Subscribe

BREAKING NEWS

11 September 2017

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3)


வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் இரண்டு கேள்வி பதில் பதிவாக இருந்தது.காரணமும் நீயே..காரியமும் நீயே.அனுபவிப்பதே நாம் தான்? மனம் உள்ளது.அனைத்துமே அவனாக இருந்தாலும், மனத்தில் இருந்து எண்ணத்தை உருவாக்குவது நாம் தானே? அப்படி இருக்க நாம் தானே விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.இனிமேலாவது நம்முடைய சிக்கல்களுக்கு மற்றவரை குறை கூறாதீர்கள்.நாம் விரும்பியபடியே தான் இறைவன் நமக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.நமக்கு சரியாக அவரிடம் கேட்க தெரியவில்லை.சிற்சில மாற்றங்கள் நம்மிடம் செய்தால் தான்,நாம் சரியானவற்றை அவரிடம் கேட்க முடியும்.அடுத்து கோபியர்கள் பற்றி ஒரு விரசமான கேள்வி.

ஆனால் பதிலின் மூலம்,நாம் பற்பல செய்திகளை உணர்ந்து இருப்போம்.பதிவின் இறுதியில் முந்தைய தொடரின் பதிவுகள் கொடுத்துள்ளோம்.பதிவினை பார்க்காதவர்கள் ஒருமுறை சென்று படித்து பார்க்கவும். ஏற்கனவே படித்து இருந்தாலும்,மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.அப்போது தான் நாம் சில மாற்றங்களை நம்முள் கொண்டு வர இயலும்.சரி.இந்த வார தொடருக்குள் செல்வோமா?

தோழி -- ஆசைப்படாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ஆசைகள் என் மனக் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாகவே தோன்றுவதாக நான் உணர்கிறேன். பிறகு நான் என்னதான் செய்வது ?




இராம் மனோகர் - ஒரு சராசரி மனிதன் என்கிற நிலையில் மனதில் எழும் எண்ணங்களை நம்மால் எழாமல் இருக்கும்படிச் செய்ய முடியாது. சூழல், முந்தைய பதிவுகள், பிறருடைய எண்ணங்களின் தூண்டுதல் இவையெல்லாம் நம்மையறியாமலேயே நமக்குள் எண்ணங்களை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே நம்மால் எண்ணங்களை எழாமல் செய்ய முடிவதில்லை. யோகிகளுக்கு, ஞானிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். நாம் யோகிகளோ, ஞானிகளோ அல்ல. அதே சமயம் எழுந்த பிறகு அந்த எண்ணங்களை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுதலிக்கவோ நம்மாலும் முடியும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியேதுமில்லை. ஆசைகளுக்கும் இது பொருந்தும். ஏனெனில் ஆசைகளும் எண்ணமெனும் வடிவில்தான் தோன்றுகின்றன. எண்ணங்களைப் போலவே ஆசைகளும் தோன்றுவதும், ஒடுங்குவதுமாகவே இருக்கின்றன.

சரி இந்த ஆசைகள் ஏன் தோன்றுகின்றன ? ஏனென்றால், உயிர்களனைத்தும் பேரின்பத்தில் இருந்து தோன்றியவைகள்தாம். பேரின்பமே அவற்றின் இயல்பாக உள்ளது. ஆனால், புலன் எனும் கட்டுக்குள் வந்த பிறகு அவற்றால் இன்பத்தை முழுமையாக அடைய முடிவதில்லை. அந்த இன்ப வேட்கையே ஆசைகளாக எழுகின்றன. ஒரு தொட்டில் செடி ஒன்றை வளர்த்து வருகிறோம். அது சூரிய வெளிச்சத்தைத் தேடி தன்னைக் கொண்டு செலுத்துவது எதற்காக ? எதற்காகவென்றால் இன்பத்திற்காகத்தான். விலங்குகள் இரையையும், நீரையும் தேடி காடு முழுவதும் சுற்றித் திரிவது எதற்காக ? இன்பத்திற்காகத்தான். பறவைகள் குளிர் காலத்தில் ஆயிரக்க கணக்கான மைல்கள் பறந்து சென்று கூடு கட்டி வாழ்வது எதற்காக ? இன்பத்திற்காகத்தான். இவற்றைப் போலவே நாமும் பட்டம், பதவி, பணம், துணை, மக்கள் என்று பல விஷயங்களின் மூலமாக இன்பத்தை அடைவதற்காக அவற்அது தட்டிப் றைத் தேடி அலைகிறோம்.

இத்தகைய இன்ப நாட்டமே ஆசைகளாக வடிவெடுத்து வருகின்றன. ஆனால், நாம் இன்பத்தை முழுமையாக அடைந்தோமா ? இல்லை. இன்பம் என்பது வெளியில் இருந்து வருவதல்ல. இன்பம் வெளியில் இருக்கிறது என்று நினைப்பது ஒரு மாயை. எவற்றையெல்லாம் தேடி நாம் இன்பத்தை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அவையனைத்துமோ நிலைத்து நிற்பதில்லை. இன்று ஒருவன் பெற்ற வெற்றி எனும் இன்பத்தை நாளை வேறொருவன் தட்டிப் பறித்துக் கொள்கிறான். அவனிடமிருந்தும் அது தட்டிப் பறிக்கப்படும். சாதனை படைக்கிறேன் என்று ஒருவன் இமயத்தில் உச்சிக்குப் போகிறான். சாதனை படைக்கிறான். ஆனால், அங்கேயே அவனால் இருக்க முடியுமா ? முடியாது. இறங்கி வந்துதான் ஆக வேண்டும். நாளை வேறொருவன் இதை விட உயரத்தில் ஏறி இவனை விஞ்சி விடுவான். நமது இந்த வாழ்க்கையும் அப்படித்தான்.




இன்பத்தை அடைய வேண்டும் என்று பலவிதமான ஆசைகளுக்கு இடமளிக்கிறோம். விளைவு அந்த ஆசைகளே நமக்கு துன்பங்களை, கவலைகளை, துக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த உண்மையை ஒருவன் புரிந்து கொண்டால், அவன் ஆசைகளுக்கு இடம் கொடுக்க மாட்டான். ஆசை என்பது வெட்ட வெட்ட முளைக்கும் அரக்கனின் தலையாகும். ஒன்றிலிருந்து ஒன்று என்று முடிவேயில்லாமல் வளர்ந்து கொண்டே போகும். நாம் நம் சுயத்தை, பேரின்பதந்தை அடைவதற்கு அதுவே தளையாகும். ஆசைப்பட்டதை அடைவதற்கு முன் நாம் எப்படி இருந்தோம் ? நிம்மதியாக இருந்தோம். ஆசை வந்து விட்டது. இனி இச்சித்ததை அடையும் வரையிலும் நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. சரி எப்பாடுபட்டாவது இச்சித்ததை அடைந்து விடுகிறோம். மீண்டும் நிம்மதி கிடைத்து விடுகிறது. இப்பொழுது சொல்லுங்கள் நாம் அடைந்தது இச்சித்ததையா ? நிம்மதியையா ?

உண்மையில் நாம் மீண்டும் அடைந்த நிம்மதிதான் நமக்கு இன்பத்தை தந்ததேயல்லாமல், நாம் இச்சித்த அந்த வஸ்துவல்ல. இதுதான் நிதர்சனமான உண்மை. நாம் நினைத்துக் கொள்கிறோம், அந்தப் வஸ்துவால்தான் நமக்கு இன்பம் கிடைத்தது என்று. வஸ்துவாலல்ல ஆசைப்பட்டதால் தொலைத்த, இழந்த நிம்மதியை, மன அமைதியை மீண்டும் பெற்றுக் கொண்டதால்தான் நமக்கு இன்பம் ஏற்பட்டது என்பதை யாரொருவர் உணர்ந்து கொள்கிறாரோ, அவரை எந்த ஒரு புறச் சூழலோ, முந்தைய வினைப் பதிவுகளோ, பிறரின் எண்ணத் தூண்டுதல்களோ ஆசைவயப்படடுத்தவே முடியாது.



கேள்வி - நீங்கள் சொன்னது போல இதிகாசம், புராணம் எல்லாம் படிக்கும் பொழுது சில இடங்களில் விரசமாகத்தான் இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த விஞ்ஞான யுகத்திலும் இதிகாசம், புராணம், வேதாந்தம் எல்லாம் தேவைதானா ?






இராம் மனோகர் - நான் அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. விரசம் என்று நீங்கள் குறிப்பிடுகிற அந்த விஷயத்தை ஆண், பெண், அலி மட்டுமல்ல இன்ன பிற உயிரனங்களும் கூட தவிர்க்க முடியாது. எனவே அந்த உணர்வை நெறிப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்கிற நிலையில் இதிகாச, புராணங்கள் அந்த வேலையைச் செய்கின்றன. விஞ்ஞானத்திற்கு அஸ்திவாரமே வேதாந்தம்தான். வேதாந்திதான் விஞ்ஞானியானான். வேதாந்தம்தான் விஞ்ஞானமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், இந்த விஞ்ஞானத்தை புரிந்து கொள்கிற அளவு நாம் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியாது. அது ஆகாயத்தைப் போல பரந்து விரிந்தது.
மனிதன் நேரடியாக விஞ்ஞானியாகத் தோன்றி விடவில்லை. கற்காலம் தொட்டு தற்காலம் வரை பல தரப்பட்ட படித்தரங்களைக் கடந்துதான் இன்றைய நிலையை எட்டியுள்ளான். அதிலும் வேதாந்த காலம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைகளில் முக்கியமான கால கட்டமாக இருந்திருக்கிறது. அது வரை தன்னைப் பாதுகாத்துக் கொண்டு நிறைவாக வாழ்வதற்கு மட்டுமே மனிதன் முயற்சி செய்து கொண்டிருந்தான் அதற்குப் பிறகுதான் தனக்கு ஆதாரமான சக்தியைப் பற்றி மனிதன் யோசித்து, அதைத் தேடத் துவங்கினான். வேதாந்த காலம்தான் மனிதனின் அறிவு வளர்ச்சியில் முக்கிமான கால கட்டமாக விளங்குவதோடு, அதில் பெரும் பங்கும் வகிக்கிறது.
அத்தகைய வேதாந்தத் தத்துவங்களை நேராக அறிந்து கொள்ள சூழல் அமையப் பெற்றவர்கள் பல பிறவிகளில் அதற்காக பண்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பண்பாடு அடைந்தவர்களுக்கே அப்பேராற்றல் வாய்க்கிறது. அவர்கள் யோசிக்கிறார்கள். சாமான்யரும் இதை அறிந்து கொள்ளும் விதமாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்கிறார்கள். அதற்காக அரும்பாடு படுகிறார்கள். அதன் விளைவுகளே உபநிடதங்கள், தர்சனங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம். இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ராமர் பரமாத்மா தத்துவம். சீதை ஜீவாத்மா தத்துவம். இராவணன் ரஜோகுணம் நிறைந்த மனோ தத்துவம். ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகியவற்றைப் பத்து தலைகளாகக் கொண்டது மனது. இந்த மனம் எண்ணும் அரக்கன் ஜீவாத்மனை கவர்ந்து தனதாக்கிக் கொள்ள முயல்கிறான்.

ஜீவாத்மனோ பரமாத்மாவிடம் போய்ச் சேர வேண்டும் என்று அழுகிறது. இங்கே ஆஞ்ஜநேயன் என்ற குரு தத்துவம் வருகிறது. ஆஞ்ஜநேயன் எனும் குரு தத்துவம் நான் ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு சேர்த்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறுகிறது. அதன் பிறகு இராமன் என்னும் ஈசனின் அருளுக்கும், இராவணன் என்னும் மனதின் மருளுக்கும் போராட்டம் நடக்கிறது. முடிவில் இராவண சம்ஹாரம் எனும் மனோநாசம் நிகழ்கிறது. ஜீவாத்மன் பரமாத்மாவோடு சேர்கிறது. ஆத்ம சாதகர்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இவ்வாறு இராமாயணம் நடந்தேறுகிறது. மற்ற பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் வாழ்வின் வெவ்வேறு கூறுபாடுகளை விளக்குகின்றன.
மனிதனுடைய பிரபஞ்ச வாழ்வே ஒரு போராட்ட களம்தான். மனிதனுடைய உடல்தான் குருக்ஷேத்ர பூமி. நல்லியல்புகள் பாண்டவர்கள். கெட்ட இயல்புகள் கௌரவர்கள். இரண்டு இயல்புகளுமே மனிதனிடத்திலே இருந்துதான் தோன்றுகின்றன. எனவே அவைகள் தாயாதிகள். பகவான் எல்லோருடைய உள்ளத்திலும் சாரதியாக வீற்றிருக்கிறார். அவர் ஆயுதம் எடுத்து போர் புரிவதில்லை. ஆனால், அவருடைய அருள் நல்ல இயல்புகளுக்கே உரியதாக இருக்கிறது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் முடிவில் தர்மம் வெல்கிறது. இதன் சூக்குமம் என்ன வென்றால் மனிதன் தர்மவானாக இருந்து கர்மங்களை சரிவரச் செய்து அதர்மத்தை வென்று பிறகு பரமனை அடைய வேண்டும்.

வாழ்க்கையின் சூக்குமமான, சிக்கலான பிரச்சனைகள் எல்லாம் இந்த இரண்டு இதிகாசங்கள் மூலம் விளக்கம் பெறுகின்றன. புராணங்களும் அவ்வாறே. பரமார்த்திகத் தத்துவங்களை மக்களின் பொது உடமை ஆக்குவதே புராணங்களின் நோக்கம். பாற்கடல்,தேன்கடல், அமிர்தக்கடல் போன்றவைகள் எல்லாம் உண்மையில் கிடையாது. அவைகள் வாயிலாக வாழ்க்கை எல்லையற்றது, இன்பமயமானது என்று கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு புராணங்களின் உள்ளும் பல்வேறு ஞான தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. தேடினால் கிடைக்கும். மூழ்கினால் முத்தெடுக்கலாம். அதற்கு மூச்சை அடக்கி பழகிக் கொள்ளுங்கள்.



நண்பர் - பழைய வேதாந்தம், சித்தாந்தம், ரிஷிகள் சொன்னார்கள், சித்தர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் பழங்கால நூல்களை மையப்படுத்தி பேசிக் கொண்டிருப்பது வலைத் தளங்களில் ஒரு பொழுது போக்காக ஆகி விட்டது. நீங்களும் அந்த வட்டத்திற்குள் வந்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது ! நவீன விஞ்ஞான யுகத்தில் மனிதன் என்ன செய்ய முடியுமோ அதைச் சொல்வதுதானே நல்லது ? 




இராம் மனோகர் - பிரயோஜனமா இல்லையா என்ற முடிவை யார் எடுப்பது ? அவரவர்களுக்கு எது பிரயோஜனம் என்று அவரவர்களுக்குத் தெரியும். விஞ்ஞானத்தைப் பொருத்த வரை அது இயற்கையில் உள்ள புற விஷயங்களை நுணுக்கி ஆராய்ந்து தெளிவிக்கிறது. மெய்ஞானம் என்பது அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு தானும் இந்த இயற்கையின் ஒரு அம்சம்தான் என்பதை உணர்ந்து, தனக்குத் தானே தனக்குள் உண்மையை, அந்த மெய்ப் பொருளைத் தேடி அடைவது. விஞ்ஞானத்தின் முடிவு மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், அடைந்து விட்ட மெய்ஞானமாகிய உண்மையின் தத்துவம் என்றும் மாறாது. ''அன்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் (பரம்பொருள்)'' என்று ஒரு ஞானி சொன்னது இதைத்தான். உண்மைக்கு காலங்கள், யுகங்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. நீங்கள் காணுகிற புற வளர்ச்சிகளெல்லாம் மனதின் விருத்திகளே. ஒரு கட்டிடத்தின் பலமான அஸ்திவாரம் என்றும் மாறாது. ஆனால், அதற்குமேல் கட்டப்பட்ட கட்டுமானத்தை அதில் குடியிருப்பவர்கள் தங்கள் சௌகர்யங்களுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.

அது போல ஆதாரப் பொருள் ஒன்றுதான். அது மாறுவதேயில்லை. அதை யாராலும் மாற்றவும் முடியாது. அதே சமயம் அதற்கு மேல் ஏற்படுகிற விருத்திகள் என்பது மாறிக் கொண்டே, விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இது ஒரு உதாரணம்தானே தவிர, இதை சாக்காக வைத்துக் கொண்டு எதிர் வாதங்களை வைக்கக் கூடாது. புரிதலுக்காக மேற்கோள் காட்டப்படுகிறது அவ்வளவுதான். நீங்கள் குறிப்பிட்ட வேதாந்தம், சித்தாந்தம், ரிஷிகள், சித்தர்கள் நூல்கள் அனைத்துமே அவர்களின் ஞானத்தின் வெளிப்பாடுகள். அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் எக்காலத்திற்கும் பொருந்தும். அவர்கள் கடைபிடித்த வாழ்க்கை நடைமுறைகள் வேண்டுமானால் நவீன காலத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதாவது சாஸ்திரம் என்பது மாறாது. அது சாஸ்வதமானது, ஸ்திரமானது. எனவேதான் சாஸ்திரம் என்கிறார்கள். ஆனால், சம்பிரதாயங்கள் மாறும். அதாவது அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்றவாறு சாஸ்திர நெறிகளை தவறாமல், முறையாகக் கடைபிடிப்பது சம்பிரதாயம் எனப்படும்.

இனி ஒரு கேள்வியும் வருகிறது, அது என்னவென்றால் ''இத்தகைய நூல்களுக்கு பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கிறார்களே ? பொருள் கூறுகிறார்களே ? என்ற கேள்வி எழுவது இயல்புதான். அவரவர்கள் அறிவின் தரத்திற்கேற்ப அவரவர்கள் பொருள் கூறுகிறார்கள் அவ்வளவுதான். ஆனால், கவனித்துப் பார்த்தால், அந்தப் பொருள்கள் எதுவுமே மனிதனை தவறான பாதையில் செல் என்று சொல்வதில்லை. எனவே நமக்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க வேண்டும் அவ்வளவுதான். இதே கேள்வியை காஞ்சிப் பெரியவரிடம் ஒருவர் கேட்டார். அவர் என்ன சொன்னார் தெரியுமா ?

ஒரு தேசத்தின் பண்புக்கு அளவுகோள் எது ? ஒரு தேசம் என்று இருந்தால், அதில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வாய்ப்பில்லை. திருடன், பொய்யன், கொலை செய்பவன், மோசக்காரன் எல்லோரும் இருக்கத்தான் செய்வார்கள். அது மனதின், மாயையின் வெளிப்பாடு. எவ்வளவோ கெட்டவர்கள் இருந்தாலும், ஒரு தேசம் மற்ற தேசங்களை விட உயர்ந்தது, அது ஒரு நாளும் கீழ்மையடையாது என்று எதை வைத்து முடிவு செய்வார்கள் ? ஒரு வைத்தியரிடம் ஒருவன் பல உறுப்புகள் கேடாகி விட்டன என்று போகிறான். அவர் என்ன செய்கிறார் ? முதலில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து இதயத்தை பரிசோதிக்கிறார். இதயம் நன்றாக வேலை செய்கிறது, எனவே மற்றவற்றை சரி செய்து விடலாம் என்று முடிவு செய்வார். அது போலவே ஒரு தேசத்தில் எத்தனை கேடுகள் இருந்தாலும், அவற்றை சரி செய்வதற்கும் ஒரு இதயஸதானமும் இருக்கிறது.



அது என்ன தெரியுமா ? அந்த தேசத்தில் தோன்றிய ஞானிகள், மகான்கள், மகா கவிகளின் வார்த்தைகளாகிய நூல்களே ஆகும். அவைகள்தான் அந்த தேசத்தின் இதயமாகும். அவைகளிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தேசத்தின் உயிர் துடிப்பாகும். அவற்றை உரைத்தவர்கள் வாழ்க்கை முறை தற்காலத்து வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதனவாக இருக்கலாம், ஆனால், அவர்கள் ஞானமானது என்றுமே நூல் வடிவில் மாறாமல் இருக்கிறது. அவர்களிலும் கூட உயர்ந்தவர்கள் மட்டமானவர்கள் இருந்திருக்கக் கூடும். அதில் உயர்ந்த ஞானிகளின் வார்த்தைகள்தாம் காலப் பிரவாகத்தில் அமிழ்ந்து போகாமல் என்றும் மேலே விளங்கிக் கொண்டேயிருக்கும். அப்படிப்கட்டவர்களின் வாக்குகளே நம் ஆன்மீக, கலாச்சார வாழ்க்கைக்கு பிரமாணமாகும். அது எக்காலத்திலும் மாறாதது. அதை எப்படிப் பொருள் கொண்டாலும், அது கீழ்மையைத் தராது என்றார்.

பொழுது யாருக்காகவும் நிற்காது. அது போய்க் கொண்டேதான் இருக்கும். அதை பிரயோஜனமான வழியில் பயன்படுத்திக் கொண்டு தானும் நல்வழிப்படுவதோடு, மற்றவர்களையும் செம்மைப்படுத்துவது நல்ல விஷயமாகவே எனக்குப்படுகிறது. தங்களுக்கு இந்த விஷயங்கள் பிடிக்கவில்லை என்றாலோ, வெறும் பொழுது போக்காகத் தெரிந்தாலோ, நீங்கள் இவற்றைப் புறக்கணித்து விட்டு வேறு பிரயோஜனமான வேலையை பார்க்க வேண்டியதுதானே ? அவர்கள் என்ன சொல்கிறார்கள் ? இவர்கள் என்ன சொல்கிறார்கள் ? அவர் என்ன செய்கிறார் ? இவர் என்ன செய்கிறார் ? என்று பார்ப்பதுதான் உங்களுடைய பிரயோஜன 
பொழுது போக்கு போலிருக்கிறது !!!

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி -திரு.ராம் மனோகர்

முந்தைய பதிவுகளுக்கு :-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html


வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment