Subscribe

BREAKING NEWS

23 April 2018

திருஅருட்பா அமுது உண்போம்


அன்பின் நெஞ்சங்களே.

சென்ற பதிவில் தீப வழிபாடு, அகத்தியரின் மனமது பாடல் போன்ற செய்திகளைக் கண்டோம்.இன்று மேலும் அது சார்ந்த செய்திகளை தொடர்வோம். இன்றைய பூச நட்சத்திர நன்னாளில் , மயிலை குழந்தைவேல் சுவாமிகள் குருபூஜை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தமிழ் நாட்காட்டியை பயன்படுத்தும் போது தான், ஒரு நாளின் முக்கியத்துவம் நன்கு புரிகின்றது. ஆங்கில நாட்காட்டியை விட, தமிழ் நாட்காட்டியை பயன்படுத்தும் போது தான், 24 மணி நேரத்தின் ,முக்கியத்துவம், ஒவ்வொரு நாளின் சிறப்பு, நட்சத்திரத்தின் சிறப்பு என உணரலாம். நம் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாகவே இருந்து வந்துள்ளது. இல்லையேல் மாதத்திற்க்கு 10 நாட்களாவது சிறப்பு நாளாக இருக்கும். முதலில் நாம் பௌர்ணமி கிரிவலம் மட்டும் செய்து கொண்டு வந்தோம். பின்னர் அமாவாசை நாளின் சிறப்பு பற்றி அறிந்து, நம் தளம் சார்பாக அன்னசேவை செய்து வருகின்றோம்.


அடுத்து ஆயில்ய நட்சத்திரம், சதய நட்சத்திரம் பார்த்து கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அகத்தியர் பூசை செய்து வருகின்றோம். அகத்தியர் அடியார் பெருமக்கள் சேர்ந்தது பஞ்சேஷ்டியில் சதய பூசை செய்து வருகின்றார்கள். தற்போது வரை தமிழ் மாத கணக்கில் 4 நாட்கள் சிறப்பாக வந்து உள்ளது.

மருதேரி  பிருகு அருள் நிலையத்தில் ரோகிணி நட்சத்திர வழிபாடு சிறப்பாக ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி  ஞாயிறு அன்று சூரிய வழிபாடும் இங்கே நடைபெற்று வருகின்றது. ஆக மொத்தம் ஆறு நாட்கள். பட்டியல் இன்னும் நீளும்.

ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரம் அன்று பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் பூசை நடைபெற்று வருகின்றது.இது தவிர பிரதோஷம், ஏகாதசி,கிருத்திகை என்று மற்ற நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தம் 15 நாட்களாவது நமக்கு ஒவ்வொரு மாதமும் கொண்டாட்டமாகவே இருந்து வருகின்றது. அது போன்ற ஒரு வழிபாட்டு நாள் தான் இன்றைய நாள்.

எப்பொழுது ஆயில்யம் வருகின்றதோ, அதற்கு முந்தைய நாள் பூசம். பூசம் என்றாலே தைப்பூசம் தான். முருகனுக்கு உகந்த நாள். இந்த தைப்பூசத்தில் தான் வடலூரில் ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும். பூச நட்சத்திரத்தில் தான் வள்ளலார் தமது உடலை ‘ஞான தேகம்’ ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய்க் கலந்து விட்டார். தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார். 

அது போன்றதொரு சிறப்பான பூச நட்சத்திர வழிபாடு இன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. நாமும் கலந்து கொள்ள அகத்தியர் ஆசி இன்று கிடைத்தது.இந்த நன்னாளில் வள்ளலார் பற்றி பேசுவதும், சிந்திப்பதும் நாம் செய்த புண்ணியமே ஆகும்.








வழிபாட்டுக்கு முன்னதாக அங்கே சுத்தம் செய்த பிறகு. வள்ளலார் எங்கே இருக்கின்றாரா? கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுனுள் இருக்கின்றார்.

சரியாக 9 மணிக்கு சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். சுமார் 7 பேர் இருந்தார்கள். அனைவரும் சன்மார்க்க வழிபாடு பாராயணத்தை ஆரம்பித்தார்கள். ஒருவர் பாட, மற்றவர்களும் பாட என்று தமிழ் அமுதும், திருஅருட்பா அமுதும் சேர்ந்து உண்ண தொடங்கினோம்.




எங்காவது இப்படி ஒரு அதிசயம் கண்டதுண்டா? அறையினுள் சென்ற ஒருவர், அறையைத் திறந்து பார்த்தால் இல்லவே இல்லை. என்ன மாயம் செய்தார்? இப்படி ஒரு நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டும் தான் நடைபெற்று உள்ளது.ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார்.  “நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்” என்று  அறிவித்தார். பின்…

” பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!”

– என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர்.  பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி  மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.


இங்கே நாம் அவருடைய வழி பற்றி நடக்க வேண்டும் என்பதே அவரிட்ட ஆணை. 




அருபெருஞ்சோதி அகவல் பாராயணம் செய்தோம். முடிவில் தட்ப வெப்ப நிலை மாறிட தியானம் செய்து, வழிபாடு செய்தார்கள். வழிபாட்டில் நாம் கலந்து கொள்ள இயலவில்லை. சரி,வள்ளலாரின்  வழியில் ஒழுக்கம் பற்றிய  கருத்துக்களை சற்று காண்போம். 

ஒழுக்கம் என்பது நான்கு வகைப்படும். மனித உடம்பை நான்கு பாகங்களாக வகைப் படுத்தினார். அவை:

இந்திரிய ஒழுக்கம் : கண் ,காது, மூக்கு ,வாய், உடம்பு என்பதாகும்

கரண ஒழுக்கம்: மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆச்சர்யம் என்பதாகும்.

ஜீவ ஒழுக்கம் : உயிர் என்பதாகும் .

ஆன்ம ஒழுக்கம் : உயிரை இயக்கம் உள் ஒளியாகும்.

இவைகள் மனித உடம்பை இயக்கும் கருவிகளாகும். இவைகளை கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கம் என்பதாகும்.ஒழுக்கம் என்பது என்ன ?மனிதனாக பிறந்தவர்கள் ஓழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.எல்லா ஞானிகளும் சொல்லி உள்ளார்கள் திருவள்ளுவரும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் .

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி !

வள்ளலார் அவர்கள் ஒழுக்கம் எனபது எவை என்பதை தெளிவான முறையில் விளக்கம் தந்துள்ளார்கள்.

இந்திரிய ஒழுக்கம் என்பது ;—.

1. கொடிய சொல் செவி [காது ] புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக் கேட்டல்
2. அசுத்த பரிச இல்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் .
3. குரூரமாக பாராது இருத்தல்,
4. ருசி விரும்பாமல் இருத்தல் .
5. சுகந்தம் விரும்பாமல் இருத்தல் .
6. இன் சொல்லால் பேசுதல் .
7. பொய் சொல்லாமல் இருத்தல் ,
8. ஜீவர் களுக்கு துன்பம நேரிடும் போது எவ்வித தந்திரம் செய்தாவது தடை செய்தல் ,
9. பெரியோர்கள் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ,
10.ஜீவ உபகார சம்பந்தமாக சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும் ,திவ்ய திருப்பதிகளிலும் செல்லுதல் .
11.நன் முயற்ச்சியில் கொடுத்தல், வருவாய் [ வருமானம் ] செய்தல் ,
12. மிதமான ஆகாரம் செய்தல்,
13. மிதமான போகம் செய்தல் ,
14. மலம்  சிரமம் இல்லாமல் வெளியேற்றுதல் ,
15. கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,பவுதிக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் சங்கறபத்தாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,
16. [மந்ததரனுக்கு ] சுக்கிலத்தை [விந்து ] அதிகமாக வெளியேற்றாமல் நிற்றல் .
[தீவிரதரனுக்கு ]எவ்வகையிலும் சுக்கிலம் வெளியே விடாமல் நிறுத்தல் ,
இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் [துணியால் ]மறைத்தல்,
17. இதே போல் உச்சி ,[தலை ] மார்பு முதலிய அங்க அவையங்களை மறைத்தல் ,
வெளியில் செல்லும் காலங்களில் காலில் கவசம் [செருப்பு] தரித்தல்
18. அழுக்கு ஆடை உடுத்தாமல் இருத்தல் ,
இவை யாவும் இந்திரிய ஒழுக்கங்களாகும்.

கரண ஒழுக்கம் ;–
1. மனதைச் சிற்சபையின் [புருவ மத்தி ]கண்ணே நிறுத்தல் ,அதாவது புருவ மத்தியில் நிற்கச செய்தல்
2. கெட்ட விஷயத்தை பற்றாமல் இருக்க செய்தல் ,
3. ஜீவ தோஷம் விசாரக்காமல் இருத்தல்.
4. தன்னை மதியாமல் இருத்தல்
5. செயற்கை குணங்களால் ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி]நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதல்,
6. பிறர மீது கோபம கொள்ளாமல் இருத்தல்,
7. தனது சத்துருக்கள் ஆகிய தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் ,
முதலியன கரண ஒழுக்கமாகும் ,

ஜீவ ஒழுக்கம் என்பது ;–
ஆண் மக்கள்,பெண் மக்கள்,முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி ,சமயம் ,மதம், ஆசிரமம் ,சூத்திரம் கோத்திரம், குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேச மார்க்கம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,–என்னும் பேதம் நீங்கி எல்லோரும் நம்மவர்கள் என்பதை சமத்திற கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும் ,

ஆன்ம ஒழுக்கம் ;—
யானை முதல் எறும்பு ஈறாகத் தோன்றிய உடம்பில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச சபை யாகவும் ,அதன் உள் ஒளியே அதாவது பரமானமாவே பதியாகவும் ,கொண்டு ,யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் –ஆன்ம ஒழுக்கமாகும் ,
இத்துடன் இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல், ஜெப தபம் செய்தல் ,தெய்வம் பராவல். பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங் குணம் பற்றல் ,பாடிப் பணிதல், பத்தி செய்து இருத்தல்,–முதலிய நல்ல செய்கைகளில் பல காலம் முயன்று முயன்று பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .
இவையே மனித ஒழுக்கமாகும் .இவற்றை முழுவதும் பின் பற்றுபவர்கள் நான்கு புருஷார்த்தங்கள் அடைவார்கள்.அவைகள் ;–
1. சாகாக் கல்வி .
2. ஏமசித்தி,
3. தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ,
4. கடவுள் நிலை அறிந்து அம மயமாதல் .
என்பதாகும் இவையே மனிதன் மரணத்தை வெல்லும் வழியாகும் .இதை வள்ளலார் கடை பிடித்தார் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் ,நாமும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம்

இது போன்று எண்ணற்ற செய்திகளை வள்ளலார் நமக்கு சொல்லிக் கொண்டு உள்ளார். வள்ளலார் வழியில் நிற்போம்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை !! அருட்பெருஞ்சோதி!!

No comments:

Post a Comment