Subscribe

BREAKING NEWS

12 April 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9)

அன்பின் நேயர்களே.

இதோ... வாழ்வாங்கு வாழ தொடர் பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்கின்றோம். நம் தளம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற காத்திருக்கின்றோம். ஏன்?எப்படி? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. இந்த தளம் மூலம் நாம் தரிசித்து வரும் திருக்கோயில்களின் தகவல்கள், பூசை விபரங்கள், சித்தர் மார்க்கத்தில் சில என அடியெடுத்து வைத்து வருகின்றோம். சில பயணத்தின் போது, யார் என தெரியாத உறவுகள் TUT என பெயர் சொன்னதும் மிக மிக சந்தோஷத்தில், தளத்தின் பணிகளை குறிப்பிட்டு பேசி, நமக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகின்றார்கள். இணையத்தில் வாழும் உறவுகளுக்கு இதயத்தில் இடம் தருவதே நம் நோக்கமும் ஆகும். சரி..  வாழ்வாங்கு வாழ தொடர்பதிவில் இன்று  ஒன்பதாம்  பதிவாக தொடர்கின்றோம்.


கீழே நீங்கள் காணும் தரிசனத்திற்கான விளக்கம் இரண்டாவதாக விளக்கப்படும்.




கேள்வி - ஒருவன் சொல்கிறான் பாவம் செய்தவனுக்கு நரகத்தில் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று. இன்னொருவன் சொல்கிறான் பாவம் செய்தவன் பரிகாரம் செய்து அதிலிருந்து தப்பி விடுபடலாம் என்று. வேறொருவன் சொல்கிறான் பாவம் செய்தவர்களை ஒரு நாள் இறைவன் கடுமையாகத் தண்டிப்பார் என்று. மற்றொருவனோ பாவம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்கள் பாவம் மன்னிக்கப்படும் என்று. இதில் எவன் சொல்வதைத்தான் கேட்பது? எவன் சொல்வதுதான் உண்மை?

இராம் மனோகர் - அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதையெல்லாம் விட்டு விடு, உன் பிரச்சனை என்ன ? நீ பாவம் செய்தாயா ? இல்லையா ? பாவம் செய்திருந்தாலும் சரி, செய்யாதவனாக இருந்தாலும் சரி, இவர்கள் சொன்னதில் எது உண்மை என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவா இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது ? பாவமே செய்யாமல் நீ வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மை. சொல்லப்படும் அனைத்து கருத்துகளும் அந்த ஒரு விஷயத்தை முன்னிட்டே சொல்லப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மனிதர்கள், ஆயிரக்கணக்கான தேசங்கள், ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள். எனவே அவரவர் வாழும், காலம், இடம், சூழலுக்கு ஏற்றவாறு சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒரு பள்ளிக் கூடம் இருக்கிறது. அதில் உள்ள ஆசியர்களில் சிலர் மாணவர்களிடம் அன்பாக நடந்து கொண்டு அவர்கள் தவறுகளைத் திருத்துகிறார்கள். சில ஆசிரியர்கள் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். சில ஆசிரியர்கள் தண்டிக்கிறார்கள். சில ஆசிரியர்கள் பயமுறுத்துகிறார்கள். ஆனால், இவை யாவுமே மாணவனின் நலனைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்படுகின்றன. அது போலவே இதுவும்.

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார் அல்லது நம் பாவங்களை ஏற்றுக் கொள்கிறார் என்று சொல்வதை, எவ்வளவு பாவங்களை வேண்டாமானாலும் செய், கடவுள் மன்னிப்பார் என்று பொருட்படுத்தக் கூடாது. பாவங்களைச் செய்யாதே, செய்த பாவங்களுக்காக வருந்து, இறைவனை முழு நம்பிக்கையுடன் நாடு. அவர் உன் பாவங்களைப் போக்குவார் என்பதே பொருள். உடனே சிறைக் கைதிகளை சிலரை தலைவர்கள் பிறந்த நாளன்று விடுதலை செய்வது போல, கடவுள் நம்மை மன்னித்து விட்டு விடுவார் என்று எண்ணி விடக் கூடாது. ஒரு சிலரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்களையோ மட்டும் கடவள் மன்னித்து விடுவார் என்றால், கடவுள் பாரபட்சமுடையவர் என்றாகி விடுமல்லவா ? அது யுக்திக்குப் பொருந்தாது. எப்படி இயற்கை அனைவருக்கும் பொதுவானதோ அது போல இறைவனும் அனைவருக்கும் பொதுவானவரே. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு இறைவன் இருக்கிறார் என்று நம்புவது அறியாமையாகும். நமக்கு வேண்டியவர்கள் சிலர், வேண்டாதவர்கள் சிலர் என்றெல்லாம் கடவுள் நினைத்தால் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் ?

வினையின் விளைவு அல்லது வினைப் பயன் என்பது முறை பிறழாதது. அவ்வாறு முறை தவறாது அது நடப்பதால்தான் அதைக் கடவுளின் அருள் என்று கூறுகின்றோம். நல்வினை செய்கிறவர்களுக்கு நன்மை வினைப் பயனாக விளைகிறது. தீவினை புரிகிறவர்களுக்கு தீமை வினைப் பயனாக வந்தமைகின்றது. இதுதான் விதி என்பது. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இந்நிலையில் பாவங்களை மன்னிக்கிற சக்தி சில குறிப்பிட்ட கடவுள்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வது பொருத்தமுடையதல்ல. கடவுளைப் பற்றிய மெய்ஞானம் வருகிற பொழுது மனிதனுடைய வினைகளெல்லாம் அழிந்துபட்டுப் போய் விடுகின்றன என்பதே உலக மக்கள் அனைவருக்குமான பொதுவான கோட்பாடு. இதுவே உலகனைத்திலும் தோன்றி மெய்யறிவை போதித்த மகான்கள் அனைவரின் ஒட்டு மொத்த கோட்பாடுமாகும். வினை என்கிற பொழுது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் அழிந்துபட்டுப் போய்விடுகிறது.
வள்ளுவப் பெருந்தகை உலகப் பொது மறையில் என்ன சொல்கிறார் ?

''இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.''

என்றுதானே சொல்கிறார் ? கடவுளைப் பற்றிய மெய்ஞானம் வருகிற பொழுது மனிதனுடைய இரு வினைகளும் அழிந்து போய் விடுகின்றன என்றே சொல்லப்பட்டுள்ளது. ஞானி என்பவர் இரு வினைகளையும் கடந்தவராகி விடுகிறார். எனவே மெய் ஞானத்தை அடைவதற்காக நல்வாழ்வை வாழ்கிறவன் மட்டுமே வினைப்பயன்களை கடக்க முடியும் என்பது கோட்பாடு. பாவம் செய்து செய்து துன்பக் கடலில் வினைச் சுழலில் சிக்கித் தவிக்காமல், இறைவனைச் சார்ந்து, ஒழுக்கத்துடன் அற வழியில் வாழ்ந்து வினைகளைக் கடக்க வேண்டும் என்பதே உண்மையான கருத்தாகும். அனைத்து சமயங்களும் இந்தக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனிதன் அடைகின்ற பரிபக்குவத்தை முன்னிட்டே அவன் வினைகளைக் கடந்தவனாக முடியும். எனவே பாவங்களுக்கான மன்னிப்பை விரும்புவதை விட, வினைகளுக்கு அப்பாலுள்ள பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்று எண்ணி வாழ்வதே சான்றோரின் செயலாகும். நாம் சான்றோராக ஆகவே முயற்சி செய்ய வேண்டும். பலவிதங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், சொல்லப்பட்டதின் உள் நோக்கம் என்னவோ இதுதான்.


Image may contain: 1 person

கேள்வி - பயமே பக்தி என்று சொல்கிறார்களே! பக்தி செலுத்துபவர் பயத்தோடு இருந்தால்தான் கடவுள் அவன் பக்தி உணர்வை ஏற்றுக் கொள்வாரா ?


இராம் மனோகர் - பயபக்தி என்பது சிரத்தையை குறிப்பிடுவதாகும். எந்த ஒரு கராரியத்தையும் மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது நம்மிடம் ஒரு அலட்சியப் போக்கு இயல்பாகவே வந்து விடுகிறது. அவ்விதமான அலட்சியப் போக்கு பக்தி காரியங்களில் இருக்கக் கூடாது, ஒரு மனதோடு, முழு மனதோடு, ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பதையே பயபக்தியாக இரு என்று சொல்கிறார்கள். பயம் அல்லது அச்சம் என்பது அஞ்ஞானத்தின் விளைவு. பக்தி என்பது அன்பினால் ஏற்படுவது. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு பரிபூரணமான நம்பிக்கையும் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் பயத்திற்கு வேலையே இல்லை.


பொதுவாகவே எது நம் மனதை வெகுவாகக் கவர்கிறதோ அதன் மீது அன்பு தானாகவே வளர்கிறது. அத்தகைய அன்பு தூய அன்பாக இருக்கும் பொழுது அது பக்தி எனப்படுகிறது. அன்பானது அறிவை வளர்க்கிறது. அறிவு ஓங்குமிடத்து அன்பு மேலும் வளர்கிறது. அன்பும் அறிவும் கூடியவிடத்து அன்பு பேரன்பாகப் பரிணமிக்கிறது. பேரன்பு கொண்ட பக்தன் தன்னுடைய பேரன்பின் விளைவாகத் தன்னையே இறைவனிடத்தில் ஒப்படைத்து விடுகிறான். விறகைத் தீயில் இடும் பொழுது, அது தானும் தீயாக ஆகி விடுவது போல, பக்தன் தன்னை தெய்வத்திடம் ஒப்படைத்து விடும் பொழுது தானும் தெய்வ சொரூபமாக ஆகி விடுகிறான். தானே தெய்வ சொரூபமாக ஆகி விட்டவனுக்கு பயம் ஏன் ஏற்படப் போகிறது சொல்லுங்கள் ?


ஒரு சில மதவாதிகள் மனிதர்களிடத்து பயம்தான் பக்தி என்று தவறான விளக்கங்களை முன் வைக்கிறார்கள். புராணத்தில் நரசிம்மர் இரண்யனை அழித்த பிறகும் ஆவேசம் குறையாதவராக இருக்கிறார். அவர் அருகே செல்ல அனைவரும் (தேவர்கள் கூட) அஞ்சுகிறார்கள். பிரகலாதன் அவர் அருகே சென்ற பிறகுதான் அவர் தன் கோபத்தை விடுகிறார். ஆக உண்மையான பக்தி கடவுளேயே அமைதிப்படுத்தி விடுகிறது. பிறகு ஏன் பக்தன் பயப்பட வேண்டும் ? மனிதன் தப்பு செய்தால் கடவுள் தண்டிப்பார், நரகத்தில் தள்ளுவார் என்று சொல்லி மக்களை பயத்தில் ஆழத்தி விடுகிறார்கள். தண்டனைக்குப் பயந்து ஒருவரோடு இணங்கிப் போவதோ, அன்பு செலுத்துவதோ எப்படி பக்தியாகும் ? அது பக்தியல்ல. எனவே பக்திக்கும் பயத்திற்கும் சம்மந்தமேயில்லை.

ஒரே கேள்வி, இரண்டு பதில்.

கேள்வி - அன்பே  சிவம் என்கிறார்கள், பயம்தான் பக்தி என்கிறார்கள், அன்பு உள்ளவரிடத்தில் ஏன் பயம் கொள்ள வேண்டும் ?


இராம் மனோகர் - தவறு செய்தவன் பயப்படத்தானே செய்வான். பக்தி என்பது பகல் வேசமாக இருந்தால் பயம் வரத்தான் செய்யும். ஒருவனுக்குக் கடவுள் நம்பிக்கை துளி கூட இல்லையென்றால், அவனுக்கு கடவுள் குறித்த பயம் இருக்காது. ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவன் உலக இச்சைகளுக்காக பாவம் செய்யும் பொழுது, பயம் எழுவதில் வியப்பு என்ன இருக்கிறது ? அனைத்தையும் அறிந்தவன், எல்லா இடத்திலும் நீக்கமற நிரம்பி நிற்கிறப் பரம் பொருள், அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. அவரை ஏமாற்ற முடியாது. அவரால்தான் இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் ஒழுங்காக, நியமத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவனே, ஆசாபாசங்களில் மூழ்கி பாவத்தைச் செய்து விடுகிறான். எனவே நாம் செய்த பாவத்திற்குத் தக்க தண்டனை அவர் தருவார் என்று பயப்படுகிறான். உண்மையான பக்தன் கடவுளுக்கு ஏன் பயப்படப் போகிறான் ? பூமி நடுநடுங்க, உக்கிரமான கோபத்துடன், கோர ரூபங் கொண்டு, கர்ஜனை செய்தபடி தூணைப் பிளந்து கொண்டு வந்து, தன் தந்தையின் வயிற்றைக் கிழித்து குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்ட நரசிம்மரைப் பார்த்துப் பிரகலாதன் பயந்தானா ? இல்லையே ?


கடவுளை ''பயக்ருத் பயநாசன'' என்பார்கள். தப்பு செய்தவர்களுக்கு பயங்கரமானவன். நல்லவர்கள் பயத்தைப் போக்குபவன் என்பது இதன் பொருள். கடவுளின் கைகளில் அமைந்த நம் வாழ்க்கை கூட பல நுட்பமான நியமங்களை அனுசரித்தே நடந்து கொண்டு இருக்கிறது. அதில் சில நீதி நெறிமுறைகள், தர்மங்கள் அடங்கியுள்ளன. உடல் ஆரோக்யமாகத் திகழச் சில ஆரோக்யமான வழிமுறைகளைக் கைகொள்வது போல, கடவுளின் கைகளில் வாழ்கிற நாமும், தர்மங்களை, நீதி நெறிமுறைகளைப் பின்பற்றி, உறுதியான நிலைத்த மனம் உடையவர்களாக, உண்மையான மனிதர்களாக இருக்க வேண்டும். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, கொலை செய்யக் கூடாது, தான் வாழப் பிறரைக் கெடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது இப்படிப்பட்ட பல நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். வெறும் பக்தியை மட்டும் வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட நியமங்களைப் பின்பற்றாவிட்டால் தொல்லைகள் நேர்ந்து விடும். தனக்கும், தன்னைச் சேர்ந்த மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் வந்து விடுகிறது.


சொல்லப் போனால் இதைப் பயம் என்று சொல்வதை விட எச்சரிக்கை உணர்வு என்று கொள்ளலாம். தவறு செய்து விடுவோமோ, பொய் சொல்லி விடுவோமோ, கள்ளத்தனம் கொள்வோமோ, வஞ்சனைகள் செய்து விடுவோமோ, கடமைகளைச் சரிவரச் செய்யாமல் விட்டு விடுவேனோ, கொலைக்கு உடந்தையாகி விடுவோமோ என்றெல்லாம் நினைக்கிற பயம் கூட ஒரு எச்சரிக்கை உணர்வுதான். இதனால் தீய வழி செல்லாமல் நாம் தடுக்கப்படுகிறோம். எத்தகைய தவறைச் செய்தாலும், தவறை உணர்ந்து, அதற்காக மனம் வருந்தி, கண்ணீர் மல்கக் கடவுளிடம் முறையிட்டுச் சரணாகதி அடைந்திடும் பொழுது, அவர் அத்தகையோரை நல்லவர்களாக்கும் பொருட்டு தன் அபயக்கரத்தை நீட்டுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கெட்டவன் தன் கெட்ட இயல்பில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. இடைவிடாத முயற்சிக்கும், கடுமையான போராட்டத்திற்கும் பிறகுதான் அது சாத்தியமாகும். அதனால்தான் பக்தி கூட பயத்தோடு கூடியதாக ஆகி விட்டது.


நம்மிடையே வாழும் சில மனிதர்கள் கடவுள் குறித்த மூடத்தனமான பல பயங்களையும் சிறு வயதில் இருந்தே வளர்த்து விடுகிறார்கள். இதனால் வளர வளரப் பல பொருத்தமற்ற கற்பனைகளும் கூடவே வளர்ந்து பயமுறுத்துகின்றன. கடவுளைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. கடவுள் என்பவர் எல்லையற்ற அன்பு உடையவராகவே விளங்குகிறார். கடவுளைப் போல அன்பு உடையவர்கள் வேறு யாரும் இல்லை. கண் முன்னே நிற்கும் மனிதன் கூட நம்மை ஏமாற்றுவான் ஆனால், கடவுள் ஒருபோதும் நம்மை ஏமாற்றமாட்டார். நம்மை விட்டுக் கடவுளால் எங்கும் செல்ல முடியாது. கடவுளை விட்டு நம்மாலும் எங்கும் செல்ல முடியாது. கடவுள் நம்மைத் தன் கைகளில் தாங்குகிறார். நம் இதயத்தையே தன் வீடாகக் கொண்டு வசிக்கிறார். எனவே அவர் காட்டிய நல் வழியில் நடந்து பயமற்றவர்களாக, உண்மையான பக்தனாக வாழ்வது நம் சுயதர்மமாகும். எனவே பயமே பக்தி என்று சொல்வது கடவுளுக்கு விரோதமாகச் செயல்படுவது நல்லதல்ல என்ற எச்சரிக்கை உணர்வையே ஆகும்.


- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment