Subscribe

BREAKING NEWS

11 August 2017

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன்

வளங்களை மட்டும் அல்ல..வரங்களையும் அள்ளி தருபவள் நம் அன்னை. ஆடி மாத அம்மன் தரிசனம் நம் அனைவருக்கும் பற்பல நன்மைகளை செய்து வருகின்றது.சக்தி இல்லையேல்  சிவ மேது? சிவ அருள் பெற சக்தியின் அருள் தேவை.நம் TUT பயணத்தில் இந்த வருட ஆடி மாதம் பல விஷயங்களை குருவருளோடு நடத்தி வருகின்றது. ஆடி மாத அமாவாசை  பூரண தானம் செய்தோம். குழும உறவுகள் அனைவரும் பேசி, அனைத்து மாதங்களிலும் அமாவாசை அன்று பூரண தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மீண்டும் ஒரு மகிழ்வின் நெகிழ்வில் அகத்தியர் வனம் மலேஷியா குழுவோடு இணைந்து வரும் சனிக்கிழமை அன்னதானம் செய்ய உள்ளோம்.

இவை அனைத்தும் சக்தியின் துணை கொண்டு தானே! என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டுமா என்ன? நடப்பவை எல்லாம் குருவின் ஆசியோடு நடக்கின்றது. நடப்பவை எல்லாம் இறைவனின் கருணையோடு நடக்கின்றது.இத்தகு சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் அடுத்த வாரம் ஆடி கிருத்திகை சேர்த்து,மிக மிக சிறப்பான நிகழ்வு பற்றிய அறிவிப்பை இனிவரும் பதிவுகளில் காணலாம். யாரும் தவற விட வேண்டாம்.இது ஒரு புறம் இருக்க, இந்த பதிவில் ஆடி மாத சிறப்பு தரிசனத்தை தந்தாள் நம் அன்னை. அதை பற்றியே இங்கே காண விழைகின்றோம்.

ஏற்கனவே ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் என்று பதிவை நம் தளத்தில் அளித்துள்ளோம்.அதன் தொடர்ச்சியாய் இந்த பதிவு 
தேனி என்றால் வீரபாண்டி கௌமாரிஅம்மன் என்று நினைவிற்கு வரும். இங்கு சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாப்பட்டு வருகின்றது.இது மட்டும் தான் சிறப்பான நிகழ்வு என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.அதையும் தாண்டி கேட்ட வரம் தருகின்றாள் நம் அன்னை.சித்திரை திருவிழா தவிர்த்து,ஒரு முறை சென்று பாருங்கள்.நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பது புரியும்.

வீரபாண்டி திருத்தல புராணம்.வரலாறு பற்றி அறிந்து,பின்பு ஆலய தரிசனம் காண்போம்.
ஏற்கனவே தல வரலாறு பற்றி அறிந்தாலும்,மீண்டும் ஒரு முறை படியுங்கள்.
தற்போது சின்னமனூர் என்று அழைக்கப்படும் அரிகேசரி நல்லூர் புராணத்தில் 14ம் படலமாக வீரபாண்டிப் படலம் வருகின்றது.வீரபாண்டிப் படலத்திலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக.முழுதும் படித்து பொருள் உணர காத்திருக்கின்றோம். சைவப் பெரியோர்கள் யாரேனும் நமக்கு உதவ வேண்டுகின்றோம்.முதலில் வீரபாண்டிப் படலம் படிக்கும் போது சற்று கடினமாக இருந்தது. பின்பு படிக்க படிக்க சற்று பொருள் கொள்ள முடிந்தது.

வீரபாண்டிப் படலம்

விரிசடை முடியீர் கேண்மின் மீனவ னிளவள்  மௌலி
புரிதிறம்  புகன்றா மந்தப் புரவலன் வைகை மார்க்கம்
வருநெறி யிடையிற்  கண்ட மாத்தலம் வீர பாண்டி 
யுரியதென் றங்கேதங்கு முண்மையை யுரைக்க லுற்றோம்

மூத்தரா சேந்தி ரன்றான் முடிக்கவித் திராச சிங்கன்
காத்திடக் கிடைத்த வெல்லாங் கைக்கொண்டு சேனையோடு
பேர்த்தனன் மதுரைவிட்டுப் பெருகிய வைகை மார்க்கம்
ஆத்திரத் துடன்வ ருங்கா லங்கொரு கோயில் கண்டான்.

கண்டவிக் கோயிற் றன்மை சுழறுமி னென்ன வாங்கு
மிண்டினர் தம்மைக் கேட்டான் விளம்புவா ரையா கேணீ
அண்டர்கள் போற்றுங் கன்னீ  சுரங்கண்ணீச் சுரம தாங்காண்
பண்டொரு மன்னன்வீர பாண்டிய னொப்பி லாதான்.

இவ்வாறு மொத்தம் 34 பாடல்கள் கொண்டுள்ளது வீரபாண்டிப் படலம். 

வீரபாண்டிப் படலம் மற்றும் அதன் பொருளை தனியே ஒரு பதிவாக அளிக்க விரும்புகின்றோம்.எனவே நாம் அடுத்து வீரபாண்டி தல வரலாற்றுச் சுருக்கம் காண்போம்.

வீரபாண்டி தல வரலாற்றுச் சுருக்கம் 

அன்றைய "அள நாடு " என்று அழைக்க்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய "வீரபாண்டி",இராசசிங்கன் எனும் பாண்டிய மன்னன் வைகைநதி மார்க்கமாக வரும் போது, வீரபாண்டியில் உள்ள இந்த கோவிலைக் கண்டான்.இந்த கோவில்கள்,வீர பாண்டியன் எனும் பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யப்ப்பட்டது. வீர பாண்டியன், இராசசிங்கனின் ஆறாவது பாட்டன் ஆவார்.

வீர பாண்டியன் மதுரையில் ஆட்சி செய்த போது, ஊழ் வினையால் இரு கண்களின் ஒளி இழக்க நேர்ந்தது. அவன் இறைவனை நோக்கி கடுமையான விரதம் இருந்து வேண்ட, இறைவன் அவருக்கு பிரத்தியட்சமாகி, இந்த வீரபாண்டி தலத்தில் உள்ள கௌமாரி தவமியற்றும் இடம் சென்று வேண்டினால் நீ கேட்டது கிடைக்கும் என்றார். இங்கு வந்து அம்மனையும் ஈஸ்வரனையும் வேண்ட பார்வை கிடைக்கப் பெற்றான். கண்பார்வை கிடைக்கப் பெற்ற மன்னன், ஈஸ்வரனுக்கு கண்ணீஸ்வரர் என்ற பெயரிட்டு கற்கோவில் அமைத்தார். இந்த மன்னரின் பெயரால் இந்த தலமும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது. திருக்கோவிலுக்கும்  கௌமாரி அமமன், திருக்கண்ணீஸ்வரர் என்று ஆயிற்று.

இங்கு கௌமாரி அம்மன் என்ற பெயரில் உமாதேவி ஈஸ்வரனை நோக்கி இயற்றினார். அதுசமயம் அங்கு வந்து தொல்லை கொடுத்த அசுரனை  அருகம்புல்லை முக்கழுப்படையாக மாற்றி அவனை அழிக்க, ஈஸ்வரன் தோன்றி சிவப்பிரசாதம் தர கௌமாரி அம்மன் கன்னி தெய்வமாக மாறினாள். அவள் பூசித்த சிவலிங்கமே திருக்கண்ணீஸ்வர் ஆனார்.


கௌமாரி அன்னையின் சிறப்பு 

கன்னித் தெய்வம், இங்கே சுயம்புவாக காட்சி தருகின்றாள்.கேட்ட வரம் அருளுபவள்.ஏட்டிலடங்கா சிறப்பு பெற்றவள்.வேண்டுவன யாவும் தருபவள். நியாயமான வேண்டுதலுக்கு உடனே செவி சாய்ப்பவள்.கண் நோய் கண்டவர்,அம்மை நோய் கொண்டவர்கள் இங்கே தீர்த்தம் பெற்று வேண்ட,தீராத நோயும் தீரும் எனபது கண் கூடு. தீராத நோய் மட்டுமின்றி ,தீராத துன்பங்களையும் தீர்ப்பாள் நம் அன்னை.

 வீரபாண்டி கௌமாரிஅம்மன் திருக்கோவில் அமைப்பு 

திருக்கோவிலின் வளாகம் தங்களின்  பார்வைக்கு கீழே


                                                  (கோவிலின் வெளிப்புறத் தோற்றம்)

கோவிலின் வெளிப்புறத் தோற்றம் தங்களின் பார்வைக்கு. அனைத்து கோவில்களிலும் ஏன் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் பூச்சு செய்கின்றார்கள்? சுகி சிவம் இது பற்றி பேசி உள்ளார்கள். மனிதனின் பிறப்பு தாய் மற்றும் தந்தையின் சக்தியின் வெளிப்பாடே. தாயின் சுரோணிதம் சிவப்பு நிறம்.தந்தையின் சுக்கிலம் வெண்மை நிறம். இதை உணர்த்தவே,தாயும் தந்தையும் இன்றி மனிதப் பிறவி இல்லை.இதை உணர்த்தவே, இது போன்ற வண்ணப் பூச்சு கோவில்களில் இருந்து வருகின்றது. அந்த கோவில்கள் வெறும் பக்திக்கான இடம் மட்டும் அல்ல. கலை,பக்தி,ஆரோக்கியம்,தானம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற சமுதாய நல்லிணக்க கூடங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்து வந்தது.ஆனால் இன்றைய நிலை வேறு?

ஒவ்வொருவரும் நம் தாய்,தந்தையை பேணி பாதுகாத்து வாழ வேண்டும்.இதை கோவில்களில் சொற்பொழுவுகளில் சொல்வதைவிட இது போன்ற அமைப்புகள்,குறியீடுகள் மூலம் சொல்வது இன்னும் சால சிறந்தது அன்றோ?



மேற்காணும் வண்ணப்படம் கோவிலின் உள் நுழையும் இடம்.இங்கே சென்று இடப்புறம் திரும்பினால்    கருப்பண்ணசாமி உள்ளார். இவரே இங்கு காவல் தெய்வமாக உள்ளார். அவரை வணங்கி நீறு இட்டுக் கொண்டோம். வலப்புறம் திரும்பினால் அன்னையின் தரிசனம் கிடைக்கும்.

காவல் தெய்வம் அடுத்துள்ள முன் மண்டபம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.முன் மண்டபம் கடந்து,பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய வேண்டும்.









கோவிலின் வெளியே இருந்த அறிவிப்பு பதாகைகள் 


முன் மண்டபம் தாண்டி உள்ளே தாயின் சன்னதி 





                                        தல வரலாறு தங்களின் கண்ணுக்கு விருந்தாய்



உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் உள்ளது.இந்த மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படுகிறது.





கம்பத்தடி மண்டபம் இணைந்த தாயின் சன்னதி.சற்று உற்றுப் பார்த்தல் தாயின் பின்னே உள்ள பிரபை தெரியும். இங்கே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சச்சிதானந்தம் என்ற அருள் நிலையை உணர்த்தும் சத்து -சித்து - ஆனந்தம் என்ற ஓவியம் வரைந்து உள்ளார்கள்.


                                                        இதுவே கம்பத்தடி மண்டபம்.


சித்திரை திருவிழாவின் போது,இங்கே கம்பம் நடுவார்கள். திருவிழா நேரத்தில் ,இங்கே வருபவர்கள், முல்லையாற்றில் இருந்து, கலயத்தில் மஞ்சள்,வேப்பிலை,கதம்பம் இட்டு நீர் கொண்டு வந்து,பிரார்த்தனை செய்து இங்கே  ஊற்றுவார்கள். அந்த நிகழ்வின் போது ,இங்கே எள்ளைப் போட்டால் எடுக்க இயலாத கூட்டம் இருக்கும்.



கம்பத்தடி மண்டபம் பின்னே தாயின் அருளாசி..கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள்.

கம்பத்தடி மண்டபம்  கடந்து முன்னே சென்றால்,கருவறையில் தாயின் தரிசனம். சுயம்புவாக காட்சி தருகின்றாள். அவள் அழகை கண்டோம். அபிராமி..அபிராமி தான். என்னே அவளின் புன்னகை. அவளின் அருளாட்சி. ஆற நின்று பார்த்தோம்.திருவிழா காலத்தில் இங்கே வந்து நமக்கு தரிசனம் கிடைக்காது.பிரகாரத்தை சுற்றி வரும் போது தெற்கே விநாயகர்,கன்னிமார் தெய்வங்கள் உள்ளனர்.பிரகாரத்தை சுற்றி வடக்கே வலம் வரும் போது,நவக்கிரக நாயகர்கள் உள்ளனர்.



தாயின் அருள் - கம்பத்தடி மண்டபம் பின்னே 






தாயின் கருவறை வலதுபுறம் 


தாயின் கருவறை - இடது புறம் 


தாயின் கருவறை - நேரே 


வெளிப்புற பிரகார மண்டபம் 

திருவிழா காலங்களில் இந்த பிரகாரம் மண்டபத்தில் தான் மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்,உட்கார கூட இடம் கிடைக்காது. மாவிளக்கு எடுத்தல் போன்ற பல பிரார்த்தனைக்கு இந்த இடம் ஒதுக்கப்படும்.



வெளியே - நவகிரக சன்னதி 


மீண்டும் ஒருமுறை - முழுத்தோற்றம் 



 ஆலய தரிசனம் என்னும் ஆன்ம தரிசனம் பற்றி ஆரம்பித்த பின்பு தான்,நமக்கு தல விருட்சம்,தல தீர்த்தம் என்பது பற்றியெல்லாம் அறியலானோம். வேம்பு இங்கே தல விருட்சமாய் உள்ளது.

அகத்தியர் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.
பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.
வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-
வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.

“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.”

விளக்கம் :-
அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.
அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”

விளக்கம் :-
கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.
காயசித்தி :- காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும், ஆகவே, அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.

வேம்பின் மகத்துவம் நீண்டு கொண்டே செல்கின்றது.சரி ! நாம் அன்னையின் அருளுக்குள் வருவோம்.

தீர்த்தம்,விருட்சம்,சித்திரை திருவிழா சிறப்புக்கள் என ஒவ்வொன்றாக பார்க்கலாம்.பதிவின் நீளம் சற்று அதிகமாய் இருந்தால்,சற்று பொறுத்திருந்து படிக்கவும்.







தீர்த்தம்

திருக்கோவில் முன்பு உள்ள கிணற்று நீரே இவ்வாலயத்தின் புனித தீர்த்தமாகும்.இந்தீர்த்தமே  அபிஷேகத்திற்கு,பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றது.நோய் தீர்க்கும் சக்தி இத்தீர்த்தத்திற்கு உண்டு.அதிக தொலைவில் இருந்து வரும் பக்தர்கள்,இப் புனித நீரை எடுத்துக் கொண்டு சென்று வீட்டில் பிணி நீங்க தெளிக்கின்றார்கள். 


சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டத்திலே  நடக்கும் விழாக்களில்  சித்திரைத் திருவிழா மிக பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றத்துடன் 22 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கொடியேற்றம் நாள் முதல்  21 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருப்பர்.21  நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும்.

கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கம்பத்து மண்டபத்தில் வைத்த இருக்கும் அத்தி மாற முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை ஆற்றின் நீர் எடுத்து ஊற்றுவது ஐதீகமாகும்.




அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு, மாவிளக்கு ஏற்றி,  மண் கலயத்தில் முல்லை ஆற்று நீரை ஏந்தி வந்து,  இங்குள்ள அத்திமரக் கொம்பிற்கு அம்மன் சிவனாக பாவித்து, நீரை ஊற்றுகின்றனர். அது சமயம் பூப்பல்லக்கு,  தேரோட்டம் நடைபெறுகின்றது.

சித்திரை திருவிழாவின் 8 நாட்களிலும் சன்னதி இரவு,பகல் பாராமல் 24 மணி நேரம் தொடர்ந்து திறந்திருப்பது சிறப்பான நிகழ்வாகும்.

வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, விநாயக சதுர்த்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, பிரதோஷம் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை சுமந்து வருதல் என்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவது கண் கொள்ளா காட்சி. தினமும் காலை 5 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாள் முழுவதும் திறந்து இருக்கும்.

கல்லூரிப் படிப்பின் போது,எனக்கு அம்மை வந்து விட்டது.உடனே என் தந்தை வீரபாண்டி சென்று,அங்குள்ள கிணற்று நீரை எடுத்து அம்மனிடம் வேண்டி கொண்டு வந்து எனக்கு அருந்த கொடுத்தார்கள்.அதை அருந்தி விட்டு, வீரபாண்டி அம்மனிடம் சேத்தாண்டி வேஷம் காட்டுவதாக வேண்டினேன். அன்னையின் அருளாலே,நோய் தீர்ந்து,நலம் பெற்ற உடன், அடுத்த ஆண்டு நடை பெற்ற,சித்திரை திருவிழாவில் வேண்டிய வண்ணம் "சேத்தாண்டி வேஷம்" போட்டேன்.இது போல் ஏராளம் அற்புதங்கள் நிகழ்த்தி வருகின்றாள் அன்னை கௌமாரிஅம்மன்.

அம்மன் தரிசனம் முடிந்து,அப்படியே வெளியே வந்து நவகிரகர்களை வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அங்கே மிகப் பெரிய மண்டபம் இருந்தது. மண்டபத்தின் முகப்பில் வண்ணப்படம் இருந்தது.கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் என்று தோன்றும் அழகு.


சரியாக தெரியவில்லையா? விநாயகர்,சக்தி,முருகப் பெருமான் தரிசனமே..இதோ தனித்தனியாய் கீழே


வினை தீர்க்கும் விநாயகா போற்றி 


சக்தியைத் தரும் அன்னையே போற்றி 


                                                     வெற்றியைத் தரும் வேலவா போற்றி

இந்த மண்டபத்தின் அருகில் சிறிய மண்டபம் இருந்தது.பெரியவர் ஒருவர் படுத்து உறங்கினார்.அவரை சற்று எழுப்பிவிட்டு,அங்கிருந்த அழகோவியதை பதிவு செய்தோம்.நீங்களே பாருங்கள்.


மீண்டும் ஒருமுறை அன்னையின் தரிசனம் பெறுவோமா?


இன்றைய ஆடி வெள்ளியில், கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன்  தரிசனம் கிடைத்திருக்கின்றது. இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்.அடுத்த பதிவில் திருக்கண்ணீஸ்வரர் தரிசனம் பெற வேண்டுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் -  http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html



No comments:

Post a Comment