Subscribe

BREAKING NEWS

20 August 2017

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி



இதற்கு முந்தைய பதிவில் அருள் மழை பொழியும் அன்னை காமாட்சி உறைவிடத்தில் உள்ள ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை யாத்திரை செல்ல ஆரம்பித்தோம். மலையேற்றம் தொடங்கி சுமார் பாதி தூரம் 2 கி.மீ அளவில் ஓரிடத்தில் இளைப்பாறினோம்.இங்கே மேற்கொண்டு பயணிக்க இருக்கின்றோம்.வாருங்கள்,எங்களோடு வந்து ஈசன் அருள் பெறுங்கள்.அதற்கு முன்பாக சில செய்திகள் தங்களோடு பகிர விரும்புகின்றோம்.

தேனியில் பிறந்து,வளர்ந்து விட்ட நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து தான் இது போன்ற மலை இருப்பதாக தெரிகின்றது.சற்று.வெட்கப்படவும் செய்கின்றோம். இப்போவாவது இது போன்ற செய்திகள் கிடைக்கிறதே என்று மறுபுறம் மகிழவும் செய்கின்றோம். உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது என்று சொல்வார்கள்.அதுபோல் தான்,இருக்கும் இடத்தை விட்டு,இல்லாத இடம் தேடி என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றது.ஒவ்வொருவரும், தான் வசிக்கும் ஊரில்/பிறந்த ஊரில் உள்ள சிறப்புமிக்க தலங்களை கண்டிப்பாக சென்று தரிசியுங்கள்.இப்போது இல்லையென்றால் பின் எப்போது?காலம் தாழ்த்த வேண்டாம் .நாம் உணர்ந்தால் தான் நமது தலைமுறைக்கு இது போன்ற செய்திகளை கடத்த முடியும்.இல்லையேல் இவை அனைத்தும், தெரியாமலே சென்று விடும்.

 மலைகளைப்  பாருங்கள். உங்களுக்கு கற்களாகத் தெரிகின்றதா? இன்னும் நீங்கள் பார்வையின் கோணத்தை மாற்ற வேண்டும்.எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற மீசைக் கவி பாரதியின் நிழலில் சற்று ஒதுங்கி பார்த்தாலே போதும்,அவை எழுந்து நிற்கும் இறை தானே.மலையேற்றம் நமக்கு உணர்த்தும் செய்தியை ஒரு நாளாவது புரிந்து கொண்டோமா?யாரைப் பார்த்தாலும் நாங்கள் அந்த மலை சென்றிருக்கின்றோம்,இந்த மலை சென்றிருக்கின்றோம் என்று அடுக்குவார்கள்.மலைகளும் நமக்கு வாழ்வியல் நீதி உணர்த்துகின்றது.அவற்றின் உயரம் போதுமே.உயரத்தில் ஏற  வேண்டுமானால் சற்று குனிந்து நடக்க வேண்டும்.நிமிர்ந்து கொண்டு ஏறவே முடியாது.இது போல மலையை போன்ற உயரமாக வாழ்வில் செல்லும் போது,சற்று குனிந்து பணிவாய் இருங்கள் என்று உணர்த்துகின்றது.

ஏற்றத்தில் இருப்பதைப் போன்றே,இறக்கத்திலும் ஒரு செய்தி உண்டு.கீழே இறங்க நினைத்தால் நிமிர்ந்து நடக்க வேண்டும்.மலை ஏறி இறங்கி தரிசனம் செய்யும் போது,நம்மிடம் முதலில் பணிவு பிறந்து, நம்மிடம் உள்ள தாழ்வு நீங்கும். ஒன்று நீங்கினால் தானே,மற்றொன்று நம்மிடம் வரும்.பக்திக்கு தேவை பணிவு.அந்த பணிவை தான் மலை ஏற்றம் தருகின்றது.
புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மலைகளுக்கு அவை கூடுதலாகவே உண்டு. மலைகள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வல்லவை.இப்போது நாம் காணும் திரு அண்ணாமலை வேறொரு விதமாய் இருந்திருக்கும்.அந்த மலையில் நடந்து பார்க்கும் போது தான்,இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்க காத்திருப்பது நமக்கு புரியும்.இது மட்டுமா? சுத்தமான நீர் சுனைகள்,சுத்தமான காற்று,அப்பழுக்கற்ற ஆகாயம் என்று பஞ்ச பூதங்களும் நீக்கமற நிறைந்து சக்தியை தருகின்ற இடமே மலைகள்.
 மலைகள் பேராற்றலின் சேமிப்புக் கிடங்குகள்.
மலைகள் ஆற்றல் களங்கள் 
மலைகள் - பஞ்சபூத அருள் வெளிகள் 
மலைகள், அன்னையின் மடிகள்; 
மலைகள் - பசுமையின் தாயகம் 
மலைகள், நிலமகளின் மார்புகள்; 
இறையாற்றலைத் தேடும் உயிர்களையெல்லாம் அவை அரவணைக்கின்றன. 
அதனால் தான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஏறினாலும்,மீண்டும்,மீண்டும் ஈர்க்கின்றது.
தமிழ்நாட்டின் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை, பழநிமலை, மருதமலையில் தொடங்கி, உத்தராகண்டின் இமயமலையில் உறைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் வரைக்கும் மலைக் கோயில்கள் மகத்துவம் மிக்கவையாக இருப்பதன் பின்னால், மலைகளின் ஈர்ப்பு விசையும் வெளிப்படுத்தும் விசையும் இருக்கின்றன.
தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலரும் இறையோடு உரையாட மலைகளையே தேர்ந்தெடுத்தனர். அகத்தியர் பொதிகை மலையிலும், போகர் பழநிமலையிலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும், பாம்பாட்டிச் சித்தர் மருதமலையிலும்,  மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், ராமதேவர் அழகர்மலையிலும் தவமியற்றியவர்கள் ஆவர். இறைத்தாகம் கொண்ட உயிர்களுக்கெல்லாம் அவை ஆற்றல் நிறைந்த அமுதத்தை ஊட்டும் என்பதை சித்தர்கள் நன்கறிந்தவர்கள்.

என்ன அன்பர்களே.மலையேற்றம் சூட்சுமத்தை புரிந்து கொண்டீர்களா? வாருங்கள் ! ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலையில் பயணம் செய்வோம்.









மீண்டும் ஒருமுறை நாம் கடந்து வந்த பாதை மேலே காட்டியுள்ளோம். இங்கே இருந்து மேலே செல்லும் போது,அவசியம் நிர்வாகி திரு.ராமுஜி அவர்கள், வயோதிகர்கள் மற்றவர்கள் முன்னே செல்லட்டும்.நீங்கள் எல்லாரையும் அனுப்பிவிட்டு ,கடைசியாக வாருங்கள் என்றார்.நாங்களும் சரி என்று சொல்லிவிட்டு,யாத்திரையைத் தொடர்ந்தோம்.இங்கிருந்துதான் சற்று கடினமான மலை ஏற்றம் இருக்கும் என்று உணரவும் இல்லை. காலில் காலணியும் இல்லை.

சற்று மலை வறண்டு காணப் பட்டாலும்,பசுமையின் போர்வையில் நமக்கு மன மகிழ்வாய் இருந்தது.
மேலே செல்ல செல்ல,பாதையும் கற்களும்,முட்களும்,சரளைக் கற்களுமாக இருந்தது.



இங்கிருந்து படிக்கட்டு பயணம் போல் இருந்தது. மனதார படிக்கட்டுகள் போட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறி மலை ஏறினோம். முழுதும் இது போல் இருக்கும் என்று எண்ணினோம்.ஆனால் இது சற்று தூரம் தான்.மீண்டும் புதிய பாதை...நாம் ஏற்கனவே சொன்னோமே அந்த பாதை தான்.













மனதில் உறுதி வேண்டும் என்று மனதில் நினைத்து மீண்டும் நடக்கலானோம்.நாம் கடைசியில் தான் சென்று கொண்டிருக்கின்றோம்.எனவே தான் தங்களுக்கு இந்த படங்களின் மூலம் அப்டேட் செய்ய முடிகின்றது.கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று மனதில் பாடிக்கொண்டே சென்று கொண்டே இருந்தோம்.மற்ற அனைவரும் முன்னே சென்று கொண்டிருந்தனர். இணைப்புப் படங்கள் அதிகமாக இருப்பதால் ,ஒவ்வொரு தொகுப்பிலும் படங்கள் சேர்த்து மொத்தமாக தருகின்றோம்.

மலையில் நீரின்றி, முள் மரங்கள் குறிப்பாக சப்பாத்திக் கள்ளி போன்ற மரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.வெயில் சற்று அதிகமாக இருந்தது.அந்த வெயிலில் அந்த மரங்களை பார்க்கும் போது,சற்று வருத்தமாக இருந்தது.கால் பாதம் சுட ஆரம்பித்தது.எனவே தான் யாத்திரையில் காலணி அணிந்து கொள்ள அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.நீங்களே பாருங்களேன். கால் பொசுக்கி எடுக்க ஆரம்பித்து விட்டது.தாங்க முடியவில்லாய்.உடன் வருபவர்களிடம் சொல்லிவிட்டு,ஓட்டமும்,நடையுமாக ஆரம்பித்து விட்டேன்.

மலையில் உயரமும் சற்று செங்குத்தாக இருந்தது. சுமார் ஒரு 30 நிமிட நடையில் மலையின் முகடு ஒட்டிய பகுதிக்கு சென்று விட்டேன்.அப்பாடா. முன்னே சென்ற சிலரை சந்தித்த பின்னே தான் நிம்மதியாக இருந்தது.எங்களுடைய யாத்திரை நிர்வாகி, அனைவரும் மலை உச்சியை அடைந்த பிறகு அல்லது அதன் அடி பகுதி நோக்கி செல்லும் போது ,இந்த வெயில் மாறிவிடும் என்றார்.மலை முகடை நெருங்க ,நெருங்க..தண்ணீர் தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.யாரிடமும் தண்ணீர் இல்லை.தண்ணீர்..தண்ணீர் என்று மிகுந்த கண்ணீரோடு நடக்க ஆரம்பித்தோம்.எங்கும் இளைப்பாற வில்லை.

மலை முகட்டில் கீழே எடுத்த காட்சிகள் உங்களுக்காக 





இங்கே வந்தவுடன்,சற்று குளுமையை உணர ஆரம்பித்தோம். லேசாக காற்றும் வீசியது. நெஞ்சில் துணிவுடன் நடை ஆரம்பமானது.இந்த இடத்திலிருந்து, மலை உச்சி கோவில் அடைய சுமார் 30 நிமிடம் நடக்க வேண்டும். பாதைகள் அங்கொன்றும்,இங்கொன்றுமாக இருந்தது. பார்த்து கவனமாக செல்ல வேண்டும்.இல்லையேல் சுற்றலில் தான் நாம் இருப்போம்.ஆனால் அடிவார மலையை அடைந்ததும், நாம் அடைந்த ஆனந்தம் சொல்ல முயலாத உணர்வு. லேசாக மெல்லிய காற்றில், லேசான குளிரின் அரவணைப்பில், லேசான மழைத் தூறல் ..அப்பப்பா ..ஆனந்தம் தானே. அங்கிருந்து மற்ற இடங்களை காட்சிப்படுத்தினோம். மேகங்கள் தொட்ட மலையில் ..அனைத்தும் இறையே என்று உணர்ந்தோம்.



கோவிலை ஒட்டிய பகுதிக்கு இந்தோ வந்துவிட்டோம்.ஒவ்வொருவராக வருவதை கவனியுங்கள்.







இதோ கோவில் வந்து விட்டோம். நேரே கோவில் சென்று, சிவ பெருமானை தரிசித்து விட்டு, அப்படியே கோவிலை சுற்றிப் பார்த்தோம்.கட உள் நம்மிடம் வசமாகிய உணர்வாய் அந்த பரமே வசமானால், பரவசம் தானே.சிறிய கோவில் தான் என்றாலும், நெஞ்சை விட்டு அகலாத கோவில்.முதலில் விநாயகரை தரிசித்தோம்.  நவகிரக நாயகர்களை வேண்டினோம்.அங்கிருந்து பின்னால் பார்த்தால் சோத்துப்பாறை அணைக்கட்டு தெரிந்தது.ஏறி வந்த பாதையும், மேலே கண்ட கோவிலும்..கோவிலைக் கண்டதும் உடல் வலி அனைத்தும் பறந்து போய் விட்டது.








நவக்கிரக சன்னதி 


சோத்துப்பாறை அணைக்கட்டு 



                                                            கோவிலின் முன்புறத் தோற்றம்







சுமார் 1 மணி அளவில் கோவில் அடைந்து விட்டோம். அப்படியே கோவிலை சுற்றி வந்தோம்.என்னவொரு தாகத்தில் நடந்து வந்தோம். 
மேலே வந்த உடன்,மழையின் சாரலில் தாகம் இல்லை.அப்படியே சுற்றி வரும் போது ,நீர் சுனைகள் கண்டோம்.பாசி படிந்து, பச்சையாய் இருந்தது.நடந்து வந்த களைப்பு நீங்க ஒரு குளியல் போட்டோம்.பச்சைத் தண்ணீர் என்று சொல்லி,கேட்டு இருப்போம்.
இங்கு..உண்மையிலே பச்சைத் தண்ணீர் தான்.









                                                           இங்கே தான் குளியல் 



அனைவரும் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு வந்து இருந்தார்கள்,அதை கோவில் குருக்களிடம் கொடுத்துவிட்டு, இளைப்பாறினோம்.2 மணி வரை தரிசனம் செய்த அனுமதி. 2 மணிக்கு மதிய உணவு. அதற்குள் சுவாமி தரிசனம் பெற உள்ளே சென்றோம்.




கோவிலின் வெளியே விநாயகர் சன்னதி 




                                                   நால்வரோடு கோவிலின் நுழைவு வாயில் 



                                                                    கோவிலின் உள்ளே 




கோவிலின் உள்ளே சென்று, மனமுருக வேண்டிக் கொண்டிருந்தோம். அந்த அமைதியான சூழலில்மெய்யை நமக்கு உணர்த்திக் கொண்டிருந்தார் நம் ஈசன்.மாசற்ற ஜோதியாய் இருக்கும் பரம்பொருள், நம்முள்ளும் அந்த ஜோதியை உணர்த்தினார். இதோ..தீபாராதனை காட்ட போகின்றார்கள்.இதற்குத் தானே நாம் ஆசைப்பட்டோம் தலைவா! நமக்குத் தெரிந்த துதிகளை உதடுகள் உச்சரித்து.நீங்களும் தயாராய் இருங்கள். பார்த்து பரவசப்படுங்கள்.













மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம்  பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே 
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட 
பேராது நின்ற பெருஞ்கருணை பேராறே.,,,,,

கண் குளிர..இல்லை ..இல்லை..மெய் குளிர தரிசனம்  பெற்று,வெளியே வந்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்தோம்.கோவில் குருக்கள் கோவில் பற்றி சில வார்த்தைகள் பரிமாற தொடங்கினார்.இந்த தலத்தின் சிறப்பு - குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலையில் உள்ள ஈசன் அருள் புரிந்து வருகின்றார் என்பது கூடுதலான தகவல். ஸ்ரீ மிருகண்ட மகரிஷி குழந்தை வரம் வேண்டி இங்கு 12 ஆண்டுகள் தவம் புரிந்துள்ளார்.பின்பு தான் அவருக்கு மார்க்கண்டேயர் பிறந்தார் என்று சொன்னார்கள்.கோவிலின் தலை வாசல் எப்போதும் பூட்ட மாட்டார்கள்.இங்கு குழந்தை வரம் பெற்றவர்கள், ஒவ்வொருவராக தங்களால் இயன்ற திருப்பணியை செய்து வருகின்றார்கள் என்பது போன்ற தகவல்களை கோவில் குருக்கள் கூறினார்கள்.



சிறிய சத்சங்கம் நிறைவு பெற்ற  பின்பு, சுமார் 1 மணி நேரம் ஓய்வெடுத்தோம்.பின்பு 5 மணி அளவில் மலையிலிருந்து கீழே இறங்குவதாக திட்டம்.அதற்கு முன்பாக இறங்குபவர்கள், சொல்லிவிட்டு இறங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.இரண்டு மணி நேரம் மீண்டும் ஐயன் தரிசனம்,இங்கு எப்போதும் விளக்கு ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்.எனவே,வருகின்ற அடியார் பெருமக்கள் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.


                                            கோவிலின் உள்ளே,வெளியே உள்ள இடங்கள்



                                                 கோவில் மற்றும் சிறிய சத்சங்க நிகழ்வின் துளிகள் 


  மேலும் அங்கே பேசிக்கொண்டு இருந்தோம்.சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது கோவிலின் பின்னே சற்று தொலைவில் தாத்தா சுவாமிகள் இருப்பதாக சொன்னார்கள். அதைப்பற்றி மறந்து விட்டு,வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்.மாலை 4 மணி இருக்கும்.என்னுடன் வந்திருந்த சென்னை அன்பர் திரு.பாஸ்கர் தாத்தா சுவாமிகளை பார்க்க செல்லலாமா என்றார்.இவ்வளவு  தூரம் வந்தாயிற்று.பார்த்துவிட்டுச்  செல்லலாம் என்று முடிவெடுத்தோம். கோவிலின் பின்புறம் அப்படியே இறங்கினோம். சில இடங்களில் அம்புக்குறியீட்டு பாதை இருந்தது.அப்படியே நூல் பிடித்தாற்போல் சென்றோம், அங்கு சென்றால் வன தேவதைகள் கோவில் இருந்தது.நன்கு வேண்டினோம்.நன்றி கூறினோம். அதனருகில் மற்றொரு கோவில் இருப்பது கண்டோம்.சரி.அங்கே சென்று பார்க்கலாம் என்று சென்றோம். ஆம்.தாத்தா சுவாமிகளே தான்.இங்கு மாலை  வந்து வேண்டி,படையல் இட்டு ,நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனை செய்து விட்டு செல்ல வேண்டுமாம். மறு  நாள் காலை, சென்று பார்த்தால் , நாம் இட்ட படையல் உண்ணப்பட்டு இருந்தால்,நம் வேண்டுதல் நிறைவேறும் என்று சொன்னார்கள்.மெய் சிலிர்க்க வைத்தது.



பச்சை தண்ணீர் புட்டியில் ஹி ..ஹி 

    

                                    வன தேவதைகள் மற்றும் தாத்தா சுவாமிகள் 

பதிவைப் படித்த அன்பர்களுக்கும் எங்களோடு பயணம் செய்த திருப்தி கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம்.சுமார் 4:30 மணி ஆகிவிட்டது. இனி மலையில் இருந்து கீழே இறங்க வேண்டியது தான். மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கத் தொடங்கினோம். வழக்கம் போல், மலை இறக்கம் ஏற்றதைவிட எளிதாக இருந்தது.கற்கள் அதிகம் இருந்ததால்,சரளைக் கற்கள் சற்று காலை பதம் பார்த்தது. மீண்டும் எப்போ அழைப்பாரோ என்ற ஏக்கத்தில் இறங்க ஆரம்பித்தோம்.மெதுவாக தான் இறங்கினோம்.ஏனென்றால் இறங்கும் போது ,வழுக்கிவிட வாய்ப்புண்டு.





சுமார் ஒரு 2 மணி நேரத்தில் மலை அடிவாரம் அடைந்தோம். கற்பூரம் ஏற்றி மலைத் தெய்வத்திற்கு நன்றி சொன்னோம்.இந்த மலை தற்போது முருக மலை என்றும் வழங்கப் படுகின்றது. மிருகண்ட மகரிஷி மலை என்ற பெயர் மருவி, முருக மலை என்றாயிற்று.


கற்பூர ஜோதியை வணங்கும் போது, நம் முன்னோர்கள்,தாத்தாக்களான சித்தர் பெருமக்கள் இயற்கைக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்துள்ளனர் என்பது புரிந்தது.

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்

ஜோதி ஜோதி ஜோதி பரஞ் 
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.                                          

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி. 

திநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

என்று மனதார பாடிவிட்டு, வேனிற்கு சென்றோம். அன்னை காமாட்சியை தரிசிக்கவும் விரும்பினோம்.ஆனால் இங்கேயே நேரம் போதவில்லை.மானசீகமாக அன்னையை வணங்கினோம்.
அடுத்த முறை அன்னையைப் பற்றி அறிய விழைகின்றோம்.

ஸ்ரீ மிருகண்ட மகரிஷிகள் பொற்பாதம் சரணம் ! சரணம் !!



 முந்தைய பதிவுகளுக்கு :-

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலைhttp://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html



இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html




No comments:

Post a Comment