்டம். மேகங்கள் கூட்டம் என அவ்ளோ இனிமை.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. விட்டு,விட்டு மழைச் சாரல் ..இந்த மலை விசுக்தி நிலையை ஒட்டியது.

சற்று நேரத்தில் ஆறாம் மலை அடைந்து விட்டோம்.5 பேர் சரியாக ஆறாம் மலையின் ஆரம்பம் வந்து விட்டோம்.எங்களுடைய வழிகாட்டி திரு.அருணானந்த சுவாமிகள் சூழ்நிலையை பார்த்தார்.இந்த மழைத் தூறலில் ஆறாம் மலை இறங்கி விட்டாலும்,ஏழாம் மலை ஏறுவது கடினம்.அங்கு பாறைகள் ஒட்டிய மணல் பாதை ..வழுக்கி வழுக்கி விடும்.எனவே கீழே இறங்கலாம் என்று சொல்லி விட்டார்.











பின்பு நாங்கள் அப்படியே கீழே இறங்க ஆரம்பித்தோம். அப்படி இறங்கி வரும் போது,எங்களோடு வந்த இருவர் பாதை மாறி, மேலே சென்று  பீமன் உருண்டை மலை நோக்கி ஏறி விட்டனர். இருவர் கீழே இறங்க ஆரம்பித்து விட்டனர். சுவாமிகள் மேலே ஏறி, அவர்களை கீழே வர சொல்லிக் கொண்டு இருந்தார்.அப்போது என்னுடன் இருந்த நண்பர் கார்த்தி,நாம் இருவரும் மேற்கொண்டு ஏழாம் மலை செல்வோமா? என்றார் 

எனக்கு சற்று பதட்டம் ஏற்பட்டது. இருந்த சூழ்நிலையில் ஏழாம் மலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.யாரவது தெரிந்தவர்கள் உடன் சென்றால் நல்லா இருக்கும் என்று தோன்றியது.உடனே சுவாமிகளிடம் கேட்டோம்.அவரும், உங்கள் இருவராலும் முடியம் என்றால் வழியில் வருவோரிடம் கேட்டு செல்லுங்கள் என்றார்.

சிவ பெருமானே ! இதற்காகவா இவ்ளோ தூரம் வந்தோம்.இன்னும் இரண்டு மலை ஏற அருள் புரிக என்று மனதுள் வேண்டி,நின்று கொண்டிருந்தோம்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு குழுவிடம் நாங்களும் உங்களோடு சேர்ந்து வருகின்றோம்.எங்களையும் தயை கூர்ந்து அழைத்து செல்லவும் என்றோம்.அவர்களும் சரி என்றனர்.மனதுக்கு நிம்மதியாய் இருந்தது. ஆனால் உள்ளுக்குள் சற்று கலக்கம் இருந்தது.இறையின் திருவிளையாடலை கண்டீர்களா? 7 பேர் செல்லலாம் என்று வந்தோம்.ஆனால் இப்போது இருவர் மட்டுமே 6 மலை சென்று கொண்டிருக்கின்றோம்.இதைத் தான் "காரணம் இன்றி காரியம் இல்லை " என்று சொல்வதா? யாம் ஒன்றும் அறியேன்? அனைத்தும் அவர் மட்டுமே அறிவார்?

- ஆறுமுகன் அருளோடு ஆறாம் மலை அடுத்த பதிவில் 






No comments:

Post a Comment