Subscribe

BREAKING NEWS

28 March 2018

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018

தமிழ் மொழியில் தோய்ந்த பின்பு தான் தமிழ் மாதங்களின் முக்கியத்துவம் நாம் அறிந்து வருகின்றோம். முதலில் ஆங்கிலத்தில் பிறந்த நாள் கொண்டாடி வந்தோம். இரு வருடங்களுக்கு முன்பாக நட்சத்திர பிறந்த நாள் பற்றி அறிந்து, அதனைக் கடைப் பிடித்தோம். அகத்தியர் ஆயில்ய பூசை செய்ய ஆரம்பித்த பின்பு, தமிழ் மாதங்களை பற்றி தெரிந்தோம். ஏதோ பள்ளிக்காலத்தில் சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி என்று படித்தது. ஆனால் இவை தான் வாழ்வியலுக்கு தேவை என்பது இப்போது தான் நமக்கு தெரிகின்றது. தற்போது நாட்காட்டி என்று பார்க்க ஆரம்பித்தால், தமிழ் நாட்காட்டி தான் பார்த்து வருகின்றோம். மாசி மக சிறப்பாக அறிந்து, பௌர்ணமி ஹோமத் திருவிழாவில் நம் தளம் சார்பாக நம்மால் இயன்ற கைங்கரியம் செய்தோம்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வழிபாடு, கொண்டாட்டம் என்று தான் உள்ளது. இப்போது தான் நாம் உணரத் தொடங்கி உள்ளோம். 12 மாதங்கள், 12 விதமாக வழிபாடுகள், 12 வித பலகாரங்களை உணவில் சேர்த்து ஆன்மிகத்தோடு ஆரோக்கியமும் வளர்த்தவர்கள் நம் முப்பாட்டன்கள்.சித்தர் பெருமக்கள். இதோ  பங்குனி உத்திரம் சார்ந்து சில கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர விரும்புகின்றோம்.

 தமிழ்மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நாள் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி மாத பௌர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் 'பங்குனி உத்திரம்" தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திரநாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.


இந்த நாளில் மஹாபாரத அர்ஜூனன் பிறந்த தினம் என்பதுடன், அர்ஜூனனுக்காக அவன் மூலம் உலகுக்கு கீதை கிடைத்ததை போற்றும் நாளாகவும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகின்றது.

 கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம்முடைய மூதாதையரின் ஆசியும் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய குலம் சிறக்கவும், வாழ்வு சிறப்பாக அமையும்.

இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவை


 முருகன் - தெய்வானை திருமணம்

 ஸ்ரீராமர் - சீதை திருமணம்

சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம்

ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்

அர்ஜுனன் அவதார நாள்

சபரிமலை ஸ்ரீஐயப்பன் பிறந்தநாள்

ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த திருநாள்


தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும், பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.இத்தகையைத் திருநாள் 30/03/2018 அன்று வருகின்றது. அனைவரும் இந்த நாளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.






பங்குனி உத்திரம் நாளன்று காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானை வேண்டி பிரார்த்திக்கவும். பின்னர் அருகில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலுக்கு சென்று தங்கள் பெயரில்,குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வழக்கமான பணிகளில் ஈடுபடவும். முடிந்தவர்கள் அன்றைய நாள் விரதம் இருக்கவும். முடியாதவர்கள் ஒரு பொழுது உண்டு மாலை கோயிலுக்கு சென்று முருகனை தரிசிக்கவும்.

எப்படியாவது காலை/மாலை இரு பொழுதும், இல்லையேல் ஒரு பொழுதேனும் கோயில் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவும். அன்றைய நாள் அன்ன தானம் போன்ற தானம் செய்வது இன்னும் சிறப்பு.செவ்வாய் தோஷம் காரணமாக திருமணத் தடை உள்ளவர்கள் பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து, விளக்கேற்றி, அன்று நடைபெறும் திருக்கல்யாண காட்சி கண்டு வந்தால் அனைத்து தடைகளும் நீங்கி சுப வாழ்வு அமையும். முருகன் வள்ளி,தெய்வானை என இரு துணை என்று விதண்டாவாதம் பேசாதீர்கள், அந்த நிலை இச்சா சக்தி,கிரியா சக்தி என காட்டவே.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.


நம் தளத்தின் பதிவின் தலைப்புகளைக் கூட அவன் தான் தீர்மானிக்கிறார். அகத்தியர் ஆயில்ய பூசையில் அகதியரைத் தானே அழைக்க வேண்டும், ஆனால் நாம் குகனை அல்லவா? அழைத்தோம். அழைக்க சொன்னதே அவர் தானே. பங்குனி உத்திர ஆயில்ய நட்சத்திர பூசை ஆதலால் முருகனை அழைத்தோம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு என்று பதிவிட்டோம். முருகனின் முதல் சீடர் அகத்தியர். முருகனும், அகத்தியரும் வேறு வேறு அல்லர். முருகனைப் பற்ற அகத்தியம் உணர்வீர். அகத்தியர் பற்ற கௌமாரம் உணர்வீர். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் தான் இருவரும். நாம் ஆயில்ய பூசை செய்த்து வரும் அகத்தியர் முருகனின் வலப்புறம் தான் அருள் பாலிக்கின்றார். முருகன் அருள் முன்னிற்க, நேற்றைய ஆயில்ய பூசை வெகு சிறப்போடு நடைபெற்றது. சில காட்சிகள் உங்களுக்காக இணைக்கின்றோம்.














- ரொம்ப நாள் கழித்து, மாலையில் நடைபெற்ற ஆயில்ய பூசை 
- அஷ்ட திக்கு விளக்கேற்றி ஆயில்ய பூசை ஆரம்பம் 
- திருநீற்று அலங்காரம் 
- அருகு,நெல்லி என ஐயனுக்கு அபிஷேகம் ( சந்தனாதி தைலம், மஞ்சள்,சந்தனம், பால்,தயிர்,அருகம்புல், வில்வம்,நெல்லிப் பொடி,
ஸ்நானப் பொடி, பஞ்சாமிர்தம், தேன் என )
- அகத்தீஸ்வரர்/ நந்தி  அபிஷேகம் 
- சித்தர்கள் போற்றித் தொகுப்பு இணைத்தோம்
- நம் குழுவோடு, சிலருக்கு சிறப்பு பிரார்த்தனை நேற்று செய்தோம். 

பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு :

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; 

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது;

  மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது;

  ராமர் சீதையை மணந்தது; 

லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; 

இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; 

திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது; 

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது; 

அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான்.


 சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.

 இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

 சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.







மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.


மேலும் ஒரு சிறப்புச் செய்தி உங்களுக்கு. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

திருப்புகழ் முற்றோதல்:

திருப்புகழ் முற்றோதல் வரும் ஞாயிறு 01.04.2018 அன்று காலை 08.30 மணியளவில்,  கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில் உள்ள "சௌந்திர விநாயகர் கோவிலில்" நடைபெற உள்ளது. அன்பர்கள் தவறாது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனருள் பெற வேண்டுகின்றோம். 
தொடர்புக்கு:
திரு ஆறுமுகம் - ‭+91 90947 02907







No comments:

Post a Comment