Subscribe

BREAKING NEWS

30 October 2017

கொடுப்பதும் பெறுவதும்

கொடுப்பதும் பெறுவதும்

என்ன சொல்ல போகிறது இந்த பதிவு? பெற்று பெற்று நாம் அனுபவித்த இன்பம் பல முறை கிடைத்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நாம் அவரிடமிருந்து தானே பெற்றுக் கொண்டு வருகின்றோம்.இதுவே நமக்கு இன்பம் தான். ஆனால் எப்போதாவது கொடுத்து இருக்கின்றீர்களா ?
கொடுத்துப் பாருங்கள் பேரின்பம் நமக்குக் கிடைக்கும். இந்த பதிவில் கொடுப்பதும் பெறுவதும் என்ற சொல்லில் நடைபெறும் ஒரு விழா பற்றி தான் பேச உள்ளோம். அது நம் சென்னையின் மிக மிக பிரசித்தி பெற்ற விழா.

ஆங்..கண்டுபிடித்து விட்டீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இது போன்ற ஒரு விழா வேறெங்கும் நடக்குமா? எனபது சந்தேகமே? பக்தி,பண்பாடு,கலாச்சாரம் என அனைத்தும் ஒருங்கே நடைபெறும் ஒரு உற்சாகத் திருவிழா.அடியார்களின் அன்பைப் பெறும் விழா. சென்னையின் பாரம்பரியத் திருவிழா. இந்த திருவிழா பற்றி நமக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்தது. நேரில் சென்று அருள் பெற விரும்பினோம். இதோ இந்த ஆண்டு நடைபெற்ற அந்த விழாவின் காட்சிகளை இங்கே இணைத்துள்ளோம். இந்த பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று நாம் கனவிலும் நினைக்க வில்லை. ஆனால் வழி நடத்துபவன் அவன் அன்றோ. அவனின்றி ஓரணுவும் அசையாது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் நம் TUT குழுவின் சார்பாக நாமும் கொடுக்க விரும்புகின்றோம், இதுவே இந்த பதிவின் சாராம்சம் கூட.

சரி..எப்படியோ இந்நேரம் ஊகித்து விட்டீர்கள் இல்லையா? அந்த திருவிழா மயிலையையே..இல்லை இல்லை சென்னையையே அதிரவைக்கும் மயிலை அறுபத்து மூவர் திருவிழா தான். லட்சக்கணக்கானோர் பங்கு பெறுகின்றார்கள் என்றால் சும்மாவா? இங்கே நடக்கும் அதிர்வில் அந்த கயிலையும் அதிரும் என்று நாம் நினைக்கின்றோம். மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் நடைபெறும் பங்குனித் திருவிழா ஒட்டி இந்த அறுபத்து மூவர் உலா நடைபெறும்.மனித வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்துப் பரவசப் பட வேண்டிய ஒன்று.அழகு மட்டுமல்ல பிரம்மாண்டம் சேர்ந்த ஒரு விழா.

நமக்குத் திருவிழா என்றால் நமது கிராமம் தான் நினைவிற்கு வரும். அது போல் அன்றொரு நாள் மட்டும் மந்தைவெளி முதல் மயிலாப்பூர் வரை எங்கு பார்த்தாலும் கடைகள்,தின்பண்டங்கள் என களை கட்டும். மயிலையின் வாசம் மந்தையில் வீசும் என்றால் அது தான் அறுபத்து மூவர் விழாவின் சிறப்பு.

இது போன்ற விழாக்களுக்கு குடும்பம் சகிதமாக சென்று கலந்து கொள்ளுங்கள்.அப்போது தான் கொடுப்பதின் சிறப்பும்,பெறுவதின் இன்பமும் புரியும். ஒரே கூட்டம் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.ஏனெனில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா இது. தவற விடாது கலந்து கொண்டு சிவ புண்ணியம் பெறுங்கள். சென்னையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றார்கள்.அப்படி வருபவர்கள் இது போன்ற அறுபத்து மூவர் விழா காலத்தில் வந்து பார்ப்பது சிறப்பாக இருக்கும் அன்றோ?நம் அனைவருக்கும் சிறிதாவது அறுபத்து மூவர் பற்றி தெரியும். இனிவரும் பதிவுகளில் அறுபத்து மூவர் பற்றி நம் தளத்தில் அருள, எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.

இந்தாண்டு நடைபெற்ற விழாவிற்கு நாம் செல்லும் போது, மந்தைவெளியிலே பானங்கள் தர ஆரம்பித்து விட்டார்கள். பேருந்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டு இருந்தார்கள். நாமும் வாங்க முற்பட்டோம். நமக்குக் கிடைக்கவில்லை.அப்போது அருகே இருந்த வைஷாலி பாட்டி ( பாட்டியின் பேர் கடைசில் தான் கேட்டுத் தெரிந்து கொண்டோம் ) சற்று சங்கடமாக இருந்தார்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்று. எப்படியோ பேருந்தில் இருந்து இறங்கும் முன் நமக்கு கிடைத்த உடன் தான் அவர் அவருடைய பானத்தை குடிக்க ஆரம்பித்தார். நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? மயிலையில் அன்றொரு நாள் மட்டும் இப்படி அன்பில் நனைவார்கள். அது தான் அறுபத்து மூவரின் சிறப்பு. கொடுத்து கொடுத்து சிறந்தவர்கள் அன்றோ?

பின்னர் பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சாய் பாபாகோயில் சென்று பிரார்த்தனை செய்து விட்டு, திருவீதி உலா  காண சென்றோம். ஆச்சர்யத்தில் உறைந்தோம். ஐஸ் கிரீம், குளிர்பானம், தர்பூசணி, அன்னதானம், தேநீர், காப்பி  என்று கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.கொடுப்பது சிறப்பு என்பது இவ்விழாவின் தாத்பர்யம். பழைய ஆன்மிக புத்தகங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் சில இடங்களில் பெற்றுக் கொண்டோம். நம்மால் பாட்டியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சுமார் 5 மணி அளவில் அப்படியே கபாலீசுரவர் கோயில் முன் சென்றோம்.

என்ன கூட்டம். ! உள்ளே சென்றால் வெளியே வருவது கடினம். நாம் தனித்து சென்றிருந்தால், அப்படியே மாட வீதிகளில் நின்று தரிசனம் பெற்று வந்திருப்போம், ஆனால் அந்தப் பாட்டி விடவே இல்லை. எப்படியோ அந்த கூட்டத்தில்,பல தள்ளு முள்ளுக்கு இடையில் என்னை அழைத்துக் கொண்டு சென்றார். கடைசியில் தேரில் தயாராக இருந்த கபாலீசுரவர் ,கற்பகாம்பாள் தரிசனம் பெற்றோம். சில மணித்துளிகளில் வீதி உலா அறுபத்து மூவரோடு ஆரம்பித்தது.








நம்மால் அலைபேசி எடுத்து, காட்சிகளை பதிக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். ஏதோ நம்மால் முடிந்த அளவு எடுத்த காட்சிகளை இங்கே அறியத் தருகின்றோம். அடுத்த ஆண்டு நிகழ்வில் இன்னும் அதிக காட்சிகளோடு பதிவேற்றம் செய்வோம்.







                                 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா?



அடுத்து கொடை வள்ளல்கள். கொடுப்பதின் இலக்கணம் காட்டியவர்கள். சிவ புண்ணிய அருளாளர்கள் .. அறுபத்து மூவர் தரிசனம்,











அட. திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும்ஒரு சேர அருள் பாலிக்கின்றார்கள். திருவள்ளுவரும் ஒரு நாயன்மார் என்பது இதில் தெரிகின்றது அல்லவா? இந்தக் காட்சி காணக் கிடைக்குமா? உலகப் பொது மறை இயற்றிய திருவள்ளுவருக்கு நாம் செய்கின்ற சிறப்பு இங்கே தான் காண முடியும்.அதனால் தான் சொல்கின்றோம். அறுபத்து மூவர் விழா சென்று வாருங்கள் என்று ! என்ன கொடுக்கின்றார்கள் என்று ஒரு முறை சொல்கின்றோம்.

திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டது. சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், கீரை சாதம், கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா  சாதம், தேங்காய் சாதம், பால் சாதம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், சுண்டல் மற்றும் பல்வேறு பயிறு வகைகள், தர்பூசணி, மோர், ரஸ்னா, இளநீர்,  கிர்ணிப்பழ ஜூஸ், பாதாம் ஜூஸ், கிரேப் ஜூஸ், ஆரஞ்ச் ஜூஸ், லெமன் ஜூஸ், சர்பத், பலாப்பழம், வெள்ளரிக்காய், கேப்பை கூழ், வாட்டர் பாக்கெட், லட்டு,  ஜாங்கிரி, சம்சா, வடை, தோசை உள்ளிட்ட 88 வகையான பொருட்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கொடுப்பதின் சிறப்பு புரிகின்றது. பெறுவதில் என்ன சிறப்பு இருந்து விடப் போகின்றது? பெறுவதற்கு யாரேனும் இருந்தால் தானே கொடுக்க முடியும். பெறுபவர்கள் இங்கே சும்மா பெறுவதில்லை. அறுபத்து மூவர் ஆசியோடு இங்கே பெறுகின்றார்கள். நம் உயிர் வளர்க்க உதவும் உடம்பினை வளர்க்க அன்றொரு நாள் பெறுவதும் சிறப்பே. பெறுபவர்கள் வாயார வாழ்த்துவார்கள். இல்லையேல் மனதின் அடி நாதத்தில் இருந்தேனும் வாழ்த்து கிடைக்கும். உதாரணத்திற்கு  நாம் இந்த ஆண்டு கலந்து கொண்ட விழாவில் ஜீஸ், ஐஸ் கிரீம், தேநீர் அனைத்தும் பெற்றோம். நம் உள்ளம் இப்போது நினைத்தாலும் வாழ்த்துகின்றது. இதுவே பெறுவதில் உள்ள சிறப்பு.

சிலர் மறுபடியும் மறுபடியும் வந்து பெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டோம். தவறொன்றும் இல்லையே. பெறுவதற்கான விழாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். எத்துணை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அடுத்த ஆண்டு விழாவில் நாமும் கொடுப்போம். நாமும் பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:- 

எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html




No comments:

Post a Comment