Subscribe

BREAKING NEWS

14 April 2018

விளம்பியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!!


காளகஸ்தி    

பதிவின் உள்ளே செல்வதற்கு முன்னர்...

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) & தள உறவுகளுக்கும், உழவாரப்பணி, அன்னதானம் மற்றும் இன்னபிற சேவைகளுக்கு பொருளுதவி செய்தும், தளத்திற்கும் விருப்ப சந்தா அளித்து உதவும் உள்ளங்கள் அனைவருக்கும், தளத்தில் பதிவுகளை படித்தும்,பகிர்ந்தும் நமக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,பிறக்கும் புத்தாண்டு எல்லோரும் இன்புற்று வாழ வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.இன்றைய புத்தாண்டில் நம் தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.





அழகிய தமிழ் கோலத்துடன் இனிதே இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். இந்த பதிவை தர தீர்மானித்ததும் அவரே தான் அன்றி நாம் இல்லை. தேடல் உள்ள தேனீக்களாய் என்ற பெயருக்கேற்ற தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மிக மிக முக்கியமான பரிகார ஸ்தலம் தரிசனம் பெறுவது அவரின் கருணையால் தானே. இந்த கோலத்தைப் பற்றியும்,அவரின் அனுபவத்தையும் பதிவின் இறுதியில் தருகின்றோம். இன்றைய தமிழ் புத்தாண்டிற்கு அழகான சமர்ப்பணம். இதே ஆங்கில புத்தாண்டாக இருந்தால் அமர்க்களம் என்ன? ஆரவாரம் என்ன? ஆனால் நம் தமிழ் புத்தாண்டு அமைதியாய் அவரவர்களால் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.
















நம் தளம் இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கின்றது. நம் தளத்தின் இரண்டாம் ஆண்டு பயணம் இன்று கூடுவாஞ்சேரியில் அன்னதானம் மூலம் ஆரம்பித்தோம்.மேலும் திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமத்திலும் இன்று காலை அன்னதானம் செய்ய விண்ணப்பம் செய்தோம்.குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஆயில்ய பூசை இன்னும் அருள் வழங்க உள்ளதாய் நாம் உணர்ந்துள்ளோம். சிறப்பான செய்தியும்,நிகழ்வும் அகத்தியர் ஆசியால் அன்று, நம் குழு வாயிலாக  தொடர  உள்ளோம்.

பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாக இன்றும் போற்றப்படும் தலம். ஆந்திரா மாவட்டத்தில் உள்ள சித்தூரில் உள்ளது இந்த தலம். சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.

தேனி போன்ற தென் மாவட்ட மக்கள் காளகஸ்தி சென்று வழிபாடு செய்வது கடினம். தற்போது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் பண்டைய காலத்தில்..நடையாய் நடை நடந்து... இறைவன் திருவுள்ளம் கொண்டார். தென் காளகஸ்தி என்று போற்றத்தக்க திருக்கோயிலை தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் எழுந்தருளச் செய்தார். தென் காளகஸ்தி தரிசனத்திற்கு வாருங்கள். தல வரலாற்று செய்திகளே நம்மை ஆனந்த கூத்தாட வைக்கின்றது.



நீர்வளம், நிலவளம் மிக்க உத்தம பாளையம் தென்காளகஸ்தி என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த ஊர் முன்பு காட்டூர் என்று அழைக்கப்பட்டது. 

சங்க காலம் தொட்டு உத்தம பாளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. கி.பி 10 ம் நூற்றாண்டில் பிற்கால சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது  இவ்வூரும் சோழ நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என்பது சின்னமனூரின் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றது.இந்த ஊரின் பாளையக்காராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது. பின்பு சுருக்கமாக உத்தம பாளையம் என்று மருவியது.





















அருள்மிகு திருகாளத்தீஸ்வரர் திருக்கோவிலானது அளவில் பெரியது. பழமையானது. வரலாற்று சிறப்பு மிக்கது. கட்டிட கலைக்கும், சிற்பக்  கலைக்கும் எடுத்துக்காட்டாய் இன்றளவும் இந்த கோயில் விளங்கி வருகின்றது.  

கி.பி. 1689 ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டு வரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள்.  எல்லை தகராறு காரணமாக திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனுக்கும்,இராணி மங்கம்மாளுக்கும் போர் நடைபெற்றது. இதனை கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் கல்வெட்டு உறுதி செய்கின்றது. இப்போரின் போது கெங்கப்ப நாயக்கர், சாமிநாத நாயக்கர்,விசுவநாத நாயக்கர் போன்றவர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்து வந்துள்ளனர்.பிச்சைப் பிள்ளை என்பவர் கணக்கப் பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளார்.

பிச்சைப் பிள்ளை திருப்பதிக்கு அருகில் உள்ள திருக்காளகஸ்தியில் உள்ள காளகஸ்தீசுவரரின் தீவிர பக்தராக இருந்து வந்துள்ளார்.இவர் ஆண்டுக்கொருமுறை மாசி மகா சிவராத்திரி அன்று அங்கு சென்று வழிபாடு செய்வது இவரது வழக்கம்.











முதுமைப் பருவம் எட்டியதும், இவரால் திருக்காளகஸ்தி  சென்று வழிபட இயலவில்லை. உடனே அவர் பல நாட்கள் விரதம் இருந்து, இறைவனை வேண்டியுள்ளார்.அவரது பக்தியை ஏற்ற இறைவன், அவரது கனவில் குழந்தை வடிவில் தோன்றி " காட்டூரில் உள்ள வில்வ வனத்தில் வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தின் அடியில் நீ எம்மை கண்டு தரிசிக்கலாம். அங்கிருக்கும் எம்மை நீ விரும்பும் இடத்தில கோயில் அமைத்து வணங்கலாம் " என்று கூறியுள்ளார். 

அடுத்த நாள் இதனை மக்களிடம் கூறியதும், மக்கள் மகிழ்வுற்று, வண்டி கட்டிக் கொண்டு சென்று வில்வ வனம் சென்று பார்த்த போது, அங்குள்ள சிவனார் தரிசனம் பெற்று ஆனந்த கூத்தாடினர்.

ஓம் நமசிவாய மந்திரம் ஓதி, சிவபெருமானை வண்டியில் அருள செய்து, ஊருக்குள் கொண்டு சென்றனர். அப்போது வண்டியின் அச்சு ஓரிடத்தில் முறிந்து விட்டு, அங்கிருந்து வண்டியை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. அந்த இடத்தில்  ஆறுமுகர் வடிவில் முருகப் பெருமான் தோன்றி மறைந்தார். மக்கள் அருள் பெற்றனர். அங்கேயே கோயில் அமைக்க முடிவெடுத்தனர். அந்த இடம் தான் தற்போது அருள் பாலிக்கும் உத்தமபாளையம் திருக்காளத்தீசுவரர் திருக்கோயிலாகும். முதலில் சிவபெருமானுக்கும், முருகனுக்கும் வேதம் முழங்க திருக்கோயில் அமைத்தனர். 

பின்னர் தாயின் அருள் பெற அம்மன் உருவம் செய்ய ஆரம்பித்தனர்.எவ்வளோ முயன்றும் அம்மனை அங்கே நிலைநிறுத்த இயலவில்லை. ஏதேனும் ஒரு குறைபாடு இருந்து கொண்டே வந்துள்ளது. மக்கள் மீண்டும் அவரிடம் சென்று முறையிட்டனர். பிச்சைக் கணக்கர் கனவில் மீண்டும் திருகாளத்தீசுவரர் தோன்றி  " முல்லையாற்றில் நுங்கும் நுரையுமாக வெள்ளம் பெருக்கெடுத்து வரும் மூங்கில் கூடையில் அம்மன் பவனி வருவாள் " எனக் கூறி மறைந்தார். 




சில நாட்கள் கழித்து, அந்த திருவிளையாடல் நடந்தேறியது. பெரும் மழை பெய்தது.பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இறைவனின் அருள்படி, அம்மனும், செல்வ விநாயகரும் மூங்கில் கூடையில் எழுந்து அருளினார்கள். மக்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த கூத்தாடினார்கள். உடனே இருவரையும் கோயிலில் அமர்த்தி கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை அமைத்தார்கள். பிச்சைக் கணக்கரின் முயற்சியாலும், செல்வந்தர்கள் தாராளமாக கொடை கொடுத்ததாலும், இராணி மங்கம்மாள் கொடையாலும் திருக்கோயில் மிகச் சிறப்பாக அமைக்கப் பெற்றது.
















படிக்க படிக்க என்ன ஒரு ஆனந்தம். இப்படியொரு திருக்கோயில் தேனியில் இருப்பதை நாம் ஓராண்டுக்கு முன்னதாக அறிந்தோம். இறைவனின் திருவுள்ளம் வேண்டி காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. சென்ற மாதம் நாம் பெற்ற தரிசனக் காட்சிகளை பதிவின் இடையிடையே இணைத்துள்ளோம்.


இத்திருக்கோயிலின் சிற்பக் கலையும், கட்டிடக் கலையும் பார்க்கும் போது நாயக்கரை காலத்தில் கோயில் கட்டப்பட்டது என அறிய முடிகின்றது. எண்ணிலடங்கா அழகிய வளைவுகள், பிரம்மாண்ட தூண்கள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மண்டபங்கள், சிற்பங்கள் என அனைத்தும் ஒருங்கே பார்க்கும் போது நாயக்கர் கால கட்டிட கலையின் வனப்பு தெரிகின்றது. இனி தலத்தின் சிறப்புகளை காண்போம்.











  • பசுமை நிறைந்த வயல்கள் சூழ இந்த ஆலயம் அமைந்திருப்பது முதல் சிறப்பு.
  • ஆலயத்தின் கிழக்கு பக்கம் முல்லையாறு ஓடுகின்றது. 
  • ஆற்றின் கரையில் இருப்பதால் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒத்திருக்கின்றது இவ்வாலயம்.
  • இந்த திருக்கோயில் ஒரு பிரார்த்தனை ஸ்தலம் ஆகும். இங்குள்ள ஞானம்பிகை தாயாரை வழிபட திருமாங்கல்ய பலன் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
  • திருக்கோயிலின் வடக்குப் பக்கம் ராகுவும்,கேதுவும் தனி தனி சன்னதிகளில் தம்பதி சமேதராக காட்சி அளிக்கிறார்கள்.
  • முருகப் பெருமான் சோமாஸ்கந்தராக இங்கே அருள் புரிகின்றார்.
  • இது போல் சொல்லிக்கொண்டே போகலாம், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர்கள், காசி விஸ்வநாதர் என காண காண கண்கள் குளுமை பெறுவதை அனுபவத்தில் உணரலாம்.
















  • இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றடுக்கு கொண்டு கலசங்களுடன் கம்பீரமாக காட்சி தருகின்றது.
  • திருவனந்தல், உச்சிகால, சாயரட்சை , பள்ளியறை என 4 கால பூசை இங்கே பிரசித்தமாக செய்யப்பட்டு வருகின்றது.
  • ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி வழிபாடு, பிரதோஷ வழிபாடு, நவராத்திரி திருவிழா, கார்த்திகை வழிபாடு, மார்கழி மாத வழிபாடு, திருவாதிரை, மாசி மக திருவிழா  என அனைத்து விழாக்களும் இங்கே சிறப்போடு கொண்டாடப் பட்டு வருகின்றது.











சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசிக்க எண்ணினோம். ஆனால் இறைவனின் திருவுள்ளம் வேறாக இருந்தது. இவர் தான் யாரென்று தெரியவில்லை. 











காலம் கடந்து பேசும் கல்வெட்டுக்கள். எத்துணையோ முறை உத்தம பாளையம் சென்றிருக்கின்றோம். ஆனால் இங்கு இப்படியொரு திருக்கோயில் இருப்பதை நாம் அறியவில்லை. நேரம் காலம் கூடி வந்தால் தானே அனைத்தும் உணர்த்தப் படும். தேடல் உள்ள தேனீக்களாய் பயணம் தேனியில் உள்ள திருக்கோயில்களில் மீண்டும் தொடர குருவருள் வேண்டு நிற்கின்றோம்.

வாசக நெஞ்சங்களுக்கு தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலைகளில்  நம் தமிழ்த் தாய் வாழ்ந்து வருகின்றாள் என்பது மீண்டும் ஒரு முறை இங்கே நிரூபணம் ஆகி இருக்கின்றது.

திரையில் விரிந்த  பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் வெற்றிக்கு பங்களித்தவர்களில் ஒருவர் விஸ்வநாத் சுந்தரம்.  ‘பாகுபலி’ படங்களின் முக்கியக் காட்சிகளுக்காக, பிரம்மாண்டமான உருவங்களை ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர் இவர்தான்.

இவர் தற்போது, தமிழின் உயிரெழுத்துகளை தனது தூரிகையால்  மிளிர வைத்திருக்கிறார். ‘இந்தியன் 2’, ‘சங்கமித்ரா’,  சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படம், அடுத்ததாக ராஜமவுலி இயக்கவுள்ள படம்,  பிரபாஸ் நடிக்கவுள்ள படம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவரைச் சந்தித்து,  “தமிழுக்கு அணி சேர்க்கும் இந்த யோசனை தோன்றியது எப்படி?” என்றோம்.  

“உலகின் மிகச் சிறந்த மொழிகளில் நம் தாய் மொழி தமிழும் ஒன்று. நாம எதைப் பற்றியும்  தாய் மொழியில்தான் தீவிரமா சிந்திக்க  முடியும். அந்தச் சிந்தனைதான் முழுமை பெறும்.

இப்போ நம்ம தாய்மொழி மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் குறைஞ்சுட்டே இருக்கு. தமிழ் மொழி கடல் போன்றது. அதில் அறிவியல், கலாச்சாரம் எனப் பல விஷயங்கள் இருக்கு. உண்மையில், கல்லூரிப் படித்து முடிக்கும் வரை எனக்கும் தமிழ்  மீது பெரிய ஈடுபாடு இல்லை. திரையுலகில் பணிபுரியும்போதுதான், பலரும் நம் மொழியைப் பற்றி பேசுவதைக் கேட்டு வியந்தேன். அப்போதுதான் இந்த மொழிக்கு நம்ம ஏதாவது செய்யணுமேனு யோசிக்கத் தொடங்கினேன்.

கவிஞராக இருந்தால் தமிழ் மொழியின் பெருமையைக் கவிதையாக வடித்திருப்பேன். ஓவியனாயிற்றே... அதனால், ஒவ்வொரு எழுத்தையும் எனது பாணியில் அலங்கரித்தேன். எல்லோரும் பெற்ற குழந்தைக்கு ஆடை அணிந்து அழகுபார்ப்போம். அதுபோல என் தாய்மொழிக்கு ஓவியத்தின் மூலம் அழகூட்டிப் பார்த்தேன்.  தமிழால் என்னை தகுதிப்படுத்திக்கிட்டேன்னுகூட சொல்லலாம்”  புதுத் தெம்புடன் பேசினார் விஸ்வநாத் சுந்தரம்.

“இந்த டிசைனை உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டுபோய்க்கொண்டே இருக்கலாம். யார் இதைப் பார்த்தாலும், இதே மாதிரி நம்மளும் ட்ரை பண்ணலாமே என்று தோன்ற வேண்டும். உயிரெழுத்துக்களில் புதிய ட்ரெண்ட் கொண்டு வரணும்னு ‘உ’ எழுத்தைப் பாத்தீங்கன்னா மயில், ‘இ’ என்ற எழுத்தைப் பாத்தீங்கன்னா ஒருவர் தியானம் பண்ணுவது என ஒரு சில உருவங்களாகவே வரைஞ்சுருக்கேன்” என்று தன் எழுத்தோவியங்களின் பெருமையைச் சொல்கிறார் விஸ்வநாத் சுந்தரம்.

சுகிசிவம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்  இருவரது பேச்சுக்களைக் கேட்டே தனக்குள் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டாராம் விஸ்வநாத் சுந்தரம். “சுகிசிவம் சாருடைய பேச்சு வெளிப்படையாக, அனைவரும் ஏற்றுக்கொள்வது போல் இருக்கும். எனக்கு தமிழ் மீது பற்று வர முக்கியக் காரணம் சுகிசிவம்தான். சிரிக்க வைக்கும் ஞானசம்பந்தன் சாரின் பேச்சு சிந்திக்கவும் தூண்டும். இவரது பேச்சில்தான் தமிழின் உண்மையான  பலத்தைத் தெரிந்துகொண்டேன்.

கோடீஸ்வரன் மாதிரி இருக்கும் நம் தாய்மொழியை விட்டுவிட்டு, மற்ற மொழிகளிடம் போய் பிச்சை எடுக்கிறோம் என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன” என்கிறார், தாய்த் தமிழுக்கு இன்னொரு தளம் அமைத்திருக்கும் இந்தப் படைப்பாளி!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_6.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

No comments:

Post a Comment