Subscribe

BREAKING NEWS

08 July 2017

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்

வாழ்வாங்கு வாழ

இன்று முதல் ஒரு புதிய முயற்சியாய் - வாழ்வாங்கு வாழ என்று ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளோம்.இந்த பதிவு கேள்வி பதில் வடிவில் இருக்கும். யாருக்கு தான் கேள்விகள் இல்லை.எத்தனையோ ஆயிரமாயிரம் கேள்விகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த கேள்வி பதில் பதிவிற்கு விடை தருபவர் திரு. ராம் மனோகர் அவர்கள். அவருடைய தளத்தில் இருந்து அவரின் அனுமதியோடு இங்கே சுவாரசியமான கேள்வி பதில்களை பகிர்கின்றோம்.வழக்கம் போல் தள வாசகர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் வழி நடத்தும் படி கேட்டுக் கொள்கின்றோம்.ஏதேனும் சந்தேகம் - ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தமாக இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

வாழ்வாங்கு வாழ  என்ன செய்ய வேண்டும்?உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உயிர்  கலங்காதிருக்க வேண்டும். மன வளம் பெற்று இருக்க வேண்டும்.இங்கேயே ஒரு கேள்வி ஆரம்பமாகிவிட்டது.உயிர்  என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா ? அலல்து வேறு வேறா? அப்பப்பா ! எக்கச்சக்க ஓட்டம் நடைபெறுகின்றது.இது போன்ற நடைமுறை சிக்கலான கேள்விகளுக்கு தான் இங்கே நாம் விடை காண இருக்கின்றோம்.

வாழ்வாங்கு வாழ நாம் முதலில் நாம்  வாழ்த்திப் பழகுவோம்.

     ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!
வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!

மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.

அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.


வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழ்த்துவோம். வாழ்வாங்கு வாழ்வோம் !!


கேள்வி - எதையாவது எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போடுகிறார்களே ஏன் ?





இராம் மனோகர் - முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக இருக்கிறது. பழைய காலத்து ஏடுகள், கலவெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதால், இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். நாத்திக வாதம் பேசுவபவர்கள் கூட ''எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக வட்டமும், கோடும் போட்டுப் பார்த்து  விட்டு எழுதத் துவங்கவதே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது'' என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது.



  முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி.
 இரண்டாவது உரு நேர் கோடு.
 மூன்றாவது வட்டம்.
 நான்காவது பிறை மதி.
 ஐந்தாவது பிந்து.
இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த  சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம். பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ  வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்றும். காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

என்ன பிள்ளையார் சுழி பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா? இதுபோல் இந்த தொடர் பதிவைத் தொடர்வோம்.

- மீண்டும் அடுத்த கேள்வியில் சந்திப்போம் 

No comments:

Post a Comment