Subscribe

BREAKING NEWS

06 April 2018

பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில்

அனைவருக்கும் வணக்கம்.

பணசலாறு எங்கும் கேட்டதில்லையே என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் இந்த ஆறு உள்ளது. இப்படி ஒரு ஆறு உள்ளது பற்றி நாம் சென்ற தல யாத்திரையில் தான் கேள்வியுற்றோம். வீரப்ப ஐயனார் என்றதும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.ஹ்ம்ம். அதே..கோயில் தான்.


தென்றல் தவிலும் தேனி மாவட்டத்தில் உள்ள வீரப்ப ஐயனார் கோயில் பற்றி தான்  இன்று காண இருக்கின்றோம்.தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் இன்னும் நம்மை கண்ணீர் மழையில் ஆழ்த்துகின்றது. என்ன தான் நாம் கவனம் கொண்டாலும், நடப்பது ஒன்றும் நம் கையில் இல்லை. சரி.விசயத்திற்கு வருகின்றோம். நாம் தரிசிக்கும் இடங்கள் அனைத்தும் நாமாக முடிவெடுத்து செய்வதில்லை. அனைத்தும் குருவின் வழிகாட்டலினால் மட்டுமே.

தேனி நகருக்கு 5 கி.மீ. தூரத்திலிருக்கிறது வீரப்ப ஐயனார் சுவாமி திருக்கோயில். இந்த சுவாமி கல்லாய் கிடக்க, அதை பக்தர் ஒருவர் தெரியாமல் கோடரியால் வெட்ட, அதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியதாம். இதனால் இன்றும் சுவாமியின் இடது தோளில் தழும்பு காணப்படுகிறது. சித்திரை முதல் தேதி சுவாமிக் கல்லை வெட்டியவரின் பரம்பரையிலிருந்து ஒருவர் சுவாமியின் இடது தோளுக்கு மருந்திடும்  வைபவம் இன்றும் நடைபெறுகிறது என்பது தனிச் சிறப்பாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

சிறு வயதில் நாம் கேட்டது வரை, இந்த கோயில் வருடத்திற்கு ஒரு முறை தான் திறக்கப்படும்.அதுவும் சித்திரை மாதம் 1 ஆம் தேதி என்பதால் கூட்டம் மிக மிக அதிகமாக இருக்கும். பங்குனி மாத கடைசி நாள் சுவாமி ஊர்வலம் தேனி முழுதும் நடைபெறும். ஆனால் அடுத்த நாள் சொல்லவே வேண்டாம். அவ்வளவு கூட்டம் இருக்கும். இயற்கையின் மடியில் தவழும் இடம்..பச்சை பசேலென உள்ளம் குதூகலிக்கும். பொதுவாக தேனி மற்றும் தேனியை சுற்றியுள்ள மக்கள் எறும்புகளைப் போல சாரை சாரையாக செல்வார்கள். அதுவும் குறிப்பாக அல்லிநகரம் வரை பேருந்துகளில் செல்வார்கள்.அதனை தாண்டி நடைப்பயணம் தான். அந்தநடைப்பயணத்தில் சுமார் 2 கி.மீ தாண்டி வீரப்ப ஐயனார் குதிரையில் வீற்றிருப்பார்.

என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு அழகு !! நாம் ஆட்டோவில் சென்றதால் காட்சிப்படம் எடுக்க இயலவில்லை. இணையத்தில் கிடைத்தவரை இங்கே பகிர்கின்றோம்.







கோயில் அமைப்பு

தேனி அல்லிநகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வீரப்ப அய்யனார் கோயில் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சிறப்பான முறையில் கட்டப்பட்டிருந்தாலும் சுவாமியின் கருவறைக்கு மேல் மேற்கூரை அமைக்கப்படவில்லை. சுயம்பு தோற்றமாக உள்ள சுவாமி அய்யனார் சிவ அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் இங்கு சுவாமி கருவறையின் மேல்பகுதி கூரையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது











கோயிலை அடைந்ததும், பச்சை போர்வைக்குள் நாம் இருப்பது போன்ற உணர்வு. சிறு வயதில் பார்த்த போது, ஒரே ஒரு சின்ன கோயில், அய்யனார் என இருந்தாதாக நினைவு. ஆனால் இப்போது திருக்கோயிலை நன்கு கட்டியுள்ளார்கள். அய்யனார் கோயில், சப்த கன்னியர்கள், விநாயகர்,தனியாக முருகன் கோயில், நவகிரக சன்னதி என ஒரே அமர்க்களம். அட்டகாசம்.

அன்றைய தினம் நல்ல கூட்டம் வேறு. அனைவரும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.மேற்கொண்டு அன்னதானம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.

சித்திரைத் திருவிழா

தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீரப்ப அய்யனார் சுவாமி முதல் நாள் தேனி அல்லிநகரம் நகர்ப் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சித்திரை முதல் நாள் காலை 9 மணியளவில் அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீரப்ப அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் காவடிகளுடன் ஊர்வலமாக  நகர் பகுதியில் இருந்து மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.




இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, இளநீர் காவடி, பால்குடம் போன்ற நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை என்பதால் பக்தர்கள் மல்லிகை மலரிலான மாலைகளை சுவாமிக்குப் பூஜைப் பொருட்களுடன் கொண்டு சென்று வணங்குகின்றனர். வீரப்ப அய்யனாருக்குப் பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் என்பதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சர்க்கரைப் பொங்கல் வைத்தும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை. 


திருக்கோயிலின் கொடி மரத்தின் முன்பு அஷ்ட திக்கு விளக்கேற்றி வழிபட்டோம்.







        கொடிமரத்தை வணங்கி கோயிலினுள் சென்றோம்.




அருமையாக அய்யனார் தரிசனம் முடித்து நம் வெளியே வந்தோம். ஐயனார் வழிபாடு தர்ம சாஸ்தா வழிபாட்டின் ஒரு அம்சம் ஆகும். ஐயப்பன் வழிபாட்டின் போது அதிகளவில் ஐயனார் பாடல்கள் பாடுவார்கள். அதற்கு காரணம் இது தான். ஐயப்பன் வழிபாட்டை நாம் ஐயனார் வழிபாட்டின் மூலம் பெறுவதே ஆகும். 

வெளியே வந்ததும் சப்த கன்னியர் தரிசனம் பெற்றோம்.







அடுத்து மூத்தோன் தரிசனம்.


ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் ஏயிற்றனை
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே !

என்று போற்றினோம்.






 மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''

பொருள்:

மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

என அவர் பாதம் பணிந்தோம். கோயிலை ஒரு சுற்று சுற்றினோம்.








பின்னர் அருகில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்றோம். அறுபடை வீடு பற்றி அழகாய் காட்டி இருந்தார்கள்.










கந்தனுக்கு அரோகரா !








சுயம்பு வடிவ வளர்ச்சி

சுயம்பு வடிவிலான வீரப்ப அய்யனார் வளர்ச்சி அடைந்து வருவதாக இங்குள்ள கோயில் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுவாமிக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளைத் தற்போது இலகுவாக போட முடியவில்லை என்பதைக் கொண்டு சுயம்பு வடிவத்தின் வளர்ச்சியை அறியலாம். என்றும் அவர்கள் சொல்கின்றனர்.


இணையத்தில் கிடைத்த தரிசனத்தை மேலே பதிவேற்றியுள்ளோம். மிக மிக பல ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தோற்றம். இப்போதெல்லாம் நாம் கருவறை நாயகரை அலைபேசியில் கவருவதில்லை. 

நம்பிக்கைகள்

கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. இப்படி சொல்லப்படும் குறிகளின்படி தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக  இக்கோயில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பதும் இங்கு வரும் பக்தர்கள் சிலரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின்படி வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட சில பக்தர்கள் கோயிலுக்கு வேண்டிய பல பொருட்களை நேர்த்திக்கடனாகச் செலுத்தியுள்ளனர்.















பயண வசதி

தேனி பேருந்து நிலையப்பகுதியிலிருந்து சித்திரை முதல்நாள் திருவிழாவிற்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் சில பேருந்துகள், மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இப்பகுதிக்கு இயக்கப்படுகிறது. ஆட்டோ, கார் போன்றவைகளை வாடகைக்குப் பிடித்துச் செல்லலாம். 








புற்று தரிசனம். தாம் கொண்டு வந்திருந்த மஞ்சளை இங்கே தூவி வேண்டினார்கள்.




மேலே நீங்கள் பார்ப்பது பொங்கல் வைக்கும் காட்சி. அனைவரின் தரிசனம் பெற்று, மீண்டும் ஒருமுறை சாஸ்தாவை மனதார வேண்டி, ஐயனாரை தொழுது விடைபெற்றோம். இயற்கை சூழலில் உறவுகளோடு சென்று, பொங்கலிட்டு, தீபமேற்றி, படையலிட்டு, தொழுது வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது உறுதி. மாதமொரு இது போன்ற ஆலயங்களுக்கு சென்று ஆன்ம சுத்தி பெறுங்கள். இதோ. இனி குலதெய்வ வழிபாடு ஆரம்பிக்க உள்ளது. நம் குலம் காக்கும் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக,மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிக, மிக கடினப்பா. இஃதொப்ப மனிதன் எண்ணிடலாம், கையிலே தனம் இருந்து, உடலிலே வலு இருந்தாலே நினைத்ததை சாதிக்கலாம் என்று. அஃதொப்ப, ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் கர்ம பாவத்தை வைத்துத் தான் நிகழும். திட்டமிடுவதோ, முயற்சி செய்வதோ தவறல்ல. அதனையும்  தாண்டி இறைவனின் கருணையும், கடாக்ஷமும், ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள ஒன்பதாம் இடத்துக்குரிய கிரகம்,அதிபதி , அதை சார்ந்த பாவ புண்ணியங்கள் , இவை எல்லாம் ஒத்துழைக்கும் தருணத்தில் தான், ஒருவனுக்கு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் நிகழும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? குறிப்பிட்ட ஸ்தலத்திற்கோ, வேறு ஸ்தலத்திற்கோ வேறு பனியின் காரணமாகக் கூட ஒரு மனிதன் செல்லலாம். அங்குள்ள ஆலயத்தின் வாசலில் கூட அவன் நிற்க வேண்டி இருக்கும். ஆனால் உள்ளே செல்வதற்கு உண்டான மன நிலையோ, சூழலோ அத்தருணம் அவனுக்கு நிகழாது. ஆனால் அந்த ஆலயத்தை எண்ணாமல், வேறு ஏதோ ஒரு சிந்தனையில் ,வேறு எங்கோ செல்லும் போது, திசை மாறி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு மனிதனின் விதிப்படி நிகழும். ஆலய தரிசனம் என்றாலோ, ஸ்தல தரிசனம் என்றாலோ மிக எளிமையான விஷயம் ..சரியாக திட்டமிட்டாலே போதும் என்று ஒரு மனிதன் எண்ணிவிடக் கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்.

இதை நாம் சொல்லவில்லை. மனிதம் தாண்டிய சித்தம் பேசும் கருத்துக்கள் இவை. அகத்தியர் பெருமானின் அருள் வாக்கு இது. மீண்டும் மீண்டும் படியுங்கள், மனதில் பதியுங்கள். என்னப்பா..எப்ப பார்த்தாலும் கோயில்,குளம்னு யாராவது கேட்டால், நாம் செய்த புண்ணியமே நம்மை கோயில்,குளம் னு அழைத்து செல்கின்றது என்று நினைத்து இறைக்கு நன்றி சொல்லுங்கள். இதோ இன்று நாம் திடீரென நாளிதழை புரட்டினோம். நம் கண்ணில் அகத்தியம் கிடைத்தது.

கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ஆதனூரில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளதாகவும், அங்கு நேற்று கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. இதனைத் தான் நாம் குருவருள் என்கின்றோம். வாழ்விக்க வந்த வள்ளல் அகத்தியர் பெருமான் பொற்பாதம் சரண் சரணம்.

- அடுத்த பதிவில் இணைவோம்.

No comments:

Post a Comment