Subscribe

BREAKING NEWS

22 August 2017

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2)

அன்புள்ள மெய் அன்பர்களே

வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் ஆசை பற்றிய கேள்வி பார்த்தோம். யாரால் ஆசையை சீரமைக்க முடியும். தானமும்,தவமும் தக்க காலத்தில் செய்து, பஞ்ச பொறிகளின் மூலம், பஞ்ச பூதங்களின் குணங்கள் அறிந்து,  அல்லதை விடுத்தது, தொண்டாற்றி வாழ்ந்தால் தான் ஆசையை சீரமைக்க முடியும்.ஹி ..ஹி .நானும் அவ்வப்போது முயற்சித்து வருகின்றேன்.இருந்தாலும் ஆசையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளேன்.

இந்த  தொடரின்  கேள்விக்கு செல்வோமா? மூர்த்தி சிறிது.ஆனால் கீர்த்தி பெரிது போலத் தான் இந்த பதிவும். மீண்டும் மீண்டும் படித்தால் தான் பதிவின் கருத்துக்கள் புரியும்.

கேள்வி - அவன் ஆட்டுவிக்கிறான், நான் ஆடுகிறேன். ஆனால், விளைவுகளை மட்டும் என்னை அனுபவிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம் ?



இராம் மனோகர் - ஆதாரம்(தாங்குவது), ஆதேயம் (தாங்கப் படுவது), தாரணம் (சக்தி) மூன்றுமே இறைவன்தான். அந்த அடிப்படையில் எல்லாம் இறைவன் செயல் என்கிறோம். ஆனால், இந்த மூன்றையும் கொண்டு மனதின் மூலமாக செயல்படுவது நாம்தான். மனம் என்றால் எண்ணம்தான். நமது எண்ணம் செயல் இரண்டுமே இணை பிரியாதவைகள். சூக்கும நிலையில் எண்ணமாக இருந்ததே, ஸ்தூல நிலையாகிய செயலாக வடிவெடுக்கிறது. எண்ணம் மனதில்தான் உதிக்கின்றது. அந்த மனதோடு கூடிய ஆத்மாவையே ஜீவாத்மா என்று கூறுகின்றோம். ஒவ்வொரு ஜீவனும் எண்ணத்தினாலேயே தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறது. அந்த முயற்சியையே கர்மம் என்று சொல்கிறோம். ஆக எண்ணமே எந்த ஒரு ஜீவனுக்கும் கர்மமாக மாறுகிறது. எண்ணம் மாறுமிடத்து ஜீவ சொரூபமும் மாறி விடுகின்றது. ஒவ்வொரு ஜீவனும் தனது எண்ணத்திற்கும் வினைக்கும் தானே கர்த்தாவாக இருக்கின்றான்.





ஜீவர்கள் அனைவருமே ஈசனிடத்தில் இருந்து தோன்றியவர்கள்தாம். ஆகவே முடிவாகப் பார்க்குமிடத்து ஈசனே அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றார். ஆனால், அதை அறிந்து கொள்ளாத வரை தன் எண்ணத்திற்கும், செயலுக்கும் தானே காரணமாக இருக்கின்றான். தன்னையும், தன் செயல்கள் அனைத்தையும் ஈசனிடத்தில் ஒப்படைத்து விட்டால், பிறகு அனைத்திற்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்வது ஏன், என்பது விளங்கும். அத்தகைய ஞான நிலையை அடைந்த ஜீவன் ஜீவபோதத்தையும், கர்ம்பந்தங்களையும் கடந்தவனாகி விடுகின்றான். எல்லாவற்றிற்கும் எண்ணங்களே பொறுப்பு. எண்ணங்களை விசாரத்துப் பார்ப்பது அறிவாகும். அறிவு என்பது கடவுளாகிய ஆன்மாவின் பிரகாசமாகும். எனவே எல்லாம் கடவுள் செயல் என்கிறார்கள்.



ஆனால், உண்மை என்னவென்றால் ஆன்மாவை நெருங்கும் அளவிற்கே ஒருவரது அறிவில் ஆன்மாவின் பிரகாசம் ஓங்குகிறது. ஆன்மாவை உணராமல் அஞ்ஞானத்தில் திகழும் ஒருவர் தன் அனுபவ அறிவினாலேயே எண்ணங்களை விசாரிந்து செயல்படுத்துகிறார். எனவே அவரது வினைகளுக்கு அவரே பொறுப்பாளராகி விடுகின்றார். வினைப்படியே எல்லாம் நடக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அது போலவே அதை நடக்காமல் தடுக்கவும் நம்மால் முடியும் என்பதுவும் உண்மை. அதற்கு முயற்சி தேவைப்படுகிறது. இதைக் குறித்து நம் முன்னோர்கள் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். நம் வினைப் பதிவுகள் எனும் கர்ம்பீஜங்கள் (சம்ஸ்காரங்கள்) இரண்டு நிலைகளில் செயல்படுகின்றன. அவை கர்மாசயம், வாசனை எனப்படும். அதாவது செயலின் விளைவு கர்மாசயம் எனப்படும். அனுபவத்தின் விளைவு வாசனை எனப்படும். கர்மாசயம் ஆசைகளையும், உந்து வேகங்களையும் உருவாக்கி அதே செயலை மீண்டும் நம்மை செய்யும்படித் தூண்டுகிறது. வாசனை அவை குறித்த நினைவுகளை உருவாக்குகிறது.
இது தர்மம், இது அதர்மம் என்று சொல்கிறோமே, அது செயலின் பண்பு. இது இன்பம், இது துன்பம் என்று சொல்கிறோமே அது அனுபவத்தின் பண்பு. இதில் நினைவுகளே நம் வாழ்க்கைப் பாதைகளைத் தீர்மானிக்கின்றன. ஆனால், வெறும் நினைவுகளால் மட்டும் எதுவும் நடந்து விடுவதில்லை. அவைகளோடு உந்து வேகமும் சேர்ந்தால் மட்டுமே மீண்டும் ஒரு செயல் நடைமுறைக்கு வருகிறது. உதாரணமாக மதுவிற்கு அடிமைப்பட்ட ஒருவனுக்கு குடிக்க வேண்டும் என்ற நினைவு எழுகிறது. அதற்குக் காரணம் வாசனை. உடனே வினை வழியாக ஆசையும் கிளர்ந்து எழுகிறது. என்றாலும், டாக்டர் ''இனி குடித்தால் உன் உயிருக்கு ஆபத்து'' என்று சொல்லியிருப்பதால் அவன் குடிக்காமல் விட்டு விடுகிறான். அதற்கு காரணம், ஆசைக்குப் பின் எழும் உந்து வேகத்தை அவன் கட்டுப்படுத்தி விடுகிறான். எனவே குடிக்க வேண்டும் என்கிற நினைவு செயலுக்கு வராமல் தடுக்கப்படுகிறது.



இப்பொழுது சொல்லுங்கள் நம் எண்ணங்கள் செயலாக பரிணமிப்பதற்கு யார் காரணம் ? கடவுளா ? டாக்டரா ? அவனா ? இதையும் மீறி அவன் குடித்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பாளி ? கடவுளா ? டாக்டரா ? அவனா ? எனவே உந்து வேகங்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஒருவன் தன் மனதைப் பக்குவப்படுத்தி, வலிமை உடையதாக ஆக்கிக் கொள்வது அவசியம். மன வலிமை என்பது அதன் எண்ணங்களைக் குறைத்துக் கொள்வதினால்தான் அமைகிறது. இப்பொழு மறுபடியும் குழப்பம் வந்து விடுகின்றது. எண்ணங்கள் செயலாக மலராமல் கட்டுப்படுத்த உந்து வேகங்களால் மட்டுமே முடியும். உந்து வேகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனைக் கொண்டுதான் இதைக் கட்டுப்படுத்த முடியும், இதனைக் கொண்டுதான் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொன்னால், எதனைக் கொண்டு எதைக் கட்டுப்படுத்துவது ?
இதற்கு ஒரே வழிதான் உண்டு. புற விவகாரங்களில் இருந்து மனதை விலக்கி ஒரே விஷயத்தில் நிலை நிறுத்திப் பழக வேண்டும். அவ்வாறு பழகி வரும் பொழுது எண்ணங்கள் குறைந்து மனம் வலிமை பெறும். வலிமை பெற்ற மனம் உந்து வேகங்களைக் கட்டுப்படுத்தும். அதோடு மட்டுமல்ல, எண்ணங்கள் குறையுமளவு அறிவில் ஆன்ம ஒளியின் பிரகாசம் அதிகரிக்கும். அறிவில் ஆன்ம ஒளியின் பிரகாசம் அதிகரிக்கும் பொழுதுதான் நம் செயல்களை கடவுள் தீர்மானிக்கிறார் என்று சொல்வது பொருந்தும்.


ஜீவனானவன் அஞ்ஞானத்தில் இருக்கும் வரை தன் எண்ணத்திற்கும், தன் செயலுக்கும் தானே பொறுப்பு என்பதை உணர்ந்து, தனது எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றியமைத்து, மனதைப் பக்குவப்படுத்தி அதை ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டும். அது வரையில் அவனவன் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் அவனவனே பொறுப்பு.




கேள்வி - கோபியர்கள் தங்கள் இல்லத்தை மறந்து கண்ணனோடு ராசலீலைகள் புரிந்தார்கள் என்று சொல்வது விரசமாக இல்லையா? இதை பக்தி என்று கொண்டாடுவது அபத்தமில்லையா?




பதில்  - கோபிகா பக்தி என்பது பிரேமை யோகமாகும். இதைச் சாதாரண மனித உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. யோகங்களில் மிக உயர்ந்தது பிரேமே யோகம் என்று சொல்லப்பட்டுள்ளது. இறைவன் அன்புமயமானவன். அந்த அன்பு நிறைந்த நெஞ்சத்தோடு நாம் இறைவனை நேசிக்கும் பொழுது, நமது உணர்வுகளனைத்திலும் தெய்வீகம் நிறைந்து விடுகின்றது. அத்தகைய நிலையே கோபிகை நிலை. ராஸம் என்றால் இனிமை. இனிமையான, தெய்வீகமான உணர்வுகளோடு கூடிய செயல்களே ராஸலீலைகள் எனப்படுகின்றன. பசு என்றால் எப்படி ஜீவாத்மன் என்று சொல்லப்படுகிறதோ அதைப்போல தன் எண்ணம், சொல், செயல் அனைத்தையும், இறைவன் பால் ஒப்படைத்து விட்டு தெய்வீக பிரேமை நிலையில் திகழ்வது கோபிகா நிலை.
மனித உணர்வுகளுக்கு பிரேமை என்ற சொல் பொருந்தாது. மனித உணர்வைப் பொருத்த வரை கிடைத்த பொழுது மகிழ்ச்சியடைவதும், கிடைக்காத பொழுது கோபமடைவதும், பிறர் அனுபவிக்கக் காணும் பொழுது பொறாமை கொள்வதும்தான் இயல்பாக இருக்கிறது. இவை எதுவும் இல்லாமல், இறைவனிடம் ஈடுபாடு கொள்வது மட்டுமே எல்லாம் என்று நினைத்து மனதில் கொள்ளும் உணர்வே பிரேமை. இத்தகைய பிரேம பக்தி ஞானத்தால் விளைவது. மனித உணர்வுகள் அஞ்ஞானத்தால் விளைவது. எனவே கடவுள் வேறு, பக்தி செலுத்துபவர் வேறு என்று இல்லாமல் ஐக்கியமாகி நின்றிடும் நிலையே கோபியர்கள் நிலை. நீங்கள் நினைப்பது போல இது காம லீலையல்ல. காமம் கடந்த நிலை. இறைவனைத் தவிர வேறு எதன் மீதும் இச்சை கொள்ளாத நிலை.

நாம் புலன்களால் விருத்தி செய்து கொண்ட பகுத்தறிவைக் கொண்டு, இறைநிலையையும், இறையுணர்வையும் அறியத் தலைப்படுகிறோம், விவாதங்கள் செய்கிறோம். இதனால் நம் அறிவு மேலும் விருத்தியாகும் என்றோ நம்மை மற்றவர்கள் பகுத்தறிவாளன் என்று கருதுவார்கள் என்றோ நினைக்கிறோம். இது பக்திக்கு அப்பாற்பட்ட அறிவின் நிலை. இத்தகைய நிலையில் அறிவானது உடைத்து உடைத்து பார்க்கத்தான் பயன்படுமேயல்லாது, ஒன்று சேர்த்து ஆனந்தத்தை அனுபவிக்கப் பயன்படாது. உண்மை நிலையையும் காட்டாது. இறைவனின் படைப்பில் மனிதனைத் தவிர வேறு எதுவும் தங்களது தர்மத்தை மீறுவதில்லை. அவை அவைகளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தவறாமல் செய்கின்றன. மனிதன் மட்டுமே தர்மத்தை மீறுகிறான். தனக்கு தீங்கு செய்யாத பிற உயிர்களுக்கும் தீங்கு செய்கிறான், துன்பமிழைக்கிறான்.
அத்தகைய மனித மனம் பண்பட வேண்டுமென்றால், அதில் அன்பு பெருக வேண்டும். அன்பு பெருக வேண்டுமென்றால் அது இறைவனைப் பற்ற வேண்டும். ஏனெனில் இறைவன் மட்டுமே அன்புமயமானவன். வெறும் பனித்துளி பிரகாசிக்காது. அதே சமயம் அதில் சூரியனின் பொற்கதிர் விழும் பொழுது, அது பிரகாசிக்கிறது. அது போல ஆசாபாசங்களால் இருண்டு போய் கிடக்கும் நம் உள்ளத்தில் இறைவனின் அன்பொளி படரும் பொழுது, அது பிரகாசிக்கத் தொடங்குகிறது. அத்தகைய ப்ரகாசமான தெய்வீக நிலையே கோபியர்கள் நிலை. கோபியர்கள் தங்கள் இல்லத்தை மறந்தார்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் எல்லா கடமைகளையும் செய்தார்கள். ஆனால், அவற்றை கண்ணனின் நினைவோடு கண்ணனுக்காவே செய்தார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் யாவும் கண்ணனே என்று.

இரணியன் தன் மகன் ப்ரகலாதனிடம் ''உன் இறைவன் எங்கும் இருக்கிறான் என்று சொல்கிறாயே ? இந்தத் தூணில் இருப்பானா ?'' என்று கேட்கிறான். பிரகலாதன் ''அங்கேயும் இருக்கிறார்'' என்று சொல்வான். உடனே இரணியன் தூணை எட்டி உதைப்பான். தூண் இரண்டாகப் பிளக்க, அதனுள் இருந்து இறைவன் வெளிப்படுவார். இது புராணம். இதன் தத்துவம் என்ன ? இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால், நமக்குள்ளும் இருக்கிறார் என்றுதானே அர்த்தம் ? இது தெரியாமல் நாம் சந்தேகம் கொளகிறோம். பாச பந்தங்கள் எனும் நெடிய தூணை உடைத்துப் போடுங்கள், இறைவன் வெளிப்படுவார். நான் எனும் நம் அஹங்காரத்தை கொன்று போடுவார். விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து கனியும், கனியிலிருந்து விதையும் உண்டாவதைப்போல, இறைவனிடமிருந்து நாமும், நம்மிடமிருந்து இறைவனும் வெளிப்படுவதை உணரலாம். அதற்கு நம்மிடம் தூய அன்பு பெருக வேண்டும்.


தன்னடக்கம், தன்னம்பிக்கை, தொண்டுள்ளம் பெருக வேண்டும். முதலில் வீட்டில், பிறகு தெருவில், பிறகு ஊரில், நாட்டில் என்று படிப்படியாக உள்ளம் உயரும்படியாக அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பாங்குதான் உண்மையான பக்தி. அதுதான் பிரேமை. அதுதான் கோபியர் நிலை. எனவே நமது தூய உணர்வுகள்தான் கோபியர்கள். ஆத்மாவே கண்ணன். நாம் அடையும் ஆனந்தமே ராசலீலை. நமது உள்ளமே பிருந்தாவனம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி -திரு.ராம் மனோகர்

முந்தைய பதிவுகளுக்கு :-


வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1)http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment