Subscribe

BREAKING NEWS

06 July 2017

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம்

இறை அன்பர்களே..

வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகு, பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில், குருவருளால் மற்றும் சித்தர் பெருமக்களின் அருளாலும்  TUT குழுமத்தின் சார்பாக உழவாரப் பணி  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த அனுபவத்தை இந்த பதிவில் தர முயற்சிக்கின்றோம்.

உழவாரம் பற்றி அறிந்து கொள்ள நாம் முதலில் சிவ புண்ணியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

  சைவ சமயக் குரவர் நால்வரும்,சந்தானக் குரவர் நால்வரும், திருமுறை அருளாளர்கள், மற்றும் 63 நாயன்மார்களும், 9 தொகையடியார்களும் வாழ்ந்து காட்டிய சைவ சமைய நெறிகளில் இருந்தும் மேலும் சைவ சித்தாந்த நெறிகளில் இருந்தும் சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.


1. சிவாலயம் முறையாக- வேத சிவாகம முறையில் கட்டுவது.

2. நாள்தோறும் சிவாலயம் சென்று பரம்பொருளை ( சிவபெருமானை) மூன்று வேளைகளிலும் வழிபடுவது.

3. சிவனடியார்களுக்கு அவர்கள் விருப்பம் அறிந்து திருவமுது ( அன்னம்பாளிப்பு) படைப்பது மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற நல்ல செயல்களை அனுதினமும் செய்ய வேண்டும்

4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி, நிலத்தை சமப்படுத்துவது மேலும் சிதலடைந்த திருக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வைப்பது, மேலும் வழிபாடு இல்லாத திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்ய வைப்பது மேலும் திருவிளக்கு ஏற்றி தினந்தோறும் சிவபெருமானை வழிபடுவது போன்ற நற்காரியங்களைச் செய்ய வைப்பது ,வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது மேலும் பரம்பொருளுக்கு மலர் மாலைகள் சாத்தி வழிபடுவது மேலும் பன்னிரு திருமுறைகள் பண்ணோடு பாராயணம் செய்வது அடியார் திருக்கூட்டத்துடன் கூட்டு வழிபாடு செய்வது மேலும் பெரியபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் 63 நாயன்மார்கள் தொண்டுகளை பொருள் உணர்வதும் அவர்கள் காட்டிய அன்பு போல் நாமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவேண்டும்.

5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், அடியார்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், பரம்பொருளுக்கும் ( சிவபெருமானுக்கும்) அவரை வணங்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ( அன்னம்பாளிப்பு) செய்வித்தல் போன்ற சிவ புண்ணியங்களைச் செய்வது போன்றது ஆகியவனவாகும்

மேற்சொன்ன செயல்களை நாம் செய்தால் நமக்கு சிவ புண்ணியம் கிட்டும் என்பது உறுதி.இவற்றுள் நாம் இருக்கின்ற சூழலில் உழவாரப் பணி செய்வதும், உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல் இவை இரண்டும் நம்மால் செய்ய இயலும். சிவாலயம் நம்மால் கட்ட முடியுமா? மூன்று வேளை தவறாது சிவ திருத்தலம் சென்று தொழ இயலுமா? ஹ்ம்ம்..முடியாது. ஏனெனில் நாம் கலியில் அல்லவா ? வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் குழுவாய் சென்று உழவாரம் செய்யலாம் அல்லவா? இது நம்மால் இயலும் காரியம்.

வாருங்கள் ! உளம் ஆற, உழவாரப் பணி செய்வோம்.

உழவாரப்  பணி ..உழவாரப்  பணி என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன என்று சுருக்கமாக கீழே காண்போம்.இது நமக்கு நல்ல புரிதலைக் கொடுக்கும்.

 ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி.


அவையாவன:

1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை, குப்பை கூடங்களில் போடுவது.

2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் திருநீறு போடுவதை சுத்தம் செய்வது.


3. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது.


4. சுவாயின் ஆடைகளை துவைப்பது.


5. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.


6. நந்தவனத்தை தூய்மைப்படுத்துவது.


7. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது.


8. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.


9. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.


10. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.


11. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.


12. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.


13. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.


14. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.


15. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..


என்று சொல்லிக் கொண்டே போகலாம்.இங்கே சிலவற்றை மட்டும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.


இப்பணிகளை தினந்தோறும் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.



உழவாரப் பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை என்பது அடியார்களின் அனுபவம். இப்போது உழவாரப் பணி என்பது பற்றி சற்று புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம்.


இனி பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்ற உழவாரப் பணி அனுபவத்தைக் காண இருக்கின்றோம்.

இது TUT குழுமத்தின் இரண்டாம் உழவாரப் பணி. எனவே உழவார பணி செய்வதற்கு தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டும்,மேலும் ஆசிரமத்தில் உள்ள வேலைகள் என்ன எனபது போன்ற தேவை இருந்தது.இதன் பொருட்டு சனிக்கிழமை அன்று ஆசிரமம் சென்று, ஆசிரமத்திற்கு தேவைப்படும் பொருள் பட்டியல் தயார் செய்து,அருகில் உள்ள கடைக்கு சென்று,பொருட்களை வாங்கி வந்து,ஆசிரமத்தில் ஒப்படைத்து விட்டோம்.


(துப்புரவு பொருட்கள் பட்டியல் )






இந்த முறை சற்று பதட்டமாகவே இருந்தது. ஏனெனில் ஓராண்டுக்கு அடுத்து, நடைபெற இருக்கும் பணி.எந்த ஒரு குறையுமின்றி நடைபெற வேண்டும். அந்த ஈசன் என்ன நினைக்கிறாரோ? மார்ச் மாதம் கழித்து, சற்று பற்பல முயற்சிக்கு பின்பு இந்த ஆசிரமத்தைகுரு தேர்வு செய்து,எம்மை வழி நடத்தினார் எனபதே உண்மை.

காலை சுமார் 9:00 மணி அளவில் ஆசிரமத்தை அடைந்தோம். இம்முறை என்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு சென்றேன். பின்பு சந்திரசேகரன் அண்ணன் சரியாக வந்து சேர்ந்தார்.அவரோடு அவருடைய நண்பர் வந்து இருந்தார்.நம் TUT குழுமத்தை கேள்விப்பட்டு முதன்முறையாக இந்த சேவைக்கு வந்திருந்தார்.

9:30 மணி அளவில் திருமதி.பரிமளம் வந்தார்கள்.சற்று நேரத்தில் கல்பாக்கத்தில் இருந்து திரு.வெங்கடேஷ் வந்தார்கள்.அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, மனதில் ஒரு பிரார்த்தனை செய்து விட்டு,சரியாக 9:30 மணி அளவில் பணியை ஆரம்பித்தோம்.நேரம் ஆக,ஆக நம்மால் பணியை நிறைவு செய்ய இயலாது.எனவே 9:30 மணிக்கு எங்களின் சேவையைத் தொடங்கினோம்.



ஆசிரமத்தில் இருந்த குப்பை,கூளங்களை கூட்டி அள்ளுவோம் என முடிவு செய்து, பணி ஆரம்பிக்கப் பட்டது. அனைவருக்கும் நால்வருக்கும் துடைப்பங்கள் கொடுக்கப்பட்டு, துப்புரவு பணியை ஆரம்பித்தார்கள்.







மேலே உள்ள படங்களைப் பாருங்கள்.உங்களுக்கே புரியும். இந்த குப்பைகளை அள்ளி ஓரிடத்தில் சேகரிக்கும் பணியை அடியேன் செய்தேன்.ஏனென்றால் எளிமையான பணி அது தானே! சுவாமிகளின் ஆசிரமம் முழுதும், ஏகப்பட்ட ஜீவ முக்தர்களை உள்ளடக்கியது.அப்படியே சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்த எண்ணினோம்.

ஒரு அரை மணி நேரம் பணியை முடித்திருப்போம்.பின்பு சரஸ்வதி மற்றும் அவர்களுடைய தோழி ஒருவரும் வந்தார்கள்.கழுவி தூய்மை செய்ய வேண்டிய விளக்கு,இன்ன பிற பொருட்களை சேகரித்து வெளியே வைத்தோம். இந்த பணிகளை கட்டாயம் மகளிர் அணியிடம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் இன்னும் ஒரு மூன்று பேராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் நினைத்தது.என்ன ஆச்சர்யம் ! அலைபேசியின் அழைப்பில் மகளிர் அணியின் ஒரு பிரிவினர் ( சசிகலா,மாலதி,சுபாஷினி ) வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள்.


மகளிர் அணியினர் வந்து சேர்ந்த பின் தான் உழவாரப் பணி களை கட்டத் தொடங்கியது.முதலில் அனைவரும் கூட்டி,துப்புரவை தான் செய்தோம்.ஆசிரமத்தில் இருந்து, கண்டிப்பாக தியான அறையை நன்கு சுத்தம் செய்து தரவும் என்று அன்பு கட்டளை இட்டிருந்தார்கள். நமக்கும் இது போல் சொன்னால் தான், சுறுசுறுப்பாக வேலையை செய்து,திருப்தியாய் நிறைவு செய்ய முடியும்.இந்த பணிக்கு ஆடவரை ஒதுக்கி விடுவோம் என்று தீர்மானித்தோம்.



சன்னதி பின்புறம் 




குப்பைகளை அள்ளுகிறார் 


இந்த இடத்தையும் சரி செய்ய வேண்டும்?





கூட்டிய குப்பைகளை அள்ளுதல் 


தீப மேடை

ஆசிரமம் முழுதும் கூட்டிக் கொண்டே தான் இருந்தோம்.ஏனெனில் மரங்கள் அதிகம் இருப்பதால் குப்பைகள் எளிதாக சேர்ந்து விடுகின்றது.

இங்கு உழவாரப் பணி அனுபவம் என்று சொல்லி இருக்கின்றோம். அனுபவம் எனபது நினைத்து பார்த்து மறக்க கூடியதல்ல. அது மறவாத நிலை. இப்படி அனைவரும் கூட்டி கொண்டே இருக்கின்றார்களே என்று நினைக்க தோன்றும். இங்கு சேர்ந்த அன்பர்கள் மனதில் எந்த குப்பையும் இல்லை. அப்படி இருந்தால் அந்த தேவையற்ற எண்ணக் குப்பைகளை அன்றோடு தீயிலிட்டு கொளுத்தி விட்டோம் என்பதே எங்கள் அனுபவம். சித்தர்களின் அருளால் இது நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.



இதோ பாருங்கள். அன்பர் ஒருவர் மண்வெட்டி பிடித்து,தேவையற்ற செடி,கொடிகளை வெட்டி,நீர் செல்வதற்கு வழி செய்து கொண்டிருக்கின்றார்.இப்படித்தான் பார்த்து,பார்த்து ஒவ்வொரு பணியையும் அழகாய்ச் செய்தார்கள்.ஏனெனில் அனைவரும் உழவார்ப் பணியின் அருமையை உணர்ந்தவர்கள்.அவர் அவர்களுக்கென்று பணியை பிரித்து கொடுத்து விட்டோம்.அவர் அவர்களே, அதனை கையில் எடுத்துக் கொண்டு,செய்து முடித்தார்கள் என்பது இங்கே நினைவு கூறத் தக்கது.














ஜீவ முக்தர்களை தரிசனம் செய்து கொள்ளுங்கள்.



இதுதான் சதானந்த சுவாமிகள் அமர்ந்து தவம் செய்த இடம். ஓம் தத் சத் குருப் பரப்ரம்மனே நம என்று உதடுகள் நம்மை அறியாது உச்சரிக்க தொடங்கிவிட்டது. தொண்டில் திளைத்திருப்பவர்களுக்கு தாகம் தணிய,நீர் கொடுக்கலாம் என்று நினைத்து, அப்படியே வந்தேன்.அங்கே,ஆசிரம குழந்தைகள் ஒருங்கே அமர்ந்து,குரு போற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும். நற் சொல்,செயல்,சிந்தனை கொண்டு வளர்த்தால் தான்,பிற் காலத்தில் அவர்கள் நம்மை மதிப்பார்கள்.இல்லையென்றால் ATM மெஷினில் பணம் எடுக்கும் கலையை வளர்த்துக் கொண்டு நம்மை மிதிப்பார்கள் என்பது நிதர்சனம்.

புதிய நண்பர் ஒருவர் வருகைக்காக காத்திருந்தேன்.பணிகளும் அப்படியே நடை பெற்றுக் கொண்டிருந்தன.அதை விட முக்கியம் எதிர்பாரா நிகழ்வுகளும்,இன்பமும் இந்த பணியில் நடந்தது.

நண்பரை அலைபேசியில் எங்கே இருக்கின்றார் என்று விசாரித்து, அவர் சற்று இடம் தெரியாமல் அலைந்து விட்டார்.நாம் உடனே சென்று அவரை அழைத்து வந்தோம்.ஒரு வருட நட்பின் துளிர்.அன்று தான் நேரில் சந்தித்தோம்.நலம் விசாரித்து விட்டு, ஆசிரமம் சென்றோம்.அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தோம்.

என்ன ஆச்சரியம் ! இந்த பணிக்கு திருப்பதி வெங்கடேசனின் அருள் எங்கள் அனைவருக்கும், புதிதாய் இணைந்த நண்பர் வினோத் மூலம் கிடைத்தது.கொஞ்சம் நேரம் திக்கு முக்காடிப் போய்விட்டோம்.வினோத்தை தியான அறை சுத்தம் செய்யும் பணியை செய்யசொன்னோம்.

மகளிர் அணியினர் அனைத்து பாத்திரங்கள்,விளக்கு போன்றவற்றை ஒருபுறம் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.ஆண்கள் அணியினர் தியான அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.இப்போது தான் எங்களின் பணி களை கட்டியது.துவைக்க வேண்டிய துணிகளையும் கேட்டு வாங்கி கொண்டோம்.



துலக்க வேண்டிய பாத்திரங்கள்





மகளிரின் கை வண்ணத்தில் பாத்திரங்கள் துலக்கப் படுகின்ற காட்சியை மேலே கண்டீர்களா? மேகொண்டு கீழே பாருங்கள் தியான அறையை சுத்தம் செய்யும் பணிகளின் காட்சிகளை.






இங்கே சுத்தம் செய்யப் படுவது அறைகள்,பொருட்கள் மட்டும் அல்ல.எங்களின் மன அழுக்குகளை சுத்தம் செய்தோம். மனதில் சுத்தம் இருந்தால் தான்,உழவார பணியில் ஈடுபட்டு இது போல் தொண்டில் திளைக்க முடியும்.

உழவாரப் பனியின் அனுபவம் சொல்லித் தெரிவதில்லை.அனைவரும் ஒரு சேர இணைந்து,நம்முடைய கவலை,துன்பம்,பிரச்சினை என அனைத்தையும் மறந்து, இந்த சேவை செய்யும் போது கிடைக்கின்ற இன்பம் இருக்கின்றதே! அது பேரின்பம்.! நாம் செய்த பணியின் அங்கீகாரம், அவனிடத்தில் இருந்து அல்லவா கிடைக்கின்றது.பணியின் நிறைவை நீங்களே பாருங்கள்.அப்போதுதான் உண்மை புரியும். இந்த பதிவானது சற்று நீண்டு கொண்டே செல்லும்.சற்று பொறுமையாக படித்து தங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்.






ஆசிரமத்தில் பயன்படுத்தும் வாளி முதற்கொண்டு விடவில்லை.ஏனெனில் இந்த மாதிரி சித்தர் கோவிலில் நமக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்.மாணிக்கவாசகர் சொன்னது போல், நாங்கள் இங்கே "சிக்கெனைப் பிடித்தோம் ". தியான அறையைப் பார்க்கலாமா?






யோசித்துப் பாருங்கள். எத்தனையோ கோவில்களில் நடைபெறும் உழவாரப் பணியே, நம்மை அந்த கோவில்கள் பற்றி அறிய முற்படுகின்றது. தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி,திரு அண்ணாமலையார் போன்ற கோவில்கள் பற்றி இப்போது நாம்,நம் குழந்தைகளுக்கு சொல்கின்றோம் என்றால், அந்த கோவில்களில் நடைபெற்ற இது போன்ற உழவாரப் பணி தான் காரணம். புகழ் பெற்ற கோவில்களுக்கே இந்த நிலை என்றால் மற்ற கோவில்களின் நிலை.வெறும் கேள்விக் குறி தான்? இப்போதாவது நாம் விழிக்க வேண்டும்.நம் முன்னோர்,நம் பாட்டன்,முப்பாட்டன் நமக்கு கட்டிய கோவில்களை அப்படியே விட்டு விடலாமா?நமக்கு தெரிந்த அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று நம்மால் முடிந்தவற்றை செய்யுங்கள்.கோவில் அர்ச்சகரிடம் பேசுங்கள்.கண்டிப்பாக அவர் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்.

உழவாரப் பணியை 12 பேரின் துணையோடு முடித்து விட்டோம். ஆனால் அங்கு ஏகப்பட்ட துப்புரவு பணிகள் காத்திருக்கின்றது. அடுத்து, சித்தர் தரிசனம் பெற அனுமதி வேண்டினோம். என்ன ஒரு தரிசனம். அன்பை பெருக்கிய தரிசனம், ஆற்றல் ஊட்டிய தரிசனம்,இன்பம் காட்டிய தரிசனம்,ஈதல் உணர்த்திய தரிசனம், உண்மைபொருள் தந்த தரிசனம், ஊக்கம் கொடுத்த தரிசனம், எண்ணத்தை சீர்படுத்திய தரிசனம், ஏற்றமிகு வாழ்வு தருகின்ற தரிசனம் என்று சொல்லலாம்.அனைவரும் தியானத்திலும் அமர்ந்தார்கள்.









மதியம் 12:30 மணி ஆகிவிட்டது.பசி வயிற்றை கிள்ளியது.கோவிலில் தீப ஆராதனை முடிந்ததும் அனைவரும் சற்று கருத்து பரிமாற்றம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.அதற்குள் எதிர்பாராதவிதமாக குருவின் அருளாலே அனைவர்க்கும் பிரசாதம் கொடுத்தார்கள். ஆசிரமத்தில் இருந்த பாண்டே அய்யாவை அழைத்து,சுவாமிகள் பற்றியும்,ஆசிரமம் பற்றியும் கூற கேட்டோம்.அவர் கையாலே அனைவரும் பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.









பாண்டே ஐயா பற்றி சொல்வதென்றால்  எனக்கு ஒரு மௌனமே தேவைப்படுகின்றது.அந்த மௌன நிலையில் கண்ணீர்த் துளிகள் துளிர்க்கின்றன. ஐயா அவர்களை உழவாரப் பணி செய்ய அனுமதி கேட்டு ஆசிரமம் சென்ற போதே,சந்தித்து ஆசி பெற்றோம். அன்பானவர்.பழகுவதற்கு இனியவர்.அடடா! ஐயாவிடம் ஒரு பாக்கி வைத்தது இப்போது தான் நினைவிற்கு வருகின்றது.அடுத்த சந்திப்பில் நேர் செய்து விடுவோம். ஐயாவின் திருக்கரங்களால் பிரசாதம் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஐயாவின் தொடர்பை இறை கொண்டு வந்து சேர்த்ததை நினைத்தால்,ஒன்றே ஒன்று தான் நினைவிற்கு வருகின்றது.அது 

                                                         காரணமின்றி காரியமில்லை 

ஐயா அவர்கள் சுவாமிகள் பற்றியும்,ஆசிரமம் பற்றியும் விளக்க ஆரம்பித்தார்கள்.பின்பு நம் குழு சார்பில் வந்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஒரு புத்தகம் கொடுத்தோம். "சிந்திப்போம்,சிந்திக்க வைப்போம்" என்ற ஆன்மிக கருத்துக்கள் அடங்கிய புத்தகம் பாண்டே ஐயாவின் கைகளாலேயே வழங்கப்பட்டது. இந்த புத்தகம் பற்றியே ஒரு தனிப் பதிவு எழுதலாம் போல் இருக்கின்றது.அவ்வளவு அற்புதக் கருத்துக்கள் அடங்கியது.












படங்கள் தெளிவில்லாது இருந்தால் மன்னிக்கவும்.அவசர கதியில் எடுத்தோம்.மதிய நேரம் நெருங்கி விட்டது.அதற்குள்ளாக ஆசிரமத்தில் 13 மாணவர்கள் இருப்பதாகவும், நாம் விரும்பினால் அவர்களின் படிப்பு மற்றும் உணவு தேவைகளுக்கு உதவி செய்ய கேட்டார்கள்.அனைவரிடமும் பேசி, ஒரு மாணவனின் கல்வி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ரூ 15000 / கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள்.நம்மால் ஒரே தடவை முழுதும் கொடுக்க இயலாது என்பதால். 3 தவணைகளில் கட்டலாம் என்று முடிவு செய்தோம். நல்ல உள்ளம் படைத்தவர்கள் கல்விக்காக உதவ நினைத்தால் தொடர்பு கொள்ளவும்.




தயை கூர்ந்து ..இந்தகுழந்தைக்கு உதவுங்களேன் 






பாண்டே ஐயாவின் அருளுரையை மெய் மறந்து காணும் காட்சிகளைக் கண்டீர்களா? அவ்ளோ அருமையாக பேசினார்.அந்த நேரத்தில் நம்மை இங்கே அறிமுகம் செய்த திரு.ஹரிமணிகண்டன் ஐயா வந்தார்கள்.அவரும், ஆசிரம பொறுப்பாளர் ஆனந்த் ஐயா அவர்களும் சேர்ந்து பேசிய போது,
கழுவிய பொருட்களின் அழகைக் கண்டு சொன்னார்கள்.மிக மிக அருமையான சிவ புண்ணியம் செய்து உள்ளீர்கள் என்றார். கேட்பதற்கு மகிழ்வாய் ..மனதிற்கு நிறைவாய் இருந்தது. 

பணி நிறைவில் அனைவரும் சேர்ந்து எடுத்த வண்ணப்படம் தங்களின் பார்வைக்காக.



சுமார் 1 மணி இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்த விவாதித்துக் கொண்டிருதோம். புதிய அன்பர்களின் உழவாரப் பணி அனுபவம் பற்றியும் கேட்டோம். மேலும் ஆசிரமத்திற்கு நம்மால் முடிந்த அளவு உதவலாம்(மாத மாதம் தேவைப்படும் சோப்பு,டூத் பேஸ்ட்,பிரஷ் போன்ற பொருட்கள்) என்று அனைவரும் சொன்னார்கள்.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் சந்திரசேகரன் அண்ணா அலுவலக பணியின் காரணமாக கிளம்பி விட்டார்.அப்போது தான் புரிந்தது,எந்த அளவிற்கு அவர் உழவாரப் பணி மேல் ஈடுபாடு கொண்டால்,இது போல் வந்து செய்ய முடியும். நாமாக இருந்தால் அடுத்த நிகழ்வில் பார்த்து கொள்ளலாம் என்று தானே நினைப்போம்.

ஆனால் வந்திருந்த அனைவரும் கண்டிப்பாக இந்த சேவையை மாதா மாதம் தொடர வேண்டும் என்றார்கள்.நமக்கும் ஆசை தான். குருவின் அருளாலே இவை மேலும் தொடர் வேண்டும் என்று மனத்திற்குள் பிரார்த்தித்தோம்.

அன்றைய தினம் அன்பர் ஒருவர் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார்.சரியாக 1:30 மணி அளவில் மதிய உணவு பரிமாறப்பட்டது. ஆசிரமத்தில் சாப்பாடு என்றால் ஒரு கூட்டு ,ஒரு குழம்பு என்று நினைத்து அமர்ந்தால் , கல்யாண விருந்து போல் வடை,பாயாசம்  போட்டு  அமர்களப்படுத்தி விட்டார்கள்.அவர்கள் உணவை மட்டும் பரிமாறவில்லை.அன்பையும் சேர்த்துத் தான் பரிமாறினார்கள். பசியின் மயக்கத்தில், உணவை வெளுத்து வாங்கிய  காட்சி கீழே. பின்னே இருக்காதா என்ன? ஒரே வேலைப் பளு அன்றோ? 








உணவு முடித்து,ஆசிரம நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி விட்டு, சதா ஆனந்தம் தந்து கொண்டிருக்கும் சதானந்த ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்து,மீண்டும் ஒருமுறை எங்களுக்கு இங்கே தொண்டு செய்ய வாய்ப்பு தாருங்கள் என்று வேண்டி,அனைவரும் புறப்பட்டோம்.

என்ன அன்பர்களே! அனுபவம் எப்படி இருந்தது. முழுவதையும் எங்களால் ஒரு பதிவிற்குள் அடக்க முடியவில்லை.ஓராண்டு நிறைவிற்கு பின்பு TUT சார்பில் நடைபெற்ற பணி ! சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்தது.ஒவ்வொரு நிகழ்வும் சொல்ல வார்த்தைகள் இல்லை. மீண்டும் ஒரு உழவாரப்பணி பதிவில் சந்திப்போம்.



                                                        குரு அருளாலே 
                                                    குருவின் தாள் வணங்கி 

                                             "ஓம் தத் சத் குருப் பரப்ரம்மனே நம"

No comments:

Post a Comment