Subscribe

BREAKING NEWS

04 October 2017

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள்


நாம் முன்னரே அறிவித்த படி, அகத்தியர் வனம் மலேஷியா குழுவுடன் இணைந்து சென்ற மாதம் புரட்டாசி மாளாய பட்சம் ஒட்டி அன்னதானம் செய்தோம்.அந்த நிகழ்வின் துளிகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.எல்லாம் குருவருளால் சிறப்பாக நடை பெற்றது.அதற்கு முன்பாக அன்னதானம் பற்றி கருணைக் கடல் மகா பெரியவா சொல்லும் சில விஷயங்களைக் காது கொடுத்து கேட்போமா?


அன்னதானம் ஏன்  செய்கின்றோம்?  எதற்காக செய்கின்றோம் என்று மிக மிக எளிதாக கூறி உள்ளார்கள்.

இதோ மகா பெரியவாவின் அருளுரைகள் ...

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.

பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?

இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.

ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.

ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.

ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.

ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.

‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.

இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.ஆம். நம் சித்தம் சுத்தி பெற ஒரு சின்ன விஷயம் தான் இந்த அன்னதானம்.இந்த சூழலில் இந்த தொண்டில்  நம்மோடு இணைந்து கை கோர்த்துள்ள அகத்தியர் வனம் மலேஷியா குழுவினருக்கு நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சரி...வாருங்கள்...அன்னதான நிகழ்விற்கு...

இம்முறை நம் சகோதரர் திரு.சந்திரசேகரன் அவர்கள் நம்மோடு இணைந்தார்.மேலும் நம் சகோதரர் திரு.வினோத்குமார் இணைந்து கொள்வதாக தெரிவித்து இருந்தார்.இம்முறை பார்சல் செய்ய திட்டமிட்டோம்.எனவே சுமார் 1 மணி நேரம் முன்னதாக வேளச்சேரி சென்றோம். சற்று நேரத்தில் சந்திரசேகரன் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். நாங்கள் கடைக்கு சென்று உணவு பார்சல் செய்ய காகித கூடு வாங்க சென்றோம்.உடனே நம்மை திரு.சிவகுமார் தொடர்பு கொண்டு,நம்மிடம் உள்ளதாக சொன்னார்கள்.குறைந்த எண்ணிக்கையில் வாங்கிவிட்டு உணவு தயார் செய்யும் இடத்திற்கு சென்றோம்.

பார்க்கும் போதே நாக்கில் நீர் ஊற ஆரம்பித்து விட்டது. ஏனெனில் உணவின் சுவையும்,தரமும் பார்க்கும் போதே உண்ணத் தூண்டியது.





உணவு தயாரானதும், இம்முறை சாம்பார் சாதம், உணவு பொட்டலங்கள் தயார் செய்தோம்.ஆனால் எங்களால் பொட்டலங்களை சரியாக தயார் செய்ய முடியவில்லை.சுமார் 30 பொட்டலங்கள் தயார்.ஏனென்றால் அடுக்கு வைக்கும் போது, உணவு பொட்டலங்கள் சரியாக இல்லை.எனவே சென்ற முறை செய்தது போலவே,இம்முறையும் செய்யலாம் என முடிவெடுத்தோம்.அப்போது தான் திருமதி பரிமளம் சொன்ன செய்தி நினைவிற்கு வந்தது.உடனே நம் நண்பர் மேடவாக்கத்தை சேர்ந்த திரு.சங்கரை அழைத்து, செய்தியை சொன்னோம்.அவரும் தனது டூ-வீலரில் வருவதாக கூறினார்.








இதோ..உணவு பொட்டலங்கள் ரெடி. இவற்றை அப்படியே சங்கரிடம் கொடுத்து விட்டு, நாம் உணவு பாத்திரத்தோடு, வண்டியில் சென்ற முறை செய்ததை போன்று அன்னதானம் செய்ய முடிவெடுத்தோம்.ஏனெனில் சூடான உணவு..அதுவும் சாம்பார் சாதம் சரியாக பேக்கிங்கில் இல்லை.அடுத்த முறை புளி சாதம்,தக்காளி சாதம் போன்று செய்து பேக்கிங்கில் கொடுக்கலாம் என்று தீர்மானித்து,சங்கர் வண்டியில் உணவை கொடுத்தோம்.நீங்களே பாருங்களேன் 





சந்திரசேகரன் மற்றும் சங்கர் இணைந்து அவருடைய வண்டியில் உணவை ஏற்றி விட்டு, அப்படியே நாமும் வண்டியில் உணவை ஏற்ற தயாரானோம்.






இதோ உணவை வண்டியில் ஏற்றி விட்டோம்.மேலும் உணவு தட்டுக்கள், அப்பளம் போன்றவற்றை எடுத்துக் கொண்டோம்.ரெடி ஸ்டார்ட்....1..2..3...ஹ்ம்ம் ..கிளப்புங்கள்..இதோ வண்டி கிளம்பி விட்டது.அடடா? நம் தம்பி வினோத் எங்கே? என்று யோசித்த பொது தாம் வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இருப்பதாக சொன்னார். நாம் இம்முறை நேராக வேளச்சேரி பேருந்து நிலையம் செல்லாது, குரு நானக் கல்லூரி வழியே திருவான்மியூர் செல்வாதாக சொன்னோம்.சரியாக வேளச்சேரியில் U- டர்ன் அடிக்கும் இடத்தில இருக்கும் படி சொல்லிவிட்டு,வேளச்சேரி 100 அடி ரோட்டில் சென்றோம்.







இதோ ..சேவை ஆரம்பம்.நம்மால் முடிந்த வரை 100 அடி ரோட்டில் கொடுத்தோம்.பின்பு அப்படியே 
திருவான்மியூர் நோக்கி செல்லும் வழியில் வினோத் இருந்தார்.அவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ,சேவையைத் தொடர்ந்தோம்.





வண்டியை நிறுத்தி, உணவை இட்டு அப்படியே கொடுப்பதை விட, வண்டியில் பயணத்தில் இருக்கும் போதே, உணவு பொட்டலங்கள் தயார் செய்தால் என்ன? என்று மனதில் தோன்றியது.இதோ..உணவு பொட்டலங்கள் தயார் செய்து கொண்டே வண்டியில் பயணம்.







நம்மைப் பொறுத்த வரையில், சாலையோர ஏழை,எளியோர்,ஆதரவற்றோர்,மனநலம் குன்றியோர்,குப்பை அள்ளுதல் போன்ற சேவையில் உள்ளோர்,வயோதிகர்கள் போன்றோருக்குத் தான் உணவு கொடுக்க முயல்கின்றோம். ஆனால் ஒன்றிரண்டு  பொட்டலங்கள் நம் குறிக்கோள் தாண்டி சென்று விடுகின்றது. யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்ற திருமந்திரமே நம் மனதில் நின்றது. அப்போது பேசிக்கொண்டே செல்லும் போது,அடுத்த முறை ஒரு குடிநீர் பாக்கெட் சேர்த்து கொடுக்கலாம் என்று சொன்னாங்க. நல்ல யோசனை. அடுத்த நிகழ்வில் இணைக்கலாம் என்று முடிவு செய்தோம்.
















இம்முறை நாம் அப்படியே சோழிங்கநல்லூர் பாதையில் சென்றோம். இம்முறை வயதானவர்கள்,ஆதரவற்றோர்,கூலி தொழில் செய்வோர் என அனைத்து தரப்பினருக்கும் உணவு கொடுத்தோம். மனதிற்கு திருப்தியாய் இருந்தது. ஆனால் இந்த நிகழ்வில் சற்று நேரம் தாழ்த்தியே கிளம்பினோம்.சரியாக 1 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து கிளம்பினோம். புரட்டாசி மாதம் ஆதலால் சுமார் 300 பேருக்கு மேல் சமைக்க சொல்லி இருந்தோம்.சில இடங்களில் கொடுத்த போது,வேண்டாம் ...பசி ஆறிவிட்டோம் என்றார்கள். நமக்கு சற்று திகைப்பாக இருந்த்தது.

ஆனால் குருவருளாலும்,திருவருளாலும்  அனைத்தும் உணவு பொட்டலங்களை கொடுத்தோம்.இதோ இன்னும் பாத்திரத்தின் அடியில் சுமார் 30 பேருக்கு மட்டுமே உணவு இருந்தது.அப்படியே வண்டியை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு விட்டோம்.








கோயிலில் இருந்த அனைவருக்கும் நம்மிடம் இருந்த உணவைக் கொடுத்தோம். பிறகு நாம் மதிய உணவாக சாப்பிட்டோம். அடடே..என்ன சுவை..என்ன தரம் ! சொல்ல வார்த்தைகள் இல்லை. பின்னர் நம்மோடு இணைந்த உறவுகளுக்கு நன்றி சொன்னோம்.

இந்த தொண்டில் இணைந்த அகத்தியர் வனம் மலேஷியா குழுவிற்கு நன்றி. மேலும் நம்முடன் இணைந்த திரு.சந்திரசேகரன், திரு.வினோத்குமார் அவர்களுக்கு நன்றி.

நமக்கு உணவு சமைத்துக் கொடுத்து, நம்முடன் மூன்று நண்பர்களை துணைக்கு அனுப்பி, நமக்கு தோள் கொடுக்கும் திரு.சிவக்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.

- TUT & AVM அன்னதானம் பற்றிய அறிவிப்பு விரைவில் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகளுக்கு:-

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



No comments:

Post a Comment