Subscribe

BREAKING NEWS

31 October 2017

அறம் செய்ய விரும்பு

அறம்

என்ற ஒற்றைச் சொல் தான் நம் வாழ்தலை உணர்த்துகின்றது. வாழ்வின் உன்னதத்தை புரிய வைக்கின்றது. எப்போது? இந்த அறம் என்ற சொல்லை நாம் கேட்டோம் என்று நினைவு படுத்திப் பாருங்கள். தொடக்கப் பள்ளியில். ஆத்திச்சூடி...அறம் செய்ய விரும்பு  என்று சொல்லி படித்திருப்போம். உச்சரிக்க எளிதாக இருப்பதால் பள்ளியில் உள்ளதோ? மனதில் எளிதில் பதிவதால் பள்ளியில் வைத்தார்களா? நம் பழமை, பண்பாடு பேசும் அற நூல் அன்றோ?

இன்றைய சமூகம் சீர்கெட்டுப் போனதற்கு மிக முக்கிய காரணம் அறம் செய்ய விரும்பாததே.வெறும் ஏட்டுக் கல்வி ? என்பதே இதற்கு காரணம்.

நமக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. ஒரு செயலைச் செய்ய சொல்ல வேண்டும் என்றால் அதை செய்.இதை செய் என்று தானே சொல்வோம். அப்படிப் பார்த்தல் அறம் செய் அல்லது அறம் செய்க என்று கட்டளை தானே இட்டிருக்க வேண்டும். மாறாக அறம் செய்ய விரும்பு  என்று சொல்கிறார்கள் என்றால் இதில் வேறு ஏதோ செய்தி இருப்பதாகத் தானே அர்த்தம்.

நாம் ஒரு செயலை செய்கிறோம் என்றால் நாம் அதற்கு முன்பு அந்த செயலைப் பற்றி விரும்புகிறோம் என்று அர்த்தம். இன்று காலை நாம் கோயிலுக்கு செல்கிறோம் என்றால், கோயிலுக்கு செல்வதற்கு முன்பு, கோயிலுக்கு செல்வது பற்றி விரும்புகிறோம் என்று பொருள். இது போல் தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும். விருப்பங்கள் விளைவுகளாகின்றன.பார்ப்பதற்கு எளிமையானது போல தெரியும் ஆனால் பின்பற்றுவது கடினம்.

இன்றைய காலத்தில், தானம்,தர்மம் என்று கேட்கிறோம், பார்க்கின்றோம். விரும்பி செய்கிறார்களா? என்றால் அது ஒரு கேள்விக்குறியாய் உள்ளது. ஆனால் இதனையே விரும்பிச் செய்தால், நம் நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்.அதனால் தான் நம் அவ்வைப் பாட்டி "அறம் செய்ய விரும்பு " என்கிறார். அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய்ய விரும்பு  என்பது மனம் சார்ந்தது. மனதில் இதை வைத்தால் தான் செயலும் சிறப்பாக இருக்கும். இதனை பதிக்க குழந்தைப் பருவமே சிறந்தது என்பதால் தான் ஆத்திச்சூடி கற்கின்றோம்.

இப்படி அறம் செய்யும் மனப்பான்மை இருந்தால் தான் நாம் ஒருவருக்கொருவர் உதவி வாழ முடியும். அப்படி இருக்கும் சூழலில் பொய்,புரட்டு போன்ற தீமைகள் இரா. மனமாசு நீங்கி, சமுதாயம் தழைத்தோங்கும்.எனவே "அறம் செய்ய விரும்பினாலே " அறம் செய்யப் படும்.

மற்றொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால், இருப்பவர்கள் கொடுக்கின்றார்கள், இல்லாதவர்கள் என்ன செய்ய? நீங்கள் விரும்புங்கள். அறம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புங்கள். நாளடைவில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். விருப்பம் இல்லாது இந்த சமுதாயத்தில் வாழ்வது கடினம். அறம் செய்ய நீங்கள் விரும்புங்கள்.

ஒவ்வொருவரும் தம் குடும்ப உறவுகளை நேசியுங்கள்.  நட்பு வட்டாரத்தை விரிவாக்குங்கள். அண்டை வீட்டாரிடம் பழகுங்கள். சிறிது சிறிதாக அறம் செய்ய விரும்புங்கள். பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கூட தெரியாமலா வாழ்வது? அறம் செய்ய நீங்கள் தானம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இந்த சமூகத்திற்கு உங்களால் முடிந்த அறத்தை செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனையில் உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல்களை நிறுத்துங்கள்.இதுவும் அறம் தான். உதாரணத்திற்கு எப்போதும் தொலைக்காட்சி பெட்டி முன்பு உட்காருவதை சற்று கொஞ்ச கொஞ்சமாக குறையுங்கள். நம் நீதி நூற்களை படியுங்கள்.இது போல ஏகப்பட்ட அறச் செயல்கள் உண்டு. ஒவ்வொன்றாக செய்யுங்கள். உங்களுக்கு வாழ்வின் மீதுள்ள உண்மை புரியும். வாழ்க்கை மட்டுமல்ல..வானமும் வசப்படும்.

இனி நீங்கள் காண இருப்பது சென்ற மாதத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வுகள்.







சென்ற மாதம் நடைபெற்ற அமாவாசை அன்னதானம் சுமார் 30 நபர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினோம். நம்முடன் திரு. வம்சி மற்றும் திரு. மணிமாறன் இணைந்து கொண்டார்கள். சுமார் 9 மணி அளவில் இரண்டு பைக்கில் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் முன்பு, ஒரு வயதான மூதாட்டி, நம்மிடம் யாசகம் கேட்டார்கள். நாம் உணவு தயார் செய்து தருகின்றோம் என்று சொல்லிவிட்டு அங்கே அவரை இருக்கும் படி கூறினோம்.

உணவு தயார் ஆனதும், அவரைத் தேடிச் சென்றோம். ஆனால் அங்கே அவர் இல்லை. மனதில் சற்று வருத்தம் தோய்ந்தது. பின்பு அப்படியே கூடுவாஞ்சேரியில் ஆரம்பித்து ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம் .அங்கே இருந்த வயதானவர்களுக்கு உணவு வழங்கினோம். வரும் வழியில், துப்புரவு தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களுக்கும் உணவு கொடுத்து விட்டு, அப்படியே மீண்டும் கூடுவாஞ்சேரி நோக்கி வந்தோம்.

அப்போது கூடுவாஞ்சேரிக்கு முன்பாக உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள சிறுவர்களை அழைத்து, அவர்களுக்கும் உணவு கொடுத்தோம். அவர்களின் கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் ஒரு வேளை உணவிற்கு படும் பாடு பற்றி உணர்ந்தோம். மீதம் ஒரு 5 பொட்டலங்கள் இருந்தது. நந்திவரம் கோயிலுக்கு சென்று அங்கே கொடுக்கலாம் என்று சென்று கொண்டிருந்தோம். நந்திவரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீரென்று வம்சி வண்டியை நிறுத்தி அங்கே உள்ள மூதாட்டிக்கு உணவு வழங்க சொன்னார்.

அவரைப் பார்த்த போது, நம் கண்களில் ஆனந்த கண்ணீர். இருக்காத ! பின்னே. ஆரம்பத்தில் யாருக்கு உணவு தருவதாக சொல்லிவிட்டு தவற விட்டோமோ..அவரே தான் அங்கே இருந்தார். மனம் மகிழ்வுற்றது.












வாருங்கள். அறம் செய்ய விரும்புவோம்..

முந்தைய பதிவுகளுக்கு :-

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!! - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_41.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



No comments:

Post a Comment